மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீடு கிடைப்பதில்லை - கருணாநிதி

சென்னை: மண்டல கமிஷன் பரிந்துரைகள்படி மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடுகள் செய்யப்படுவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் 9 துறைகளில் பணியாற்றுவோரைப் பொறுத்து அந்த விவரங்கள்படி ஓ.பி.சி. வகுப்பினருக்கு, குரூப்-ஏ பணிகளில் 12 சதவிகித அளவுக்கும், குரூப்-பி பணிகளில் 7 சதவிகித அளவுக்கும், குரூப்-சி பணிகளில் 17 சதவிகித அளவுக்கும், குரூப்-டி பணிகளில் 16 சதவிகித அளவுக்கும் என ஒட்டுமொத்தமாக 11 சதவிகிதம் பேர்தான் பணியாற்றுகிறார்கள். 

தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்தவரையில் குரூப்-ஏ பணிகளில் 13 சதவிகித அளவுக்கும், குரூப்-பி பணிகளில் 15 சதவிகித அளவுக்கும், குரூப்-சி பணிகளில் 20 சதவிகித அளவுக்கும், குரூப்-டி பணிகளில் 29 சதவிகித அளவுக்கும் என ஒட்டுமொத்தமாக 17 சதவிகிதம் பேர் பணியாற்றுகிறார்கள். பொதுப்பிரிவினரைப் பொறுத்தவரையில், குரூப்-ஏ பணிகளில் 69 சதவிகித அளவுக்கும், குரூப்-பி பணிகளில் 71 சதவிகித அளவுக்கும், குரூப்-சி பணிகளில் 57 சதவிகித அளவுக்கும், குரூப்-டி பணிகளில் 44 சதவிகித அளவுக்கும் என ஒட்டு மொத்தமாக 65 சதவிகிதம் பேர் பணியாற்றுகிறார்கள். 

மத்திய அரசுத் துறைகளில், முன்னேறிய சமுதாயத்தினர் மேலும் முன்னேறுவதற்கும், பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் மேலும் பின்னடைவைச் சந்திப்பதற்கும், ஜனநாயகத்தில் ஆதிக்கபுரியினர் எப்படியெல்லாம் வஞ்சக வலை விரித்து, பலர் தாழவும், சிலர் வாழவும் வழி வகுத்து வருகிறார்கள் என்பதையே இந்தத் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீடு கிடைப்பதில்லை - கருணாநிதி மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீடு கிடைப்பதில்லை - கருணாநிதி Reviewed by நமதூர் செய்திகள் on 00:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.