கல்வி கொள்கைக்கு எதிராக டெல்லியில் பெரியார் தி.க!
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக டெல்லியில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய கல்வி கொள்கை என்ற பெயரில், மக்களின் கல்வியைப் பறிக்கும் கொள்கை திட்டத்தை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக டெல்லியில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் டி.ராஜா, மத்தியப்பிரதேச காங்கிரஸ் முதல்வர் சிவராஜ் சிங், கனிமொழி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
கல்வியை அடிப்படை உரிமங்களில் ஒன்றாக கொண்டு வருவதற்காக போராடியவர்களில் ஒருவரான அம்பரிஸ் சாய் பேசுகையில், “கல்வி கொள்கை குறித்த கோத்தாரி ஆணையம் குறிப்பிட்டபடி பல்வேறு இனம், மொழி, சமயம், கலாச்சாரம் கொண்ட நாட்டில் கல்வி என்பது ஒருங்கிணைப்பு கருவியாக இருக்க வேண்டும். இதை யாரும் சீர்குலைத்திட கூடாது. தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி கொள்கையால் பல சீர்குலைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதில், பாடத்திட்டத்துக்கும், பாடம் கற்பிக்கும் முறையிலும் பல சீர்குலைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே இந்த அரசு ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஒப்பந்த தொழிலாளர்கள் அல்லது கூலி தொழிலாளர்களை போல் நடத்தி வருகிறது. இந்த புதிய கல்விகொள்கையில் இரண்டு வகையான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஏழை எளியோர், வசதியற்றவர்கள் கற்கும் வகையிலான மிகவும் மோசமான கல்வி, வசதியுடையவர்கள், பெரும் பணக்காரர்கள் கற்கும் வகையில் வசதியான கல்வி என பிரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முரண்பாடு கொண்டதாகும். இந்திய சாசன நெறிமுறைக்கு முரண்பாடானது. அடிப்படை கல்வியை தகர்த்தெறிய கூடியது. எனவே இந்த புதிய கல்வி கொள்கையை தூக்கி எறிய வேண்டும்” என்றார்.
மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மகளிர் அணி தலைவருமான கனிமொழி ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது, “பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு புதிய கல்வி கொள்கை என்ற திட்டத்தின் மூலமாக நச்சு விதைகளை இளம் பிஞ்சுகளின் மனதில் பதிய வைக்கும் செயலை செய்து வருகிறது. சிறு வயதில் பதிய படும் இத்தகைய நஞ்சு எண்ணம் அவர்களது மனதில் நீங்காதவண்ணம் ஆழமாக பதிந்து விடும். சமுகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த செயலை கண்டிப்பதற்காக தமிழகத்தில் இருந்து டெல்லி வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என்றால் தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தின் வழிவந்த கருத்துகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் சாதியை ஒழிப்பதற்காகத்தான் தந்தை பெரியார் சுய மரியாதை இயக்கத்தை தொடங்கி நடத்தினார். எந்த வீட்டு பிள்ளைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டதோ, அந்த வீட்டு பிள்ளைகள் இன்று கல்வி கற்று நல்ல நிலையில் உள்ளதை தமிழகத்தில் காண முடிகிறது. அதை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது. கல்வி என்பது வெறுமனே தேர்வை மட்டுமே வைத்து பார்த்து சேர்ப்பது அல்ல. இவர்கள் புதிய கல்வி கொள்கை வகுக்கும்போது யாரை வைத்து குழுவில் விவாதம் செய்தார்கள்? கல்வியாளர்கள், அறிஞர்கள் போன்றோர் கலந்து கொண்டனரா? மதகுருமார்களின் ஆலோசனையின்படி கல்வி கொள்கை வகுக்கப்படுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் நலனுக்காக சில குறிப்பிட்ட பள்ளிகளில் போதிய மாணவர்கள் இல்லை என்றாலும் அவர்களுக்கும் கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் கல்வி நிலையங்களை இந்த புதிய திட்டத்தின் மூலமாக மூடப்படும் அபாயம் உள்ளது. இவர்கள் 100, 200 வருடங்களுக்கு பின்னோக்கி செல்கின்றனர். நாடு முழுவதும் ஒரே கல்வி என்கிறீர்கள். யாருக்கு எது வேண்டுமோ, அதன் தேவையறிந்து கொடுத்தால் மட்டுமே எல்லோர்க்கும் சம கல்வி கிட்டும். இல்லையென்றால், வசதி படைத்தவர்கள் மட்டுமே கல்வியறிவு பெறமுடியும். இது கிட்டத்தட்ட குலகல்வி திட்டத்தை போன்ற செயலாகும்” என்ற அவர், “குலகல்வி கொண்டுவந்த முதல் அமைச்சரையே தூக்கி எறிந்தது தமிழ்நாடாகும்” என்றும் அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராஜா பேசுகையில், “புதிய கல்வி கொள்கையால், இந்த அரசு தனது மதவாத கொள்கையை திணிக்க பார்க்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில், மத்திய அரசின் பொது மக்கள் விரோத நடவடிக்கையால் நாடாளுமன்றமே ஸ்தம்பித்து உள்ளது. இந்நிலையில், புதிய கல்வி கொள்கை மூலமாக வசதி படைத்தவர்கள் மட்டுமே நல்ல கல்வியை கற்கும் நிலையை உருவாகியுள்ளது ஏற்புடையதல்ல” என்று அவர் பேசினார்.
மத்தியப்பிரதேச காங்கிரஸ் முதல்வர் சிவராஜ் சிங் பேசுகையில், “பாஜக-வின் புதிய கல்வி கொள்கையால், நாட்டில் அனைவருக்கும் சம உரிமை கல்வி என்பதை சிதைத்து பணம் படைத்தவர்களுக்கே கல்வி என்ற நிலையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்களுக்கு சம கல்வி உரிமை என்பது மறுக்கப்படும். அதனால், அனைவருக்கும் அடிப்படை கல்வி உரிமை என்பது பாதிக்கப்படும். இதை முளையிலேயே கிள்ளியெறிய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
கல்வி கொள்கைக்கு எதிராக டெல்லியில் பெரியார் தி.க!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:40:00
Rating:
No comments: