மருத்துவர்களின் தேவையும், அரசின் அலட்சியமும் - அபூ சித்திக்
1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டுமென்பது உலக சுகாதார நிறுவனத்தின் வலியுறுத்தல்! ஆனால் இந்தியாவில் 7000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் மட்டுமே என்பது தற்போதைய நிலை.
இந்தியாவில் 400 மருத்துவக் கல்லூரிகளின் மூலம் தோராயமாக ஆண்டுக்கு 50,000 மாணவர்கள் மருத்துவர்களாக வெளியேறுகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை வெறும் 19,000 மட்டுமே.
இந்தியாவில் ஒரு வருடத்திற்கு மிகச்சிறு குறிப்பிட்ட தொகையுள்ள மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பு படிக்க முடியும். ஆனால் இது அமெரிக்காவைப் பொருத்தவரை பன்மடங்கு அதிகம். ரஷ்யா,கொலம்பியா என குறிப்பிட்ட நாடுகளில் இந்த வீதம் இன்னும் அதிகம்.
அமெரிக்காவின் மருத்துவ சேர்க்கையில் கிட்டத்தட்ட 50% இடம் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது. இதில் இந்தியர்களும் கணிசமானவர்கள். இதே முறை பலநாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.
வெளிநாட்டுக்கு மருத்துவப் படிப்பு படிக்க சென்றவர்களில் 90% பேர் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருவதில்லை. காரணம், அந்த நாடுகளில் கொடுக்கப்படும் அதிகப்படியான சலுகைகள். சலுகைக்குக் காரணம், அந்த நாட்டில் உள்ள மருத்துவர்களின் தேவை.
இந்தத் தேவையைக் காட்டியே ஒவ்வொரு வருடமும் மருத்துவப் படிப்புக்கு ஆசையா! கவலையே வேண்டாம், குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என ஒரு குழு கிளம்புகிறது.
7000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையில் உள்ள இந்திய மருத்துவர்களின் நிலை என்ன தெரியுமா? கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் மரணமடைந்த மருத்துவர்களில் 20 பேருக்கு 15 பேர் நடுத்தர வயதினர்கள். இவர்கள் மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு. (தி இந்து 22/02/17)
மன அழுத்தம் தான் மாரடைப்புக்கு காரணம் என சொல்லும் மருத்துவர்களையே மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது இன்றைய சூழ்நிலை.
பத்து ஆண்டுக்கு முன்னால், ஆப்ரேசனக்கு இதுதான் நேரம் என்று மருத்துவர்கள் குறிப்பார்கள். தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இவ்வளவு நாள் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். மருத்துவரின் சொல்லைக் கேட்டு அமைதியாக இருந்திருப்போம். ஆனால் இன்று! நான் கொடுக்கும் பணம் அதிகம், அதனால் எனது சிகிச்சைகள் விரைவில் முடிய வேண்டும் என மருத்துவர்களை அதிகாரம் செய்யும் போக்கு மக்களிடமும், இன்றுக்குள் மூன்று ஆபரேஷனை முடிக்க வேண்டும் என்ற கார்ப்பரேட் வியாபாரத்தின் டார்கெட்டுகளிலும் மருத்துவர்கள் சிக்கித் திணறுகிறார்கள்.
மாற்ற வேண்டிய முறைகளும், முன்னேற்ற வேண்டிய துறைகளும் ஆயிரம் உள்ளது. ஆனால் அதிலில்லாத அரசின் கவனங்கள் மக்களின் நாளைய வாழ்வைப் பறிக்கும் அநியாய டெக்னாலஜிகளிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறது.
- அபூ சித்திக்
மருத்துவர்களின் தேவையும், அரசின் அலட்சியமும் - அபூ சித்திக்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:14:00
Rating:
No comments: