மோடி அரசின் மற்றொரு சதித்திட்டம்! - வி.களத்தூர் பாரூக்

இந்தியாவை பொறுத்தவரையில் மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக மீனவர்கள் தங்கள் நாட்டு எல்லையில் மீன்பிடிக்கிறார்கள் என்ற காரணம் கூறி சுமார் 600 மேற்பட்ட மீனவர்களை கொன்றுள்ளது இலங்கை. அதே காரணத்திற்காக பல மீனவர்களை கைது செய்தும், அவர்களின் படகுகளை சிறை பிடித்தும் வைத்துள்ளது.

அதேபோல அணுமின் திட்டங்கள், அனல்மின் திட்டங்கள், தொழிற்சாலைகள் என கடலுக்கு அருகில் அமைப்பதால் அதன் கழிவுகள் கடலில் கலந்து கடல் வளம் பாதிக்கப்படுகிறது. முன்பு மிக அருகிலேயே கிடைத்த மீன்களெல்லாம், இப்போது பல மைல் தூரம் சென்று விட்டன.
அதனால் மீன் பிடிக்க மீனவர்கள் உயிரை பணயம் வைத்து கடலில் பல மைல் தூரம் சென்று மீன் பிடித்து வருகிறார்கள். அதில்தான் தற்போது மண்ணை அள்ளிப்போட நினைக்கிறது மோடி அரசு. அதாவது வெளிநாட்டு கப்பல் கம்பெனிகளுக்கு நம் நாட்டு கடல் வளத்தில் மீன் பிடிக்க அனுமதி வழங்க இருக்கிறது.

1991 ஆண்டு முதல் மீன்பிடிக்க வெளிநாட்டு கப்பல் நிறுவனத்திற்கு அனுமதியளிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்தாலும் கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் இந்த சட்டம்  காலாவாதியாகிவிட்டது. காங்கிரஸ் அரசு அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சித்த போது மீனர்வர்களின் கடும் எதிர்ப்பால் அந்த திட்டத்தை வேறு வழியில்லாமல் நிறுத்தி வைத்தது.

தற்போது அந்த சட்டத்தைதான் கடும் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் மோடி அரசு தனியார் கம்பெனி முதலாளிகளுக்கு ஆதரவாக  சட்டமியற்ற துடிக்கிறது. 2014 ல் மீனாகுமாரி தலைமையிலான கமிசன் இரண்டு மாதம் ஆய்வு செய்து தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை மீனவர்களை கொந்தளிக்க செய்துள்ளது. அதில் “மீனவர்கள் 12 நாட்டி கல் மைல்களுக்குள் மீன் பிடித்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு அப்பால் மீனவர்கள் மீன் பிடிக்க கூடாது என்றும் மீறினால் அவர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளது.

அதிலும் குறிப்பாக 12 நாட்டி கல் அப்பால் மீன்பிடிக்க வெளிநாட்டு கப்பல் கம்பெனிகளுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மீனவர்கள் தற்போது மோடி அரசின் இந்த சதி திட்டத்தால் மிகவும் கோபமடைந்துள்ளனர். இந்த சட்டத்தை எதிர்த்து பல போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றனர். நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன்மூலம் மத்திய அரசு மட்டுமில்லாமல், மாநில அரசும் மீனவர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. இந்த சட்டத்தை எதிர்க்காமல் மெளனமாக இருக்கிறது மாநில அரசு.

தேர்தலுக்கு முன்பு மீனவர்களுக்காக தாமரை மாநாடு நடத்தியும், மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்த பாஜக தற்போது வெளிநாட்டு கப்பல் முதலாளிகளுக்காக மீனவர்களின் முதுகில் குத்த துவங்கியுள்ளது.

மீனவர்களின் நண்பனாக காட்டிகொண்ட மோடி. தற்போது மீனவர்களின் எதிரியாக மாறியுள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவனைகூட கைது செய்ய முடியாது என்று பொதுக்கூட்டங்களில் வீர வசனம் பேசிய மோடி. ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து மீனவர்கள் கைது செய்து மட்டுமில்லாமல் அவர்களின் படகையும் பறிமுதல் செய்து வருகிறது இலங்கை. இதற்காக ஒரு கண்டனத்தை கூட மோடி அரசு தெரிவிக்கை வில்லை என்று வேதனைப்படுகின்றனர் மீனவர்கள்.

இந்த தருணத்தில் இந்த அறிக்கையை அமுல்படுத்து மோடி அரசு முயற்சிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.

-வி.களத்தூர் பாரூக்
மோடி அரசின் மற்றொரு சதித்திட்டம்! - வி.களத்தூர் பாரூக் மோடி அரசின் மற்றொரு சதித்திட்டம்!   - வி.களத்தூர் பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 22:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.