கொட்டும் மழையில் தலைவர்கள் நடைபயணம்!
கொட்டும் மழையில் 3வது நாள் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இன்று தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டையில் தொடங்கினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இரண்டாவது கட்டமாக கடந்த 7ஆம் தேதி திருச்சி முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் துவங்கினர். அன்றைய தினத்தில் கல்லணையில் பயணம் நிறைவு பெற்றது. நேற்றைய தினம் தஞ்சை அருகே சூரக்கோட்டையில் ஆரம்பித்த நடைபயணம் சில்லத்தூரில் நிறைவடைந்தது. அங்கு பொதுமக்கள் மத்தியில் ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (மார்ச் 9) காலை தஞ்சை அன்னப்பன்பேட்டையில் தலைவர்கள் தங்களது மூன்றாம் நாள் பயணத்தைத் தொடர்ந்தனர். பயணத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக கொட்டும் மழையில் தலைவர்கள் உரையாற்றினர். இறுதியாக ஸ்டாலின் பேசுகையில், "கொட்டும் மழையில் நீண்ட நேரம் உரையாற்ற வாய்ப்பில்லை. ஆனாலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காவிரி மீட்பு பயணத்திற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி.
உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்திருந்தாலும் அதில் மத்திய அரசு சதி செய்து ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டிருக்கிறது. ஸ்கீம் குறித்து உச்ச நீதிமன்றம் கேட்டுத்தான் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை. டிக்ஷ்ணரியை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதெல்லாம் புரிந்து கொண்டு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜாடிக்கேற்ற மூடி என்று ஒரு முதுமொழி கூறுவார்கள், ஆனால் மோடிக்கேற்ற எடப்பாடி என்பதுதான் புதுமொழி என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பயணமானது மெலட்டூர், திருக்கருக்காவூர், சாலியமங்கலம், சூழியக்கோட்டை, அம்மாபேட்டை, அமராவதி, வெட்டாற்றுபாலம் வழியாக நீடாமங்கலத்தை சென்றடைகிறது.
காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் இரண்டாவது குழுவானது தங்கள் பயணத்தை அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரிலிருந்து இன்று மாலை தொடங்கவுள்ளது
கொட்டும் மழையில் தலைவர்கள் நடைபயணம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:35:00
Rating:
No comments: