காவிரி: குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதிய சிறுமி தமிழிசை
காவிரி உரிமை மீட்பு நடை பயணத்தை நேற்று தொடங்கியிருக்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அதற்கு முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை தொடங்கவிருக்கும் காவிரி உரிமை மீட்பு பயணத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி வழிநெடுக இருக்கின்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடத்தில் அஞ்சலட்டைகளில் கையெழுத்து பெற்று மேதகு குடியரசுத் தலைவரிடம் அனுப்பி நம் கோரிக்கையை வலியுறுத்துவோம்” என்று பதிவிட்டார். அத்தோடு குடியரசுத் தலைவருக்கு எழுத வேண்டிய கடித வாசகங்களையும் வெளியிட்டிருந்தார் ஸ்டாலின்.
இந்த வேண்டுகோளை ஏற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் சிறுமி தமிழிசை, குடியரசுத் தலைவருக்கு காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறார். மூன்றாம் வகுப்பு படித்துவரும் தமிழிசையின் அப்பா பெயர் ஸ்டாலின். இவர், சேலம் மாவட்டம் ஆத்தூர் திமுக கிளைப் பிரதிநிதியும், ஆத்தூர் முன்னாள் நகர மன்ற உறுப்பினரும் ஆவார்.
தமிழிசையின் கடிதம் பற்றி அவரிடம் பேசினோம்.
“எங்கள் செயல் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, நூற்றுக்கணக்கான அஞ்சலட்டைகளை வாங்கி அதை மக்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தேன். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்புவது பற்றி போனில் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது வீட்டில் இருந்த எனது மகள் தமிழிசை, ‘அப்பா... நானும் குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதணும்ப்பா...’ என்று என்னிடம் வந்து கேட்டார். நான் நெகிழ்ந்து போய், உடனே அவரிடம் ஒரு கார்டைக் கொடுத்தேன். செயல் தலைவர் கொடுத்த கடித வாசகங்களையும் தமிழிசையிடம் காண்பித்தேன். உடனே அதைப் படித்த தமிழிசை, தானே கார்டில் எழுதி எங்கள் ஊர் அஞ்சலகத்தில் அதை போஸ்ட் செய்துவிட்டார்.
திமுக செயல் தலைவரின் வேண்டுகோள் மூன்றாம் வகுப்பு படிக்கும் தமிழிசை வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நம் வருங்காலத் தலைமுறை காவிரி பற்றிய அக்கறையோடும் ஆர்வத்தோடும் இருப்பதை எண்ணி தமிழிசையின் தந்தையாக நிம்மதியை உணர்கிறேன்” என்று சொன்னார் ஸ்டாலின்.
இன்னும் இதுபோன்ற பல பிஞ்சுகளிடம் காவிரி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது கடந்த ஒரு வார காலமாக நடக்கும் மக்கள் போராட்டம்.
காவிரி: குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதிய சிறுமி தமிழிசை
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:50:00
Rating:
No comments: