மோசமான நிலையில் சமத்துவமின்மை!

சிறப்புக் கட்டுரை: மோசமான நிலையில் சமத்துவமின்மை!

அருண் குமார்
சமீபத்தில் வெளியான உலகச் சமத்துவமின்மை அறிக்கையில் (டபிள்யூ.ஐ.ஆர்) 2014ஆம் ஆண்டில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒரு சதவிகிதத்தினர் தேசிய வருவாயில் 22 சதவிகிதத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அண்மையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் 9,690 தனி நபர்கள் ஒரு கோடிக்கும் மேல் வருவாய் பெறுவதாகக் கூறியுள்ளது. இதில் ரூ.100 கோடிக்கும் மேல் தனிநபர் ஒருவர் மட்டும் செலுத்திய வரி ரூ.238 கோடியாகும்.
டபுள்யூ.ஐ.ஆர் அறிக்கையின்படி 0.01 சதவிகிதப் பணக்காரர்களின் (எண்ணிக்கையில் 78,000 பேரின்) சராசரி ஆண்டு வருவாய் ரூ.5.5 கோடியாகும். 30 சதவிகித வரி செலுத்துபவர்கள் ரூ.1.56 கோடி வரை வரி செலுத்துகின்றனர். இதில் முக்கியமான இரண்டு என்னவென்றால், அவ்வாறு பெரும் பணக்காரர்களே தேசியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆனால், அவர்கள் வருவாய்க்கு ஏற்றவாறு முறையாக வரிச் செலுத்துவதில்லை. இதனால் பணக்காரர்களின் முறையற்ற வருவாய் இந்தியாவில் அதிகரிக்கிறது.
இது ஒரு அறிகுறி என்றாலும், நிலைமையை யாரும் சரியாக உணரவில்லை. டபிள்யூ.ஐ.ஆர் அறிக்கை இந்தியாவின் கறுப்புப் பொருளாதாரம் பற்றியோ அல்லது வெள்ளை பொருளாதாரம் பற்றியோ எந்தத் தரவுகளையும் அளிக்கவில்லை. இது முழுக்க வருவாய் வழங்குதலைப் பற்றித்தான் கூறுகிறது. ஆனால் இந்திய அரசு வருமானம் குறித்த எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. சில தனியார் நிறுவனங்கள் சில ஆய்வை மேற்கொண்டன. அதில் நம்பகத்தன்மை இல்லை. இவை டபுள்யூ.ஐ.ஆரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பெரும்பாலும் நம்பமுடியாதவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. முன்னதாக 1976ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரச் செயல்முறை ஆய்வுக் குழு (என்.சி.ஏ.இ.ஆர்) வருமானம் குறித்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கையில் அந்த ஆண்டில் நாட்டின் மொத்த வருவாயில் 45 சதவிகிதம் குறைவாகவே இருந்தது. இதற்குக் காரணம் மக்கள் முறையற்ற வருமானத்தைப் பற்றிக் கூறவே இல்லை. அவர்களுடைய உண்மையான வருவாயையும் குறைத்து மதிப்பிட்டனர்.
இதுபோன்ற ஆய்வுகளில் மக்கள் பெரும்பாலும் உண்மையான பதில்களை அளிப்பதே இல்லை. அல்லது ஆய்வு நிறுவனங்கள் இந்தப் பணியை முறையாக மேற்கொள்வதில்லை. அல்லது குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி உடனடிப் பதில்களைப் பெறுவதை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
கரும்பு விவசாயத்தில் முன்னிலை வகிக்கும் மகாராஷ்டிரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டால், விவசாயிகள் அரசின் சில சலுகைகளைப் பெற வருவாயைக் குறைத்துக் கூறுகின்றனர். 1990களில் ராஜஸ்தானில் அரசு அதிகாரியாக இருந்த ஒருவர் கூறுகையில், “ இந்தத் தரவுகளை வாரம் ஒருமுறை தயாரிக்க வேண்டியிருந்தது. இதனால் எளிதாகப் பணியை முடிக்க ஒரு வருடத்திற்கு முந்தைய தரவுகளை எடுத்து அரசுக்கு அனுப்பி விடுவோம்” என்றார்.
மிகக் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் நுகர்வோர் சாதனங்களை வாங்குகிறார்கள் என்பதைக் காணும்போது, தரவு தவறானது என்பது தெளிவாகிறது. இதன்மூலம் ஏழை மக்கள் அனைவரும் ஏழைகள் அல்லர். அவர்களில் வருமானத்தை மறைப்பவர்களும் உள்ளனர். அவர்களுடைய முறையான வருவாயையே மறைக்கின்றனர்; முறையற்ற வருவாயை வெளியே சொல்வதே இல்லை.
என்னுடைய மதிப்பீட்டின்படி 2012-13ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கறுப்புப் பொருளாதாரத்தின் மதிப்பு 62 சதவிகிதமாகும். கறுப்புப் பொருளாதாரத்தை ஈட்டுபவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும் பணக்காரர்களாகவே உள்ளனர். சிறு பணக்காரர்களுக்கும் இதில் பங்கு உண்டு. ஆனால் முக்கிய பங்கு 3 சதவிகிதப் பெரும் பணக்காரர்களுக்குத் தான் உள்ளது. இவர்கள் அதிக வருமானமுடையவர்களாக மாறிவிட்டால் தங்கள் வருவாயைக் கூறாமல் மறைத்து விடுகின்றனர். ஏனென்றால் அதை வைத்துச் சட்டத்திற்குப் புறம்பாக முதலீடு செய்வது அல்லது குறைந்த வரியைச் செலுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் இரண்டையுமே செய்கின்றனர்.
இதன் விளைவாக அரசாங்கம் தேசிய வருவாய் 100 என அறிவித்தால் உண்மையில் 162 ஆக உள்ளது. டபிள்யூ.ஐ.ஆர் அறிக்கையின்படி நாட்டிலுள்ள 3 சதவிகிதப் பெரும் பணக்காரர்கள், நாட்டின் 40 சதவிகித வருவாயைக் கொண்டுள்ளனர். இந்த 3 சதவிகிதப் பெரும் பணக்காரர்களின் வருவாய்ப் பங்கு 62.5 சதவிகிதமாக உள்ளது. 50 சதவிகிதம் இருக்கிற அடித்தட்டு மக்களின் வருவாய்ப் பங்கு 15 சதவிகிதமாக உள்ளது. இந்த வருவாய் தான் முறையற்ற வருவாய் அல்லாத உண்மையான முறையான வருவாய். தேசிய வருவாயில் இதன் மதிப்பு 9.4 சதவிகிதம் மட்டுமேயாகும். 3 சதவிகிதப் பெரும் பணக்காரர்கள் ஈட்டும் வருவாய்க்கும், 50 சதவிகித குறைவான வருவாய் ஈட்டும் மக்களுக்கும் இடையே முறையான வருவாயின் சராசரி விகிதம் 44 ஆகவும், முறையற்ற வருவாய் விகிதம் 113ஆகவும் உள்ளது. இதன்மூலம் முறையற்ற வருவாய் விகிதத்தில் இந்தியச் சமூகத்தில் சமத்துவமின்மை அதிகளவில் உள்ளது நிரூபணமாகிறது.
இந்தியாவில் உண்மையான வருமான ஏற்றத்தாழ்வைக் கணக்கிடுவதற்கு வருமான வரி ஆணையத்தின் தகவல்கள் சரியானதாக இருக்காது என்பதை மேலே விளக்கியுள்ளோம். இதன் விளக்கமான தகவல்கள் 2014-15ஆம் நிதியாண்டில் வருமான வரி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் மூலம் கிடைக்கின்றன. இந்த விகிதாச்சாரம் 1997ஆம் ஆண்டிலிருந்து மாறவே இல்லை.
என்னதான் நடந்தது? பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. 10 மில்லியன் எண்ணிக்கையிலிருந்து 60 மில்லியனாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் வளமுடைய வரி செலுத்துவோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி இல்லை. இது முறையற்ற வருவாயின் பங்கு இந்தியப் பொருளாதாரத்தில் அதிகரித்துள்ளதையே உணர்த்துகிறது. மேலும், சமத்துவமின்மையும் இது அதிகரித்துள்ளது.
கறுப்புப் பொருளாதாரம் வரி வளையத்திற்குள் வருவதில்லை. 4 சதவிகித வருவாய் ஈட்டுபவர்களாவது இந்தியாவில் வரி வளையத்திற்குள் உள்ளனர். தற்போது அரசாங்கம் 16.5 சதவிகித ஜிடிபியை வரி மூலம் ஈட்டுகிறது. ஆனால் முறையற்ற மற்றும் முறையான வருவாயின் மதிப்பு 10 சதவிகிதமாகத் தான் உள்ளது. இது உலகளவில் மிகக் குறைவாகும். கறுப்புப் பணமும் வரி வளையத்திற்குள் வந்தால் இதன் மதிப்பு 25.6 சதவிகிதமாக உயரும். இது மதிப்புக்குரிய விகிதமாக இருக்கும். பொதுக்கல்வி, பொதுச் சுகாதாரம், ஆற்றல் வளங்கள், சாலைகள் போன்ற வளங்களின் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வரும். பொருளாதார வளர்ச்சியின் வேகம் கணிசமாக அதிகரிக்கும். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் கறுப்புப் பணம் தான் கைப்பற்றியுள்ளது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியர்களின் வருவாய் விகிதம் குறித்தோ கறுப்புப் பொருளாதாரம் குறித்தோ முறையான ஆவணங்களை அரசு சேகரித்து வைக்கவில்லை. இதனால் உண்மையான சமத்துவமின்மையை டபுள்யூ.ஐ.ஆர். கூறியுள்ளது என்று ஏற்க இயலாது. வரி செலுத்துவதை வைத்து நன்கு முன்னேறியவர்களின் உண்மை வருமானத்தை அறிய இயலாது. இந்தப் பிரிவினர்களில் அதிகளவில் முறையற்ற வருவாய் பெறுபவர்களும் இருக்கின்றனர். இவர்களின் வருவாய் திரித்துக் கூறப்பட்டதாகும். டபிள்யூ.ஐ.ஆர். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை விடச் சமத்துவமின்மை மிக மோசமாகவே இருக்கும்.
(கட்டுரையாளர் அருண் குமார் சமூக அறிவியல் நிறுவனத்தில் (ஐ.எஸ்.எஸ்.) பேராசிரியராகப் பணிபுரிகின்றார். பணமதிப்பழிப்பு மற்றும் கறுப்புப் பணம் பற்றிய எழுத்தாளர். பென்குயினிலும் (இந்தியா) எழுத்தாளராக உள்ளார்)
நன்றி: தி வயர்
தமிழில்:பிரகாசு
மின்னஞ்சல் முகவரி: prakash@minnambalam.com
மோசமான நிலையில் சமத்துவமின்மை! மோசமான நிலையில் சமத்துவமின்மை! Reviewed by நமதூர் செய்திகள் on 03:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.