இளைஞர்களைக் கவரும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை
ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்; கல்லூரி செல்லும் 18-23 வயதுள்ள இளைய தலைமுறையினருக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்பது உட்பட பல கவர்ச்சிகரமான அம்சங்களை, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
நேற்று (ஏப்ரல் 27) கர்நாடக மாநிலம் மங்களூரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இந்த அறிக்கையை வெளியிட்டுத் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் கட்சித்தலைவர் பரமேஸ்வரா உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த தேர்தல் அறிக்கை கர்நாடக மக்களின் மனதின் குரலாக இருக்கும் என்று கூறினார் ராகுல். மேலும், கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளில் 95 சதவீதத்தை சித்தராமையா தலைமையிலான அரசு நிறைவேற்றியதாகத் தெரிவித்தார். அது போலவே, இந்த அறிக்கையும் வரப்போகும் ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்றார்.
ஆண்டுக்கு 15-20 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படும் என்றும், இதன் மூலமாக 5 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல, கல்லூரி செல்லும் 18 முதல் 23 வயதுள்ள இளைய தலைமுறையினருக்கு ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
மாநிலம் முழுவதும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை இலவசக்கல்வி வழங்கப்படும்.
மாநிலப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு 6ஆயிரம் கோடியில் இருந்து 30ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்.
விவசாயிகள் மற்றும் விவசாயத்தினை மேம்படுத்தும் வகையில், மாநிலம் தழுவிய விவசாயிகள் வருமானக் குழு அமைக்கப்படும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.
ஒலிம்பிக் போட்டிகளில் வெல்லும் கர்நாடக மாநில வீரர் / வீராங்கனைகளுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும். சர்வதேசப் போட்டிகளில் வாகை சூடும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
காவல் துறையில் பெண்களின் பங்களிப்பு 33 சதவீதமாக இருக்குமாறும், மூன்றாம் பாலினத்தவருக்கு 3 சதவீத ஒதுக்கீடும் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
‘மனே மனே – ஹோல ஹோல கா நீரு’ திட்டப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் பண்ணைக்கும் தண்ணீர் வசதி செய்து தரப்படும்.
கன்னட மொழியைக் காக்கும் வகையில் தார்வாட்டில் ‘சாகித்ய பாஷா பிரதிகாரா’ நிறுவப்படும். கன்னட மொழியைச் சிறப்பித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் அறிஞர்களைக் கவுரவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
போக்குவரத்து வசதிகள் தரம் உயர்த்தப்படும்.
சிறுபான்மையினர் வாழ்க்கை நலன் மேம்படுத்தப்படும்
இளைஞர்களைக் கவரும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:54:00
Rating:
No comments: