ஹாதியா திருமணத்தை NIA விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஹாதியா மற்றும் அவரது கணவர் ஷஃபின் ஜஹான் திருமணத்தை கேரள உயர் நீதிமன்றம் சட்ட விரோதமானது என்று கூறி ரத்து செய்திருந்தது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கில் ஹாதியா ஆஜராகி கணவருடன் சேர்ந்து வாழும் தனது விருப்பத்தை தெரிவித்தார். மேலும் தன்னை யாரும் கட்டாயப் படுத்தவில்லை என்றும் தான் விருப்பப்பட்டே மதம் மாறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவர் அவரது பெற்றோரின் சட்டவிரோத வீட்டுக்காவலில் இருந்து மாற்றப்பட்டு அவர் முன்னர் கல்வி பயின்ற கல்லூரிக்கு அவரது கல்வியை தொடர அனுமதிக்கப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை இம்மாதம் மீண்டும் நடைபெற்ற நிலையில் ஹாதியா – ஷஃபின் ஜஹான் திருமணம் மீது NIA விசாரணை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஹாதியா தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நீதிமன்றத்தில் அவரே கூறியுள்ளார். அவர் 24 வயது நிரம்பிய பெண் என்பதால் அவர் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை சுதந்திரமாக முடிவு செய்யும் உரிமை அவருக்கு உள்ளது என்றும் அதில் விசாரணை நடத்த இடமில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் ஹாதியாவையும் ஒரு மனுதாரராக சேர்த்து இவ்வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். ஹாதியா ஷஃபின் திருமணத்தை குறித்து NIA விசாரணை நடத்த முடியாது என்கிற போதிலும் NIA வேறு குற்றச்செயல்கள் குறித்து விசாரணை நடத்தலாம் என்று கூறியுள்ளது.
ஹாதியாவின் தந்தை அசோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாத்வி திவான் ஹாதியாவின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் ஹாதியா இப்போது சட்ட விரோத காவலில் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் ஹாதியா திருமணம் நடைபெற்ற சூழ்நிலைகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறிய போது யார் சிறந்த மனிதர் என்பதை ஹதியா தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அதனை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ஷஃபின் ஜஹானை கொச்சியில் வைத்து விசாரணை செய்த NIA அவரை மீண்டும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹாதியா திருமணத்தை NIA விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:56:00
Rating:
No comments: