“எங்களை இணைத்திருந்தால் 200 தொகுதிகளில் தி.மு.க. ஜெயித்திருக்கும்!” - மனம் திறக்கும் திருமா!


பேட்டி
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சியைப் பிடிப்போம் எனக் களத்தில் இறங்கிய ஆறு கட்சிக் கூட்டணியான மக்கள் நலக் கூட்டணி ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை. ஆனாலும் இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். அவரைச் சந்தித்தோம்.

 ‘‘தேர்தல் முடிவு அதிர்ச்சியளித்ததா?’’

‘‘இது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சித்தான். வாக்குகளை அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் விலை கொடுத்து வாங்கிவிட்டன. எங்கள் அணிக்கு எதிரான ஆதாரமில்லாத மிகவும் அபத்தமான அவதூறுகளைப் பரப்பினார்கள். போலியான கவர்ச்சியான வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். இந்த மூன்று ஆயுதங்களையும் கொண்டு வென்றனர். ‘கொள்கை’ என்ற ஒற்றை ஆயுதத்தோடு நாங்கள் களம் இறங்கினோம். எனவே, எங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.” 

‘‘தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா கூட்டணியின் தோல்விக்கு என்ன காரணம்?’’

‘‘விஜயகாந்த் எங்கள் அணியில் சேர்ந்த பிறகு எங்களின் 6 கட்சி கூட்டணியை அ.தி.மு.க-வின் ‘பி டீம்’; பினாமி அணி என்றார்கள். அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளை எங்கள் அணி சிதறடித்துவிடும் என்று அஞ்சியதால் தி.மு.க இப்படி அவதூறு பரப்பியது. அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளைச் சிதறச் செய்ததில் பா.ம.க-வுக்கும் பங்கு உண்டு. உண்மையிலேயே அ.தி.மு.க-வின் பி டீம் பா.ம.க என்று சொன்னால் அது லாஜிக்படி பொருத்தமாக இருக்கும்.’’ 

 ‘‘தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி இருந்தீர்களே?’’

‘‘தி.மு.க தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல ஆசை. ஆனால், தமிழக அரசியலில், ஒவ்வோர் அசைவுகளையும் தேர்தல் அரசியலோடு முடிச்சுப் போடுவது வழக்கமாக உள்ளது. அரசியல் முடிவு, தேர்தல் உறவு என்பது வேறு.  மனிதாபிமான அடிப்படையில் நட்புறவு பேணுவது வேறு. எனவே, ஊடகம் மூலம் வாழ்த்துச் சொன்னேன்.”

  ‘‘காட்டுமன்னார்கோவில் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குப் போட வேண்டாம் என்று வைகோ சொன்னாராமே?’’

‘‘இது தொடர்பாக வைகோ என்னிடம் தொலைபேசியில் பேசினார். ‘தேர்தல் வழக்குகளில் பெரும்பாலும் நீதி கிடைப்பதில் நீண்ட தாமதம் ஏற்படுகிறது என்றுதான் நான் கூறினேன். ஆனால், உங்களுக்கு எதிராகச் சொன்னதுபோல ஊடகங்கள் திரித்து எழுதிவிட்டார்கள்’ என்று வைகோ என்னிடம் கூறினார். ‘அதை நான் படிக்கும்போதே அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன் அண்ணா’ என்று அவரிடம் கூறினேன். அவருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. 83 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி என்றுதான் முதலில் செய்தி வெளியானது. அடுத்த சில நிமிடங்களில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி என்று அறிவித்துள்ளார்கள். 

கடைசி 2 சுற்றுக்கள் எண்ணுவதற்கு முன்னரே எங்கள் முகவர்களைக் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள். 6-வது சுற்று முதல் 14-வது சுற்றுவரை எண்ணப்பட்ட வாக்குகள், முறைப்படி அவ்வப்போது அதிகாரிகளால் அறிவிக்கப்படவே இல்லை. தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் கலியமலை என்னும் ஊரில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்.’’

 ‘‘பா.ம.க-வைப்போல விடுதலைச் சிறுத்தைகளும் தனித்து நின்றிருக்கலாம் என்று இப்போது நினைக்கிறீர்களா?’’

‘‘இல்லை. பா.ம.க-வுடன் ஒப்பிட்டுப் பார்க்க வில்லை. தலித் சமூகம், அரசியல் ரீதியாக வெகுகாலமாகத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தலித் மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டுதல், பொது நீரோட்டத்தில் இணைந்து செயல்பட வைத்தல் என்பதே எங்கள் முதல் நோக்கமாக இருக்கிறது. ஆகவே, தனித்துப் போட்டியிடுவது எங்களை நாங்களே மீண்டும் தனிமைப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதை ஒரு யுக்தியாக கையாள்கிறோம். தனித்துப் போட்டியிட தயக்கமோ, சிக்கலோ எங்களுக்கு இல்லை. பா.ம.க-வுடன் ஒப்பிட்டால் வட மாவட்டங்களில் மட்டுமல்ல... நாங்கள் தமிழகம் முழுவதும் பரவலாகக் கிளைகளை கொண்டுள்ளோம். 234 தொகுதிகளிலும் கணிசமாக வாக்குவங்கியைப் பெற்றுள்ளோம். ஆனாலும், பொது நீரோட்டத்தில் இணைந்து செயல்பட முக்கியத்துவம் அளிக்கிறோம்.’’



 ‘‘தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளைச்  சேர்த்திருந்தால் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்திருக்கும்?’’

‘‘கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க உடன்பட்டு இருந்திருந்தால் விஜயகாந்த் எங்கள் பக்கம் வந்திருக்கவே மாட்டார். தி.மு.க-வும் ஆட்சியைப் பிடித்திருக்கும். கூட்டணி ஆட்சி என்ற கருத்தை நாங்கள் முன்வைத்ததால்தான் ஓரங்கட்டப் பட்டோம். எங்களை இணைத்திருந்தால் 200 தொகுதிகளில் தி.மு.க ஜெயித்திருக்கும். குறைந்த தொகுதிகளை ஒதுக்கி, நிறைய பயனைப் பெற்றிருக்கும். ஆனால், ஏனோ எங்களை அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. தொடர்ந்துவைத்திருக்க அவர்களுக்கு விருப்பமும் இல்லை. இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் அனுபவமும் பணபலமும் இருந்தது. ஆனாலும், தி.மு.க தோற்றிருக்கிறது. இதுபற்றி தி.மு.க சிந்திக்க, மீளாய்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பை இந்தத் தேர்தல் உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக, கூட்டணி ஆட்சி என்ற கருத்தை ஏற்கப்போகிறதா... இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது. இந்தத் தேர்தலில் எங்களை மக்கள் புறக்கணித்து விட்டர்கள் என்று சொல்ல முடியாது. எங்களின் மாற்று அரசியல் மகத்தானது. எங்களது பயணம் தொய்வின்றித் தொடரும்.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன் 
படம்: மீ.நிவேதன்

http://www.vikatan.com/juniorvikatan/2016-jun-15/politics/120136-thirumavalavan-exclusive-interview.art?artfrm=top_most_read
“எங்களை இணைத்திருந்தால் 200 தொகுதிகளில் தி.மு.க. ஜெயித்திருக்கும்!” - மனம் திறக்கும் திருமா! “எங்களை இணைத்திருந்தால் 200 தொகுதிகளில் தி.மு.க. ஜெயித்திருக்கும்!” - மனம் திறக்கும் திருமா! Reviewed by நமதூர் செய்திகள் on 05:05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.