ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை!
‘ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களை நடத்துவது சாத்தியமற்றது’ என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்துகளை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அத்துடன் சேர்ந்து அனைத்து மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்த பாஜக திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 22) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, “வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்த சாத்தியமில்லை” என்றும், “வேண்டுமானால் 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின்போது, மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களையும் நடத்தலாம். ஆனால், இப்போதே திட்டமிட்டு இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும்போது, “இங்கிலாந்து நாட்டின் அரசியல் சட்டத்தை முன் மாதிரியாக கொண்டே நமது அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், நமது அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்” என்றும் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:14:00
Rating:
No comments: