போபால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டோர் சிமி தீவிரவாதிகளா? அப்பாவிகளா?: அ. மார்க்ஸ் கேள்வி
சென்னை: போபால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பேரும் சிமி தீவிரவாதிகள்தானா? அல்லது அப்பாவி முஸ்லிம் இளைஞர்களா? என்று மனித உரிமைகள் ஆர்வலர் பேராசிரியர் அ. மார்க்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். போபால் என்கவுண்ட்டர் குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அ.மார்க்ஸ் எழுதியுள்ளதாவது:
போபால் என்கவுன்டர் படுகொலை போலி என்பதற்கான நிரூபணங்கள் வெளியாகியுள்ளன.
காலையில் இந்தச் செய்தி கேள்விப்பட்ட போதே நாம் மனதிற்குள் உணர்ந்ததுதான். எனினும் முழு ஆதாரங்களும் இல்லாமல் எதையும் சொல்ல வேண்டாம் என்பதற்காகவே முழுச் செய்திகளும் வரட்டும் எனச் சொல்லியிருந்தேன். இப்போது முழுச் செய்திகளும் வரத் தொடங்கிவிட்டன. ம.பி அமைச்சர் முஸ்லிம் இளைஞர்கள் கையில் துப்பாக்கி முதலான ஆயுதங்கள் ஏதும் இல்லை என்பதைச் சொல்லி விட்டார். ஆனால் களத்தில் இறக்கிவிடப்பட்ட காவல்துறை அதிகாரியோ, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால்தான் என்கவுன்டர் செய்தோம் என்கிறார். வெளியாகியுள்ள வீடியோக்களில் அந்த இளைஞர்களிடம் துப்பாக்கி ஏதும் இல்லை. அவர்கள் அடிபட்டு வீழ்ந்த பின்னும் அவர்கள் சுடப்படுகிறார்கள். ஆக இப்போது அரசுத்தரப்பில் சொல்லப்பட்ட எல்லாமே ஐயத்திற்குள்ளாகியுள்ளது.
காவலர் ஒருவர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே அந்தக் காவலரைக் கொன்றது யார் என்பதெல்லாம் கூட இப்போது விசாரிக்கப்பட வேண்டிய தகவல்களாகிவிட்டன. கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் உண்மையிலேயே அவர்கள் சொல்கிற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்தானா என்பதெல்லாமும் இப்போது ஐயத்திற்குள்ளாகியுள்ளன. இத்தகைய நிகழ்ச்சிகள் இப்போது தொடர்கதையாகி விட்டன, இரண்டாண்டுகள் முன் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட 5 முஸ்லிம் இளைஞர்கள் இப்படித்தான் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் வைத்துக் கொல்லப்பட்டனர். நாங்கள் சென்று விசாரித்தபோது அது ஒரு படுகொலை என்பது தெரிந்தது. சிறையிலிருந்து விலங்கிட்டுக் கொண்டுவரப்பட்டவர்கள் ஆயுதம் தாங்கிய படையினரைக் கொல்ல முயன்றார்களாம். இவர்கள் அவர்களைக் கொன்றார்களாம்.
இந்த நாட்டின் நீதிமுறையில் மக்களில் ஒரு பிரிவினருக்கு நம்பிக்கை இல்லாமல் போவது இந்த ஜனநாயகத்திற்குக் கேடு என்பது குறித்து ஆட்சியாளர்களுக்குக் கிஞ்சித்தும் கவலை இல்லை. ஏனெனில் அவர்களே ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். இது தொடர்பான எனது முந்தைய பதிவில் வந்துள்ள பின்னூட்டங்களை ஒருமுறை படித்துப்பாருங்கள். இந்த அரசை ஆதரிப்பவர்களுக்கும் தெரிகிறது இது ஒரு போலி என்கவுன்டர், இது ஒரு படுகொலை என்பது. ஆனால் அவர்கள் அத்தகைய படுகொலை, போலி என்கவுன்டர் நியாயம் என்கிறார்கள். இவர்கள் இப்படித்தான் தீர்த்துக்கட்டப்பட வேண்டும் என்கிறார்கள். இப்படியான ஒரு வெறித்தனமான மக்கள் கூட்டத்தை இன்று இந்துத்துவவாதிகள் உருவாக்கி வருவதுதான் மிக மிக அச்சத்திற்கும் கவலைக்கும் உரியதாக உள்ளது.
இவ்வாறு அ. மார்க்ஸ் கூறியுள்ளார்.
போபால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டோர் சிமி தீவிரவாதிகளா? அப்பாவிகளா?: அ. மார்க்ஸ் கேள்வி
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:00:00
Rating:
No comments: