மூடி மறைக்கிறார் மோடி: வங்கி ஊழியர் சம்மேளனம்!


ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியின் திட்டத்தில் பல உள்நோக்கங்கள் இருக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம். இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழகப் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையால், சாதாரண மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல். பணத்தை மாற்றுவதற்காக வந்தவர்களில் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களை போலவே வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 12 முதல் 14 மணி நேரம் ஓய்வில்லாமல் வேலை செய்கின்றனர். இந்நிலை எப்போது மாறுமோ? என்ற ஏங்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. புதிய ரூ.500 நோட்டு வந்துவிட்டது என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சேலத்தில் தனியார் வங்கி ஒன்றை தவிர மற்ற இடங்களில் இதுவரை புதிய ரூ.500 நோட்டு வரவில்லை. மராட்டியம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாவட்டங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. இந்த நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் மூன்று ‘ஷிப்ட்’ அடிப்படையில் 24 மணி நேரமும் அச்சடிக்கப்பட்டால்கூட முழுமையாக ரூபாய் நோட்டுக்கள் மக்களுடைய புழக்கத்துக்கு வர குறைந்தது ஐந்து அல்லது ஆறு மாத காலம் ஆகும். இதை வைத்து பார்க்கும்போது நமக்கு தேவையான புதிய ரூ.500 நோட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில்தான் கிடைக்கும் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை மக்களிடம் சொல்லவில்லை. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மூடி மறைக்கிறது. அவர்கள் தேவையான நோட்டுகள் கையிருப்பில் உள்ளது என்று மாயையான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வங்கி ஊழியர்களையும், பொதுமக்களையும் நேர் எதிரே நிறுத்தும் மோசமான முயற்சியை செய்ய பார்க்கிறார்கள். 258 பிக் பஜார்களில் ரூ.2,000 வரை நோட்டுகள் சப்ளை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த பணம் எங்கிருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி அவர்களுக்கு ‘லைசென்ஸ்’ கொடுத்து விட்டார்களா? இதே அறிவிப்பை எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல்., ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செய்யலாமே? இது எந்த உள்நோக்கத்துக்காக செய்யப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. கறுப்புப் பணத்தின் உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளாமல் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு எவ்வித பலனும் தராது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கள்ளப் பணத்தை ஒழித்துவிடும் என்று நிதி அமைச்சகம் கூறுகிறது. சிறிய புலனாய்வு நிறுவனத்தின் சார்பில் இந்திய புள்ளியியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, மொத்த பணத்தில் கறுப்புப் பணம் என்பது ரூ.400 கோடி தான். அதாவது செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகளின் மொத்த மதிப்பான ரூ.14,18,000 ஆயிரம் கோடி மதிப்பில் இது வெறும் 0.028 சதவீதம் மட்டும் தான். வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்று புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் பணி மட்டும் தான் நடைபெற்று வருகிறது. இதனால் மூன்றாவது காலாண்டில் வங்கிகள் அனைத்தும் கடுமையான நஷ்டத்தை சந்திக்கும். இதை ஒரு காரணமாக வைத்து பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்யும். கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வர இந்த அரசாங்கத்துக்கு எந்த அரசியல் உறுதியும் இல்லை. உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று இந்த அரசாங்கத்தின் முடிவு கறுப்புப் பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிப்பதற்காகத்தான் என்று நம்புவது கடினமாக உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்
மூடி மறைக்கிறார் மோடி: வங்கி ஊழியர் சம்மேளனம்! மூடி மறைக்கிறார் மோடி: வங்கி ஊழியர் சம்மேளனம்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:36:00 Rating: 5

No comments:

Powered by Blogger.