பலம் காட்டும் காங்கிரஸ்!
டெல்லி ராம் லீலா மைதானத்தை இன்று குலுக்கி எடுத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. அண்மை காலமாக மாநிலக் கட்சிகள் தனி அணி அமைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது என்றும், அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்து வரும் நிலையில், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு தன் பலத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தம் எழுந்தது.
இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரம்மாண்ட பேரணி பொதுக்கூட்டத்தை இன்று (ஏப்ரல் 29) நடத்தியுள்ளார் ராகுல் காந்தி. ஜன் ஆக்ரோஷ் அதாவது மக்களின் கோபம் என்று பெயரிடப்பட்ட இந்த பிரம்மாண்டக் கூட்டத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ராம் லீலா மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் திரண்டிருக்கிறார்கள்.
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் இக்கூட்டத்துக்காக டெல்லிக்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து காங்கிரஸின் எட்டு எம்.எல்.ஏ.க்கள், ப.சிதம்பரம்,புதுசேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டர் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘’பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக ஒவ்வொரு தரப்பையும் கடுமையாக பாதித்திருக்கிறார். இந்த ஆட்சியில் ஊழல் இல்லை என்று மார் தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் ரஃபேல் விமானம் வாங்கியது பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. இந்த ஆட்சியில் கல்வித்துறை,நீதித்துறை என்று ஒவ்வொரு துறையிலும் ஆட்சியின் கரங்கள் படர்கின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது. மக்களின் கோபத்தைத்தான் இன்று காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சியில் மக்களின் வேதனையை வெளிப்படுத்தவே இந்த பேரணி’’ என்றார் ராகுல் காந்தி.
முன்னதாகப் பேசிய முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ‘’மோடி ஆட்சியில் நாட்டில் எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. வேலைவாய்ப்பு தருவேன் என்று சொன்ன மோடியை நம்பி ஏமாந்த இளைஞர்கள் இன்று மோடி மீது கோபத்தில் இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டார்.
பலம் காட்டும் காங்கிரஸ்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:35:00
Rating:
No comments: