போராடும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு!
தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, ஓட்டேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்தத் தொடர் போராட்டத்தினால் பிப்ரவரி 2ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கூறி, கடந்த சில நாட்களாகக் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பேருந்துக் கட்டணம் அனைத்து நிலைகளிலும் 1 ரூபாய் குறைக்கப்பட்டது. எனினும், கட்டண உயர்வை முழு அளவில் திரும்பப்பெற வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் கட்டண உயர்வைத் திரும்பப்பெறக் கோரி, வேலூர் மாவட்டம் ஓட்டேரியில் உள்ள அரசு முத்துரங்கம் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து நேற்று (ஜனவரி 30) சாலை மறியலில் ஈடுபட்டு, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மாணவர்களின் இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது, காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். காவல் துறையினரின் இந்த திடீர் தாக்குதலால் சிதறியோடிய மாணவர்கள் பலர் காயமடைந்தார்கள். மேலும் இந்தச் சாலை மறியல் போராட்டம் தொடர்பாக 10 மாணவர்கள் மீது 4 பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாணவர்கள் போராட்டம் காரணமாக இன்று (ஜனவரி 31) முதல் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி வரை முத்துரங்கம் அரசுக் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் 5ஆம் தேதி வழக்கம்போலக் கல்லூரி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் போராட்டம் காரணமாக குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக் கல்லூரிக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று, பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்திவருவதால், விடுமுறை அறிவிப்பினை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. போராட்டம் காரணமாக திருச்சியிலும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
போராடும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:25:00
Rating:
No comments: