ஆதார் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி
ஆதார் தகவல் மையத் தொகுப்பிலிருந்து யார் வேண்டுமானாலும் தகவல்களைத் திருடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, ஆதார் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று (ஜனவரி 4) வெளியிட்ட அறிக்கையில், ரூ.500 கொடுத்தால் போதும் 119 கோடிக்கும் கூடுதலான இந்தியர்களின் ஆதார் விவரங்கள் கிடைக்கும் என்று ‘தி டிரிப்யூன்’ ஆங்கில இதழில் புள்ளிவிவரங்கள் மற்றும் விளக்கங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து உருவாக்கி, உலகின் மிகவும் பாதுகாப்பான தகவல் கட்டமைப்பு என்று கூறப்பட்ட ஆதார் தகவல் மையத் தொகுப்பிலிருந்து ரூ.500 செலவில் யார் வேண்டுமானாலும் தகவல்களைத் திருடலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது” என்று எச்சரித்துள்ள அவர், ரூ.300 கூடுதலாக அளித்தால் யாருடைய ஆதார் அட்டையை வேண்டுமானாலும் அச்சிட்டுக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வேதனைத் தெரிவித்துள்ளார்.
ஆதார் தகவல் விவரங்கள் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சட்டவிரோதமாக பெற்றுள்ளதாகக் கூறப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “இதனால் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதுடன் போலி ஆதார் அட்டையைக் காட்டி, செல்பேசி இணைப்புகளை வாங்கி அதை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தக் கூடும். இதன்மூலம் ஆதார் தகவல் திருட்டு மிகப் பெரிய தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்று தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தனிமனித விவரங்கள் பொதுவெளிக்குக் கொண்டுவரப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கண்டித்துள்ளதுடன் இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள தனிமையுரிமையை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்றும் விமர்சித்துள்ளார்.
ரூ.10,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ஆதார் கட்டமைப்பு அரசுக்கு உதவியதை விட, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கே பெரிதும் உதவியுள்ளது என்று கூறியுள்ள அவர், “ஆதாரின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தின் வினாக்கள் எழுப்பப்பட்டபோது, ‘ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை; பத்திரமானவை. ஆதார் தகவல்கள் கசிவோ, மீறலோ இல்லை’ என்று ஆதார் எண்ணை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பதிலளித்தது. ஆனால், ஆதார் தகவல்கள் கூவி கூவி விற்கப்படுவது அம்பலமாகியிருக்கிறது”என்று தெரிவித்துள்ளார். எனவே, ஆதார் திட்டத்தை எவ்வித பரிசீலனையுமின்றி உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆதார் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:01:00
Rating:
No comments: