இந்தியாவுக்கு காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?
விவேக் கணநாதன்
2019 தேர்தலின் ரேகைகள் தெரியத் தொடங்கிவிட்டன. முன்பு அமைந்த தேர்தல்களைப் போல அல்லாமல் இந்தியாவின் அனைத்து ஆதார உணர்ச்சிகளும், பிரச்சினைகளும் மையப்பொருளாக மாறியிருக்கும் ஒரு தேர்தலாக 2019 தேர்தலின் முன்னோட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் இந்துத்துவத் திட்டத்துடன் பாஜக. அதற்கு எதிர்த் திசையில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் காங்கிரஸ். இவை இரண்டுக்கும் மத்தியில் மாற்று யோசனைகளுடன் மாநில கட்சிகளின் அணி சேர்க்கைக்கான முயற்சிகள் எனக் கள நிகழ்வுகள் சென்றுகொண்டிருக்கின்றன.
பாஜக ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள், அதன் எதிர்விளைவுகள் இரண்டையும் பார்த்தபோது 2019இல் கூட்டணிக்காக கட்சிகளை அணிதிரட்டுவதில் காங்கிரஸுக்கு பெரும் சிக்கல் இருக்காது என்றே ஆரம்பத்தில் எண்ணத் தோன்றியது. ஏனெனில், பாஜக ஏற்படுத்தியிருக்கும் அச்சம் என்பது வெறும் ஒற்றைத் தேர்தலுக்கான கூட்டணி அமைவிற்கான காரணங்கள் அல்ல. இந்தியா என்கிற அமைப்பையே கேள்விக்குள்ளாக்கும் அச்சங்கள் எழத் துவங்கியிருக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி?
இந்த அபாயத்திலிருந்து காப்பாற்றும் தற்காலிக தப்பித்தலுக்காகவாவது, பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது ஒற்றைத் தேர்தலுக்கான கூட்டணி அமைவாக இருப்பதில் நியாயமில்லை; அதில் கூடுதல் விவாதங்கள் தேவை என்பதை மாநிலக் கட்சிகளின் எச்சரிக்கை உணர்வுகள் காட்டிக்கொண்டிருக்கின்றன. ஏனெனில், பாஜகவுக்கு பதில் காங்கிரஸ் என ஆட்சி மாறி அமைந்துவிட்டால் இந்த அச்ச உணர்வு மறைந்துவிடும். ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கும். கடந்த காலங்களைப் போல கம்யூனிஸ்ட்களின் முன்னெடுப்பில் அல்லாமல், இந்தமுறை மாநிலக் கட்சிகளின் அணிசேர்க்கையின் அடிப்படையில் மூன்றாவது அணி என்பதற்கான தேவை இந்தக் காரணங்களிலிருந்தே எழுவதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
சந்திரசேகர ராவ் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணி என்றார். கூட்டாட்சிக் கொள்கை முழக்கத்தோடு மம்தா குரலை மாற்றினார். அதே கூட்டாட்சி மற்றும் மாநிலக் கட்சிகளின் ஒற்றுமையின் அடிப்படையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் வரவேற்புணர்வுடன் அதை அணுகத் தொடங்கியுள்ளார்.
பாஜக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் அச்ச உணர்வை வைத்துப் பார்க்கும்போது, மாநிலக் கட்சிகளின் இந்த முயற்சி சந்தேகத்தையும், ஒருவித அவநம்பிக்கையையும் ஏற்படுத்தவே செய்யும். இந்த முயற்சி, பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவே உதவும் என்றே எண்ணத் தோன்றும்.
இங்கே, ஒரு கேள்வி எழுகிறது. மாநிலக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து காங்கிரஸின் பின்னால் அணிதிரண்டு பாஜகவை ஆட்சியிலிருந்து வீழ்த்திவிட்டால் போதுமா? இன்றைக்கு இருக்கும் அத்தனை பிரச்சினைகளும் சரியாகிவிடுமா? இந்தக் கேள்விக்கான விடை தேடும் அர்த்தத்துடன் மாநிலக் கட்சிகளின் குரலை அணுகுவது இந்தியாவுக்கு நல்லது. அந்தக் குரலுக்குத் துணையாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில் எடுக்கப்பட்டிருக்கும், ‘காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை; புரிந்துணர்வு உண்டு’ என்கிற தீர்மானத்தைப் புரிந்துகொள்வது இந்தியாவில் கம்யூனிசத்திற்கும் நல்லது.
காங்கிரஸின் செயல் திட்டம் என்ன?
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. அந்த விருப்பத்தில் கட்சி நலனோடு, தேச நலனும் இருக்கிறது என்றே நாம் புரிந்துகொள்வோம். ஆனால் பாஜகவை வீழ்த்திவிட்டு வர நினைக்கும் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?
மாட்டுக்கறி சர்ச்சையும், மத ஆதிக்கக் குழப்பமும், ஒற்றை நாடு - ஒற்றை கலாச்சார - ஒற்றை மத கோஷமும், அரசியலமைப்பின் கூறுகளில் சாதிய சர்வாதிகாரத்தை உறுதிசெய்வதும், நீதி - நிர்வாக அமைப்புகளை அடிப்படைவாத செயல்தளங்களாக மாற்றுவதும் வேண்டுமானால் பாஜகவின் பிரத்யேகங்களாக இருக்கலாம். ஆனால் மாநில உரிமைகள், மத்தியப் பேரரசின் நெருக்கடி, மத்திய அரசின் நிறுவனங்களை வைத்து நடக்கும் அரசியல் சூதாட்டங்கள், பெரும்பான்மை தேசியவாதத்துக்கு எதிரான குரல்களை நசுக்குவது, அதிகாரத்தை நிர்ணயிப்பதில் பெருநிறுவனங்களின் கையாடல், நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கும் அதிகார மோசடி எனப் பலவும் காங்கிரஸின் ஆதிக்கத் தரப்பு செய்த பழங்கதைகளின் நீட்சி.
இந்திரா காந்தி காலத்துக்குப் பின்னர் உருவான அரசியல் சூழலையும், இன்றைய சூழலையும் ஒப்பிடுவதன் மூலம் இதை இன்னும் சரியாக விளங்கிக்கொள்ளலாம். இந்தியாவின் அமைப்பை ஒரு நொடியில் குப்பையில் கடாசும் ஆற்றல், தவறான நோக்கம் கொண்ட மத்தியப் பேரதிகாரத்துக்கு உண்டு என்கிற அதிகாரத்தின் விஷத்தை இந்திராதான் அறிமுகப்படுத்திவைத்தார்.
அதிகார பேரத்தை லாப சூதாட்டமாக்குவது, மத்தியப் பேரதிகாரத்தைக் கொண்டு மாற்றுக் கட்சிகளை உடைப்பது - நசுக்குவது - வலுவிழக்கச் செய்வது, அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகக் குழுச் சண்டைகளைப் பெருக்குவது, மக்களின் அங்கீகாரம் இல்லாத ஒட்டு அதிகார மையத்தை உருவாக்குவது போன்ற பலவற்றையும் இந்திராவின் காலம்தான் தொடங்கிவைத்தது. இவை ஏற்படுத்திய விளைவுகள் பின்னாளில், இந்திரா காந்தியே அவற்றைச் சரிசெய்ய விரும்பியபோதும், முடியாமல்போகும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தின.
இந்திராவின் சர்வாதிகார மையத்தின் எதிர்விளைவாகவும், உபவிளைவாகவும்தான் இந்துத்துவ அரசியலின் பெருங்கட்டம் இந்தியாவில் தொடங்குகிறது. காங்கிரஸில் நடந்த உடைசல்கள், ஜனதா கட்சி தோற்றம், அது பல கட்சிகளாக உடைந்தது, பாஜகவின் உருவாக்கம், சங் பரிவார அமைப்புகளின் எழுச்சி, மத - இன உரிமை பேசுபவர்கள் இந்தியா என்கிற அமைப்பின் மீது நம்பிக்கை இழந்தது, துணைதேசியவாதம் பேசும் கட்சிகள் அதிகாரப் போட்டியில் கொடுத்த விலைகள் - அடைந்த சீரழிவுகள் என இந்திய அரசியலின் போக்கை இந்திரா காந்தியின் காலம் மிக மோசமாக பாதித்தது.
இந்திரா யுகத்தின் அடுத்த கட்டம்
இன்று மோடியின் காலத்தில் இவற்றின் அபாயகரமான இன்னொரு கட்டத்தைக் காண்கிறோம். இந்திராவின் காலம் அதிகாரத்தை தனிநபர் உடைமையாக்க முயன்றது எனப் புரிந்துகொண்டால், மோடியின் காலம் அதிகாரத்தை மீண்டும் தனிக்குழுவுடமை ஆக்க முயற்சிக்கிறது. உரையாடல்கள், விவாதங்கள், பரிமாற்றங்கள் போன்ற ஜனநாயக இயல்புகளுக்கு விரோதமாக, ஒற்றைப் பேரதிகார மையம் கொண்ட அதிபர் ஆட்சி பாணியில், தனிநபரின் கீழ் அதிகார அமைப்பை ஒப்படைத்து, அந்தத் தனிநபர் இயக்கத்தை மீட்டெடுக்க முடியாத வகையில் ஒரு குழுவுக்கு மட்டுமே உரியதாக்க நினைக்கும் பாஜகவின் காய்நகர்த்தல்கள் அச்சுறுத்தக்கூடியவையாக உள்ளன.
இந்த பேரபாயத்தைப் போக்க காங்கிரஸ் என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறது என்பதுதான் 2019ஆம் ஆண்டு தேர்தலின் மைய விவாதப் பொருளாக இருக்க வேண்டும்.
காங்கிரஸும், மாநிலக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத்தை தங்கள் உறுப்பினர்களால் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால் அமைப்பு மீண்டும் அப்படியேதானே இருக்கும்?
பழைய விஷங்களின் எச்சத்தோடும், புதிய விஷங்களின் அபாயத்தோடும் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்திய அமைப்பு இருக்கப்போகிறது? சூழல் மாறினால் இந்த அபாயங்கள் மீண்டும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒரு விஷம் வேகமாகப் பாய்ச்சப்படுவதிலிருந்து தப்பிக்க அதே விஷத்தை மெதுவாக ஏற்றுக்கொள்வது நிரந்தரத் தீர்வாகாது என்கிற சத்தியத்தை காங்கிரஸ் உணர்ந்துகொள்வது முக்கியம். அப்படி உணர்ந்துகொண்டால், மூன்றாவது அணி என்கிற ஒன்று ஏன் உருவாகிறது என்பதற்கான காரணத்தை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்.
மூன்றாவது அணி என்கிற கோஷத்தைப் பேசும் யாரும் வெற்று அவநம்பிக்கைக் குரலை மட்டும் இம்முறை எழுப்பவில்லை. அதேபோல், காங்கிரஸைப் பணியவைப்பதற்கான மிரட்டலாக மட்டுமே இதைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. ஏனென்றால், காங்கிரஸோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்று இதுவரை யாரும் சொல்லவில்லை.
மாற்று அணி என்று பேசும் மம்தா, ‘மாநிலக் கட்சிகளை இணைக்கும் என் முயற்சியில் இணைந்துகொள்வது காங்கிரஸின் கையில்தான் உள்ளது’ என்றே சொல்கிறார். பாஜகவோடு கூட்டணி இல்லை என்று உறுதியாகச் சொல்லும் கர்நாடகத்தின் தேவ கௌடா, காங்கிரஸை அப்படி நிராகரிக்கவில்லை. கூட்டாட்சி, மாநில சுயாட்சி அடிப்படையில் மாற்றுத் திட்டத்தை வரவேற்கும் மு.க.ஸ்டாலின், இன்னமும் காங்கிரஸைக் கைவிடவில்லை. பந்து இன்னமும் காங்கிரஸின் எல்லையில்தான் இருக்கிறது.
கூட்டணி அல்ல; கூட்டாட்சி
கூட்டணிக்குத் தலைமை தாங்கும் நோக்கத்தோடு மட்டுமே இல்லாமல், கூட்டாட்சிக்கு வழிகோலும் அடிப்படையில் காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள செல்வாக்கு பெற்ற மாநிலக் கட்சிகளுடன் இணைய வேண்டும் என்ற நோக்கத்தில் மம்தா பேசத் துவங்கியிருக்கிறார்.
பொதுவாக, இதுவரையிலான மூன்றாவது அணி உருவாக்கம் என்பது அரசியல் இயக்கங்கள், தலைவர்களுக்கு இடையேயான ஈகோ முரண்களாலேயே பெரும்பாலும் நடந்திருக்கிறது. கொள்கை முரண்பாடுகள், கருத்து முரண்பாடுகள், அரசியல் சூழல் போன்றவை காரணமாக இருந்தாலும் அவை விவாதக் களத்துக்கு வராமல் போட்டிக் களத்துக்குச் சென்றதன் பின்னணியில் இந்த ஆளுமை முரண்களின் பங்கு அதிகமிருக்கிறது.
இந்த முறையும் ஆளுமை முரண் எழுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் இன்றைக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் ராகுல் காந்தி, மம்தா, மு.க.ஸ்டாலின் என அனைவரும் சமீப நாட்களிலேயே இந்த ஆளுமை முரண்களைத் தாண்டிப் பொது நோக்கங்களுக்காக இணையும் தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சகிப்புத்தன்மையையே ஆளுமையாகக் கொண்டிருக்கும் ராகுல் காந்திக்கு இது ஒரு நல்வாய்ப்பு. அதிகாரக் குவிப்பைத் தொடர்ந்து விமர்சித்துவரும் ராகுல் காந்தி, அதிகாரப் பரவலைச் சட்டரீதியாக நிலைநிறுத்தும் அமைப்பியல் மாற்றங்களை முன்னெடுப்பதன் மூலம் தன் ஆளுமையை நிரூபிக்க முடியும்.
மத்திய – மாநில அதிகார சமத்துவம்
மாற்று அணிக்குத் திட்டமிடும் மாநிலக் கட்சிகள் மத்திய அரசுடனான அதிகாரப் பங்கீடு பட்டியல், மாநிலங்களின் பொருளியல் தன்னாட்சி, எல்லா மாநிலங்களையும் உரிமைகளின் அடிப்படையில் சமமாக நடத்துவது போன்ற அதிகார சமத்துவத்தை முன்வைத்து இம்முறை காங்கிரஸோடு பேரம் நடத்தக்கூடும். இதற்கு முன்பாக இந்த பேரங்களை நிராகரிக்கும் இடத்திலோ அல்லது நீர்க்கச் செய்யும் இடத்திலோ காங்கிரஸ்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த பேரத்தை வழிநடத்தும் இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. ஏனெனில், மேலே சொன்ன பேரங்களை மாநிலக் கட்சிகள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. இவற்றை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சியே ஒரு செயல் திட்டத்தை உருவாக்கினால், அது ஒரு அசலான மாற்றத்துக்குத் தொடக்கமாக இருக்கும். தங்கள் கட்சியின் தேசியத் தலைமைகள் என நம்பிய தலைவர்களைவிட, மாநிலத் தலைமையில் இருக்கும் தலைவர்களே இன்றைக்கு சோபித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரும்போது, காலம் கேட்கும் இந்தியாவின் அமைப்பு மாற்றத்தை காங்கிரஸ் அறிந்துகொள்ளலாம்.
இதற்கு முன்பாக மாநில சுயாட்சியின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்ததற்கும், வலுவிழக்கச் செய்ததற்கும் வலுவான ஆதிக்கம் செலுத்தும் வல்லாதிக்க மத்திய அரசு மட்டுமே இந்தியா என்கிற அமைப்பைத் தக்க வைக்க முடியும் என்ற எண்ணமும், சாதி, மத, பண்பாட்டு ஆதிக்கங்களும் காரணமாக இருந்தன. ஆனால் இன்றைக்கு அப்படியல்ல. வல்லாதிக்க உணர்வு கொண்ட மத்திய அரசு, அதற்கு இயக்க ஆற்றலாக இருக்கும் சாதிய - மத ஆதிக்கம் போன்றவை தொடர்ந்தால் இந்தியா என்கிற அமைப்பு நிலைத்திருக்க முடியாது என்கிற அபாயம் உணரப்பட்டிருக்கிறது. தனித் தேசியவாதக் குரல்களின் எழுச்சியும், அவை வெளிப்படுத்தும் அவநம்பிக்கையும் நிகழ்காலப் பிரச்சினைகளுக்குப் பின்னால் இருக்கும் நீண்டகால அழுத்தங்களின் தீவிரத்தை உணரச் செய்கின்றன.
இந்தியாவில் என்ன வகையான அரசியல் சிக்கல்கள் எழுந்தாலும் அதற்கான விலையை மாநிலக் கட்சிகளே அதிகம் கொடுத்திருக்கின்றன. அகில இந்தியக் கட்சிகள் எப்போதும் மத்தியப் பேரதிகாரம் என்கிற கவசத்தாலும், கவச நிழலாலும் பாதுக்காக்கப்பட்டிருக்கின்றன. மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், காத்திரமாகச் செயல்பட்ட மாநிலங்களில் மட்டுமே தேசியக் கட்சிகள் இன்று கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. எனவே, மாநில உரிமைகளின் பலிபீடத்தில் தேசியத்தின் ஒற்றுமை என்கிற வெற்றுக் கோஷத்தை விடுத்து, மாநில உரிமைப் பாதுகாப்பிலிருந்து எழும் உணர்வு தேசியத்துக்கு உயிர்கொடுக்க வேண்டிய நேரம் இது. மத்தியில் பேரதிகாரத்தைக் குவிக்கும் விஷத்தை அமைப்பிலிருந்து நீக்க வேண்டிய காலமிது.
1977இல் அமைந்த கூட்டணி ஆட்சியும், 1989க்குப் பிறகு 2014 வரை அமைந்த காங்கிரஸ் அல்லாத கூட்டணி, பாஜக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிகள் ஆகியவையும் வலுவற்றவை. காத்திரமான மாற்றங்களை முன்னெடுக்க முடியாதவை; குழப்பங்களைத் தீவிரப்படுத்தியவை. 2014இல் வலுவாக அமைந்த பாஜக அரசு அமைப்பை சீர்குலைக்கிறதே ஒழிய, வளர்க்கவில்லை.
2004, 2009களில் அமைந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு இந்தியாவில் அமைப்பு ரீதியாக செய்யவேண்டிய மாற்றங்களை முன்னெடுப்பதற்குச் சிறிதளவு வாய்ப்பிருந்தது. அந்த வாய்ப்பிலிருந்து காங்கிரஸ் செய்த மாற்றங்கள்கூட, மத்தியப் பேரதிகாரம் என்கிற உச்சியிலிருந்து கீழே தூவப்பட்ட மாற்றங்களே ஒழிய, அடித்தளத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட சீர்திருத்தவாத மாற்றங்கள் அல்ல.
தாராளமயக் கொள்கையின் விரிவாக்கம், தொழில்நுட்ப உலகோடு தங்களை இணைத்துக் கொண்ட புதிய தலைமுறை போன்றவை வெளிப்படையான நிர்வாகத்தையும் - அதிகார மாற்றங்களையும் கோரத் துவங்கிய காலத்தில் காங்கிரஸ் குழப்பங்களாலும் தேக்கங்களாலும் அந்த வாய்ப்புகளைக் கெடுத்துக்கொண்டது.
மீண்டும் இன்றைக்கு காங்கிரஸுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. இன்றைக்குத் தலைமுறைகள் மாறியிருக்கின்றன. அரசுகள் குறித்த மக்களின் மதிப்பீடுகளும் புரிதல்களும் கவலை தரத்தக்க வகையில் மாறியிருக்கின்றன. காங்கிரஸ் இந்தியாவுக்கு என்ன செய்தது என்று கேட்கும் பெருந்திரள்தான் இன்றைக்கு வாக்காளர்களாக உள்ளனர். இந்த காலத்தில், இந்தியாவின் அதிகார அமைப்பைப் புனரமைப்பதன் மூலம் அடுத்த 6 தேர்தல்களுக்கு மிகப் பிரதான வாக்காளர்களாக இருக்கப்போகும் இன்றைய தலைமுறையிடம் காங்கிரஸ் கம்பீரமாகத் தனது பழைய சாதனைகளையும், இந்தியாவின் மீதுள்ள அக்கறையையும் நிரூபித்துக்கொள்ள முடியும்.
வரலாறு காங்கிரஸுக்கு மீண்டும் ஒரு பெரும் பொறுப்பைத் தந்திருக்கிறது. காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது?
இந்தியாவுக்கு காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:39:00
Rating:
No comments: