காந்தி கொல்லப்பட்டதற்கான காரணமும், பேசப்படாத வரலாறுகளும் - அபூ சித்திக்
காந்தியின் வரலாறு இன்றளவிலும் பல கருத்து முரண்பாடுகளை சுமந்து கொண்டே தான் கூறப்பட்டு வருகிறது. காந்தியின் சில பக்கங்கள் இன்றும் அலசப்படாமல் இருக்கின்றது.
காந்தியை ஆன்மீகவாதியாக, அரசியல் நிபுணராக, அகிம்சையின் வடிவமாக பொதுவாகக் காட்டினாலும் அதற்குப் பின்னால் பேசப்படாத வரலாறுகளும் உண்டு.
கோட்சேக்களின் பார்வை
'காந்தி இந்து- முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்தினார். காந்தியின் இந்த செயலால் இந்துக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இதனால் இந்த இந்திய தேசத்திற்காக காந்தியைக் கொன்றேன்' என்பது கோட்சேவின் நேரடி வாதமாகவும், கோட்சேவின் அடிவருடியைச் சார்ந்துள்ள இயக்கங்களும், கட்சிகளும் வைக்கும் மறைமுக வாதமாகவும் இருக்கின்றன.
2000ம் ஆண்டு வெளியான டைம் பத்திரிக்கையின் சார்பாக நாதுராம் கோட்சேவின் சகோதரன் கோபால் கோட்சேவிடம் "ஏன் காந்தியைக் கொன்றீர்கள்?" எனக் கேட்டபோது "காந்தி ஒரு கபடதாரி, முஸ்லிம்கள் இந்துக்களை கொலை செய்யும் போதும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். எவ்வளவு இந்துக்கள் கொல்லப்பட்டனரோ, அவ்வளவு உயரம் அவரது மதச்சார்பின்மை கொடி பறந்தது." என்றார். இதுவெல்லாம் காந்தியைக் கொன்றதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்.
காந்தி யார்?
தென்னாப்பிரிக்கவில் சட்டப்பணி செய்து திரும்பிய காந்தி, கோபால கிருஷ்ண கோகுலே வழியாக இந்திய அரசியலில் ஈடுபட்டார். காந்தி அவர்கள் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டங்களிலும் பகவத் கீதை வசனங்களைக் கூற எப்போதும் தவறியதில்லை. முழு ஆன்மீகவாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இருந்தாலும் சங்கர மடங்களிலிருந்து சில கொள்கைகளை விலக்கிக் கொண்டு இந்து மதத்தை சீர்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.
குழந்தைத் திருமணம் எதிர்ப்பு, மறுமணம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஹரிஜன் என்ற பெயரை ஏற்படுத்தி அவர்களை முன்னேற்ற ஊக்குவித்தார். உடன்கட்டை முறைகள் எனும் மூடத்தனமாக இந்து மதத்தின் பெயரில் நடந்த கொடுமைகளை வெளிப்படையாக எதிர்த்தார். இதுவெல்லாம் போக அகிம்சை முறையில் இந்தியாவின் சுதந்திரத்திற்கு போராட்டங்கள் வாயிலாக முயற்சித்தார்.
இறுதியில் பிரிவினையை எதிர்ப்பதாக அறிவித்து, இந்தியாவின் ஆசிரமங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஆசிரம பஜனைகளுடன் தன் எல்லையை அதிகப்படுத்திக் கொண்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அரசியல் ரீதியாக காந்திக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் சென்றது. பின்பு, 1948ல் காந்தியை கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சுட்டுக் கொன்றான்.
முரண்பாடுகளும் காந்தியும்
காந்தியின் வரலாற்றை ஆய்வு நூலாக எழுதிய பலரும் சில முரண்பாடுகளை சுட்டிக் காட்டுகிறார்கள். சில இன்னும் கூட பேசப்படாதவைகளாக இருக்கின்றன. முரண்களில் முக்கியமானதாக, கராச்சியில் 1931ம் ஆண்டு நடக்கவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்பே பகத்சிங் தூக்கிலிடப்பட இருக்கும் போது காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் காந்தி இதைப் பற்றி சரியான முடிவு எடுக்கவில்லை. அதற்கு பிற்காலத்தில் அரசியல் காரணங்கள் எல்லாம் சொல்லி மழுப்பப்பட்டது.
இன்று வரை காந்தி எனும் மாமனிதரின் வரலாற்றுப் பக்கத்தில் அதிகம் பேசப்படாததாக உள்ள விடயங்கள்.
1) அகிம்சையை மட்டும் விரும்பிய காந்தி இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனுக்கு ஆதரவாக இந்திய ராணுவத்தை அனுப்ப வழிமொழிந்தார். அகிம்சையை விரும்பிய காந்தி இந்திய சுதந்திரத்திற்கே ஆயுதம் வேண்டாமென்றவர் பிரிட்டனின் போர் நடவடிக்கைக்கு உதவியது ஏன்?
2) இரண்டாம் உலகப் போரின் முடிவே பாலஸ்தீனம் அழிக்கப்பட்டு, இஸ்ரேல் உருவாக்கப்பட காரணமாக அமையும் என்று காந்திக்கு தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் பிரிட்டனுக்கு ஆதரவாக இந்திய ராணுவத்தை அனுப்பி விட்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தன்னுடைய பத்திரிக்கையில் எழுதியது ஏன்?
3) காந்தி இருக்கும் காலத்திலேயே காஷ்மீர் பிரச்சனையாக்கப்பட்டு விட்டது.அப்படியென்றால் காஷ்மீரின் நிலைப்பாட்டில் காந்தியின் முடிவு என்ன?
4) ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பிய காந்தி, பிரிவினை ஏற்படும் போது ஏன் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் போல எந்தவொரு பெரிய போராட்டத்தையும் அறிவிக்கவில்லை?.
இதுவெல்லாம் பேசப்பட வேண்டிய வரலாறுகள். ஆனால் பேசப்படாமலேயே காலங்கள் ஓடி விட்டன. இனிமேலாவது விடைகளைத் தேட முயற்சிப்போம்.
காந்தி கொல்லப்பட்டதற்கான காரணம்
காந்தியைக் கொன்றதற்கான காரணமாக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களான கோட்சேக்கள் கூறும் கருத்து முற்றிலும் கற்பனையாகவே இருக்கிறது. காந்தி வெளிப்படையாக இந்து மத சீரமைப்பு என்ற பெயரில் மனுசாஸ்திரங்களை மீறினார் என்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பழக்கத்தை மக்களிடம் விரிவுபடுத்தினார் என்பதற்காகவே கொல்லப்பட்டார் என்பதே சரியாக இருக்கும். அவர்களின் கூற்றுப்படியே இந்து மதத்திற்காக கொலை செய்தார்கள் என்று கருதினால், காந்தியை விட இந்து மதத்தை பிரபலப்படுத்தியவர்கள் யாரும் இல்லை. காந்தியின் விளைவாகவே கொத்துக் கொத்தாக மதம் மாறியவர்கள் இந்து மதத்தில் நிலைக்க ஆரம்பித்தனர். அன்று இந்து மதத்தை காத்தவரே காந்தி என்றும் சொல்லலாம்.
ஆனால் காந்தியின் சில செயல்பாடுகள் அன்றைய தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்த கோல்வார்க்கரை எரிச்சலூட்டியது. தீண்டாமை ஒழிப்பு என்ற பெயரில் காந்தி எழுப்பிய போராட்டம், குழந்தைத் திருமணம், உடன்கட்டை பழக்கம் என இந்து மதப் பெயரில் நடந்த சம்பவங்களை காந்தி எதிர்த்தது கோல்வார்க்கரையும், அவருக்குக் கீழ் இருந்த கோட்சேக்களையும் அதிக கோபமடையச் செய்தது.
சிறைக்குச் சென்ற காந்தி அங்கு மாற்று மதங்களின் புத்தகங்களைப் படித்து விட்டு வெளியே வந்த போது அம்மதங்களைப் புகழ்ந்து பேசியது இன்னும் எரிச்சலூட்டி இருக்கக் கூடும்.
ஒரு முறை தனது ஆசிரமத்தில் நோய்வாய்ப்பட்டு இருந்த ஒரு கன்றுக்குட்டியை அது துன்பப்படுவதை பார்க்க முடியாமல் கொல்லச் சொல்லி உத்தரவிட்டார் காந்தி. பசுவைக் கொல்வது பாவம், அதனால் காந்தியை அனைவரும் பாவி என்றார்கள். (இன்றே கொலை செய்கிறார்கள் என்றால் 70 வருடத்திற்கு முன் சொல்லவா வேண்டும்)
மறுமணத்தின் கட்டாயத்தைப் பற்றி காந்தி பேசியது முற்றிலும் மனுசாஸ்திரங்களுக்கும், வேதங்களுக்கும் மாறானதாக இருந்தது. இந்தக் காரணங்களே காந்தியைக் கொல்வதற்கு கோட்சேக்கு போதுமானதாக இருந்திருக்கக் கூடும்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் முஸ்லிம் அடையாளத்துடன் காந்தியைக் கொன்றுவிட்டால், வேதங்களை மறுத்து வந்த காந்தியின் முடிவும் ஏற்படும்; இஸ்லாமியர்களையும் கலவரங்கள் பெயரில் இல்லாமல் ஆக்க முடியும் என திட்டம் தீட்டினார்கள். ஆனால் முதாலவது மட்டும் நடந்தது. இரண்டாவது திட்டம் பலிக்கவில்லை.
காந்தி எனும் மகாத்மா மனுசாஸ்திரங்களை மீறியதால் கோட்சேவால் இறுதியாகக் கொல்லப்பட்டு காந்தியின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது.
- அபூ சித்திக்
காந்தி கொல்லப்பட்டதற்கான காரணமும், பேசப்படாத வரலாறுகளும் - அபூ சித்திக்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:18:00
Rating:
No comments: