அறிவுப் புதையலை அள்ளுவோம்!


நமக்கு அருகில் தங்கப்புதையல் கொட்டிக்கிடக்கின்றன என்று நமக்கு தெரிந்தால் நாம் என்ன செய்வோம்! யோசிக்கவே வேண்டாம், உடனடியாக நாம் செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு 'எங்கே புதையல்' என்று ஓடுவோம் அல்லவா அதுபோலவே, ஆனால் அதைவிட பல மடங்கு மதிப்பு மிகுந்ததும், விலைமதிப்பு இல்லாத பொக்கிசங்களான அறிவுப்புதையல் நமது பெரம்பலூரில் கொட்டிக்கிடக்கின்றன. எப்போது நாம் அந்த புதையலை அள்ள ஓடுவது!  

பெரம்பலூரில் 5 வது ஆண்டாக புத்தக கண்காட்சி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 07 வரை நடைபெற்று வருகின்றன. 120 அரங்குகள், 100 க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், அறிவை விசாலமாக்கும் லட்சக்கணக்கான புத்தகங்கள் எங்கும் பரவி கிடக்கின்றன. எந்த புத்தகத்தை எடுப்பது, எதை விடுவது என்பது புரியாமல்; சில நிமிடங்கள் திகைக்க வைத்து விட்டது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான கல்வியை கொடுக்கும் புத்தகங்கள் எண்ணிலடங்காமல் குவிந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழாவில் குழுமுவதுபோல குழுமுகிறார்கள். பல்வேறு தரப்பட்ட மக்களை இணைக்கும் அறிவுத் திருவிழாவாக தற்போது காட்சியளிக்கிறது பெரம்பலூர்.

இந்த திருவிழாவில் நாம் நம் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். எங்கும் பரவி கிடக்கும் அறிவு புதையலை அள்ளிக்கொண்டு, ஒவ்வொருவரும் தமது இல்லங்களில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்க வேண்டும். அதுதான் நமது வாழ்வை உயர்த்தும். நமது வாழ்வில் எவ்வளவு துன்பம் ஏற்பட்டாலும் புத்தகங்களை எடுத்து புரட்டும்போது நமது கவலைகளை மறந்து, வேறு உலகிற்கு நாம் சென்றுவிடுவோம்.  

கையில் சிறு காகிதம் கிடைத்தால்கூட அதில் என்ன எழுதிருக்கிறது என்று படித்து விடுவார் அறிஞர் அண்ணா. நூலகத்திற்கு முதல் ஆளாக உள்ளே நுழைந்தால் கடைசி ஆளாகத்தான் வெளியே வருவார். அந்த அளவிற்கு நூலகத்தில் புத்தகங்களை படித்து தனது வாழ்வை மேம்படுத்திக்கொண்டது மட்டுமல்ல அனைவரையும் வசப்படுத்திக்கொண்டார். தனது அறிவை பன்மடங்கு அவர் நூலகத்தில் தான் பெருக்கி கொண்டார். குறிப்பு இல்லாமல் எந்த தலைப்பிலும் பேச சொன்னால் சளைக்காமல் பேசுவார். அதனால்தான் அவரை 'அறிஞர் அண்ணா' என்றும், 'தென்னாட்டின் பெர்னாட்ஷா' என்றும் அழைக்கிறார்கள். 

அதேபோல தனது படிப்பிற்காக லண்டன் சென்றபோது எங்கே உங்களுக்கு ரூம் வேண்டும் என்று கேட்கப்பட்டபோது "காரல் மார்க்ஸ் படித்த நூலகத்திற்கு அருகில் சிறு அறை இருந்தால் கூட போதும்" என்று விடையளித்தார் புரட்சியாளர். அம்பேத்கர் அவர்கள். அங்குதான் பல நேரங்களை செலவு செய்தார். இதுபோல பல அறிஞர் பெருமக்களும் புத்தகத்தின் மூலமும், நூலகத்தின் மூலமும்தான் உயர்வு பெற்றார்கள். 

"வீட்டில் ஒரு நூலகம் அமையும் காலமே அறிவின் பொற்காலம்" என்கிறார் ஒரு அறிஞர். நமது வீட்டில் சிறு நூலகத்தை அமைத்து நமது பிள்ளைகளின் சிறு வயது முதலே வாசிப்பு பழக்கத்தை தூண்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல் நம் வீட்டில் இருக்கும் அனைவரையும் வாசிக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும். அது சாத்தியமாகி விட்டால். அதுவே அறிவின் பொற்காலமாக இருக்கும். அதற்கு நாம் இப்போதே தயார் படுத்திக்கொள்ள சரியான வாய்ப்புதான் பெரம்பலூர் புத்தக கண்காட்சி.

அறிவுப்புதையலை அள்ள,
வாருங்கள் பெரம்பலூருக்கு!!

- வி.களத்தூர் சனாபாரூக்
அறிவுப் புதையலை அள்ளுவோம்! அறிவுப் புதையலை அள்ளுவோம்! Reviewed by நமதூர் செய்திகள் on 06:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.