OPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும் - சி.மதிவாணன்


jayalalitha OPS
அரசியல் கொள்ளையர்களின் வெறியாசை
தமிழகம் பரபரப்பாக இருக்கிறது. என்ன நடக்கும் என்று பெட்டிக்கடையில் கூட விவாதம் நடக்கிறது. ஆனால், பெரும்பான்மை விவாதங்கள் கோபத்தின் பிரதிபலிப்பாக இருக்கின்றன. வறட்சி, விவசாயிகள் தற்கொலை, வேலைவாய்ப்பு சரிவு, மான்யங்கள் வெட்டு, பணப் புழக்கச் சிக்கல் என்று மக்கள் அல்லாடிக் கொண்டிருக்க, கோடிகளைக் கொட்டி மீன் பிடிக்கும் வேலையில் OPSம், சசியும் இருக்கிறார்கள்.
இன்று The Hindu ஆங்கில நாளிதழில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எழுதியுள்ள Temptation of spoils (அரசியல் கொள்ளையர்களின் வெறியாசை) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் உள்ள விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 17- 18 ஆம் நூற்றாண்டுகளில் அரசுப் பதவிகளைப் பெற போட்டியிருந்தது. கொள்ளையடிக்க எளிய வழி அது. இதனால், அரசு நிர்வாகம் சீரழிந்தது. பின்னர், அதனை சரிசெய்ய உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2. இந்தியாவின் அரசியல் சட்டம் அரசுப் பணியிடங்களில் நுழைபவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக சட்ட வாசகம் 320ஐ உருவாக்கி மத்திய மற்றும் மாநில சர்வீஸ் கமிஷன்களை ஏற்படுத்துவதற்கு வழி ஏற்படுத்தியது.
3. இப்படி உருவாக்கப்பட்ட, அதாவது, அரசுப் பணியாளர்களாக இருப்பவர்கள் கொள்ளையடிப்பதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட, அரசியல் சட்டத்தின் அதிகாரம் பெற்ற அமைப்புகளான சர்வீஸ் கமிஷன்களைப் பயன்படுத்தி அகில இந்திய/ மாநில அரசியல்வாதிகள் ஊழல் செய்து வருகிறார்கள்.
4. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியின் போது மாநில சர்வீஸ் கமிஷனுக்கு அரசு மேற்கொண்ட 11 நியமனங்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அவர்களுக்குத் தகுதி இல்லை என்று சொன்னது.
5. அந்த 11 பேரில் சிலர், மாவட்ட நீதிபதிகளாக இருந்து ஓய்வுபெற்றவர்கள். அவர்களின் பணி நடத்தை முறையில்லை என்று சொல்லி அவர்களுக்கு பணி நீட்டிப்பு கொடுக்க (முன்னதாக) உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. அப்படியான ஊழல் நபர்களை, ஊழலை முளையிலேயே கிள்ளுவதற்கான சர்வீஸ் கமிஷனுக்கு நியமித்திருந்தது ஜெ அரசு.
6. மாநில நுகர்வோர் அமைப்பு தலைவர் பொறுப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை ஜெ அரசு நியமனம் செய்தது. அந்த நியமனத்தை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புக்கொள்ளவில்லை. வேறு வழியின்றி வேறொருவரை நியமனம் செய்ய வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது.
7. தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்புக்கு தலைவராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். Commission for Protection of Child Rights Act சட்டப் பிரிவு 17ல் அந்தத் தலைவருக்கான தகுதிகள் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தத் தகுதி எதுவும் அம்மணிக்கு இல்லை. அதனால், அந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்து விட்டது. வேறுவழியின்றி கல்யாணி நியமனத்தை அரசு திரும்பப் பெற்றது.
8.இவையெல்லாம் கூட்டுக் கொள்ளை (system of spoils-sharing) முயற்சிகள் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தன் கட்டுரையை முடிக்கிறார். (சந்துருவின் கட்டுரையைப் படிக்கhttp://www.thehindu.com/todays-paper/tp-opinion/Temptation-of-spoils/article17265532.ece)
ஆனால், சொல்வதற்கு மேலும் விஷயங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு UGC நிதியளிக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தருக்கான தகுதிகள் என்று சிலவற்றை UGC குறிப்பிட்டுள்ளது. அந்த தகுதிகளைப் பார்க்காமல் அரசியல்வாதிகளின் உறவினர்களை நியமனம் செய்வது தமிழ்நாட்டில் கழகக் கட்சிகளின் மரபாக இருந்தது. கருணாநிதியின் உறவினர், அதிமுகவின் பி.எச்.பாண்டியன் மனைவி, நெடுஞ்செழியனின் மருமகள் கல்யாணி மதிவாணன் என்று ஒரு பெரிய கொள்ளைக் கூட்டமே பல்கலைக்கழகங்களைக் கொள்ளையிட்டு சீர்குலைத்தன, உயர் கல்வியைப் பாழ்படுத்தின.
sasikala and ops
உதாரணமாக, கல்யாணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் து.வே ஆனபோது, அவர் ஜெவுக்கு 8 கோடி கொடுத்திருக்கிறார். அவர் பதவிக் காலத்தில் அவர் மீது கொலை முயற்சி, அட்டவணைச் சாதியினரை வன்கொடுமைக்கு ஆளாக்குவது உள்ளிட்ட வழக்குகள் பதிவாகின; பற்பல ஊழல்கள் வெளிவந்தன. மாணவர்- ஆசிரியர் போராட்டம் வெடித்தது. பல்கலைக்கழகம் உருவாகி 58 ஆன பின்பு முதன்முறையாக பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கல்யாணிக்கு தகுதியில்லை என்று அவர் நியமனத்தை ரத்து செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம், தமிழக அரசு UGC விதிமுறைகளைப் பயன்படுத்தி தேர்வு செய்யவில்லை என்பதால், அவரின் நியமனம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தது.
திரும்பி வந்த கல்யாணியை வரவேற்க பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பள்ளி மாணவர்கள் மணிக் கணக்கில் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டனர். வானிலிருந்து பூத் தூவ தேவர்கள் இல்லை என்பதால், பிஞ்சுகள் பூத் தூவ நின்று வெயிலில் வதங்கினர். இப்படி குழந்தைகளைக் கொடுமைப் படுத்திய கல்யாணிதான் குழந்தைகள் உரிமையைப் பாதுகாப்பதற்கான தலைவராக ஜெ அரசால் நியமிக்கப்பட்டார்.
சரி. இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜெயலலிதா செய்த அரசியல் சட்ட மீறல்களை, நாட்டுப் பணத்தைச் சுருட்டுவதற்கு செய்த பதவி நியமனங்களை, இன்ன பிறவற்றை அவர் செத்துவிட்டதால் மறந்துவிட முடியாது.
அவரின் உயிர்த் தோழி சசிகலா அந்தக் கொள்ளையின் பங்காளி. பேசாத, கட்டுப்பாடான பன்னீர் அந்த அராஜகங்களின் கூட்டாளி. (பன்னீர் செய்த அத்துமீறல்கள் பற்றி பிறகு தனியே எழுதுவேன்.)
இப்போது சசி என்ற பேய்க்குப் பயந்து, பன்னீர் என்ற பிசாசைத் தேவதூதனாக்கும் வேலையில் பலரும் ஏமாறுகின்றனர். பாரதீய ஜனதாவுக்கும், பெருமுதலாளிகளுக்கும் தோதான ஒரு இடைக்கால ஏற்பாட்டை செய்து முடிக்க துடிப்பாக பல தரப்பும் வேலை பார்க்கின்றனர்.
நாம் கொள்ளியில் நல்ல கொள்ளியை எடுத்து தலையைச் சொறிந்துகொள்ள முடியாது. பணப் பேரத்தில், சாராயக் குளியலில் இன்ன பிற முறைகேடுகளில் எம்எல்ஏக்களை வாங்கி வெற்றிபெறுவது பன்னீராக இருக்க வேண்டும் என்று விரும்ப முடியாது. அல்லது, பட்டத்து அரசி இரத்த சொந்தமாக இருக்க வேண்டும் என்ற பண்டைய அறிவில், தீபா என்ற கொள்ளியைத் தேர்ந்தெடுக்க முடியாது.
தேர்தலை நடத்து... மக்கள் தீர்மானிக்கட்டும் என்பதே நமது முழக்கமாக இருக்க வேண்டும்.
- சி.மதிவாணன்
OPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும் - சி.மதிவாணன் OPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும் - சி.மதிவாணன் Reviewed by நமதூர் செய்திகள் on 03:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.