ஒன்றுபட்டால் மோடியைத் தோற்கடிக்கலாம்!
‘எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டால், மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியிலேயே அவரைத் தோற்கடிக்கலாம்’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப் பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் அங்கு சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும்விதமாக அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்
நேற்று (ஏப்ரல் 8) பெங்களூருவில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மாநகராட்சி சுத்திகரிப்பு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். சாலையோர கடையில் குல்ஃபி ஐஸ் வாங்கிச் சாப்பிட்ட அவர், மெட்ரோ ரயிலிலும் பயணித்தார். புத்தகக் கடை ஒன்றுக்குச் சென்ற ராகுலுக்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா புத்தகங்களை வாங்கி பரிசாக அளித்தார்.
பின்னர் பல தரப்பினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது, “2019 நாடாளுமன்றத் தேர்தலை விடுங்கள்... எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், வாரணாசி தொகுதியிலேயே மோடி தோல்வியைத் தழுவுவார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, 2019இல் நாம் அனைவரும் மீண்டும் சகஜமான நிலைக்குச் சென்றுவிடுவோம்” என்று தெரிவித்தார்.
“உத்தரப் பிரதேசம், பீகார், தமிழ்நாடு, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்க்கும்போது, பாஜக எப்படி தொகுதிகளை வெல்லப் போகிறது என்று தெரியவில்லை. பாஜக இதுவரை சந்தித்திராத பாணியில் வீழ்ச்சியடையப் போவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்தால் வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிபெறும். அதுவும் அதிர்ஷ்டத்தில்தான்.
நீங்கள் (பாஜக) தனிப்பட்ட முறையில் நாட்டை வழிநடத்த முடியாது. நாட்டின் குரலுக்கு செவிகொடுத்து அதன்படி பணி செய்து நாட்டை நடத்த வேண்டும். பசவண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் முன் நின்று அவர்களைப் புகழ்கிறீர்கள். பின்னர், அவர்கள் எதற்காகப் பாடுபட்டார்களோ அவற்றையெல்லாம் அழிக்கிறீர்கள்” என்றும் குறிப்பிட்டார்.
ஒன்றுபட்டால் மோடியைத் தோற்கடிக்கலாம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:42:00
Rating:
No comments: