தடைகள் விதிப்பதால் பிரச்சனைகள் தீருமா? எம்.பாரூக் பதில்கள்.


தனக்கு பாதிப்பு வரக்கூடிய செயல்களை  யாராவது செய்தால் அவர்கள் தொடர்ந்து செயல்படாதவாறு முடக்குவதற்கான  தாக்குதல்களை தொடுப்பார்கள். இதுதான் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மூட நம்பிக்கைக்கு எதிராக சீர்த்திருத்தம்  செய்ய வேண்டி முன்வருபவர்கள் பல்வேறு இன்னல்களையும், துன்பங்களையும் சந்தித்தே வந்திருக்கிறார்கள். இதை வரலாற்றின் பல பக்கங்களில் பார்க்கலாம்.

இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்ய பலபேர் முயன்றுருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அன்றிலிருந்து இன்றுவரை நின்றபாடில்லை. இன்றும் மூட நம்பிக்கைக்கு எதிராக பேசுபவர்கள் படுகொலை செய்யப்படுவதை நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். மூட நம்பிக்கைகள் அற்ற, ஓரிறைக் கொள்கையை பறைசாற்றிய, மனிதன் நேரிடையாக இறைவனிடம் பேசலாம், கேட்கலாம் என்று "புரோகிதம்" இல்லாத மார்க்கமாக இஸ்லாம் பிறந்தது. அப்படிதான் வளர்ந்தது. நபிகள் நாயகம் அவர்களின் காலத்தில் இஸ்லாம் முழுமையாக ஆக்கப்பட்டுவிட்டது. அதற்கு பின் வரக்கூடிய முஸ்லிம்கள் பின்பற்றுவதற்காக இரண்டு விசயங்களை அளித்துவிட்டு சென்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். 

ஒன்று திருமறைக்குர்ஆன், மற்றொன்று நபிகள் நாயகத்தின் வழிமுறைகள். இன்றுவரை அவைகள்தாம் முஸ்லிம்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றன. அவர்களின் வெகு காலத்திற்கு பிறகு அதனின் பெயரால் அதற்கு எதிரான செயல்கள் தொடங்கின. குறிப்பாக இஸ்லாத்தை நேரிடையாக எதிர்க்க முடியாதவர்கள் இஸ்லாத்தின் பெயரைக்கொண்டவர்களை வைத்து சியா, காதியானி போன்ற பிரிவுகள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களிடம் முஸ்லிம்கள் எச்சரிக்கையுடனேயே இருந்து வருகிறார்கள் சிலரை தவிர்த்து. 

இஸ்லாமிய சமூகத்தில் இன்று மார்க்கத்தில் இல்லாத பல விஷயங்கள் இன்று சர்வ சாதாரணமாக எம் முன்னோர்கள் செய்தார்கள் என்ற காரணத்தைக்கொண்டு விடாப்படியாக சிலர் பின்பற்றி வருகிறார்கள். நபிகள் நாயகம் சொல்லித்தராத பல விசயங்களை நடைமுறைகளாக பின்பற்றி வருகிறார்கள். இதுபோன்ற தவறான நடைமுறைகள் மாற்ற வேண்டும் என்று பல அமைப்புகள் முளைத்திருக்கின்றன. இவர்களில் சிலரது தீவிர செயல்பாடுகள் முஸ்லிம் சமூகத்தில் பிரிவினைகளையும், மனக்காயங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. இது மாற்று மதத்தினரிடம் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகிறது. இன்று இஸ்லாமிய அழைப்பு பணிகளில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் அவர்கள் பல கேள்விகளை எதிர்கொள்கிறார்கள். அதில் மிக முக்கியமானது. "உங்கள் மதத்தில் மூட நம்பிக்கை இல்லையா, பிரிவினைகள் இல்லையா" என்பதுதான். இவைகளை களைவதற்கான முயற்சிகளில் நாம் இறங்க வேண்டும்.

இந்த விசயங்களில் சிலர் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவதும், சிறிது சிறிதாக இதை ஒழிக்க முடியும் என்றும் நம்பிக்கை கொண்டு இயங்கி வருகிறார்கள். இஸ்லாத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சில தவறான விசயங்களை மிக நாகரிகமான முறையில் யாரையும் புண்படுத்தாமல் பிரசாரத்தின் மூலமாக செய்ய முடியும் என்று நம்பி செயல்பட்டு வருகிறார்கள். சிலரின் அணுகுமுறைகள் மட்டுமே ஏற்க கூடியதாக இல்லை. அறியாமையில் சிலர் செய்யும் செயல்களை சிறுமைபடுத்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அது அவர்கள் சிந்திப்பதற்கு பதிலாக கோபத்தை தூண்டிவிட்டு விடுகின்றன. இதனால் இதற்கு பலன் கிடைப்பதில்லை.

அதேபோல மக்கள் விழிப்புணர்வு பெரும் வகையில் துண்டு பிரசுரம் செய்வது, கூட்டங்கள் மூலம் மக்களை சந்திப்பது போன்ற செயல்பாடுகள் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் வரவேற்க வேண்டும். அவர்களுக்கு தடைகளையும், தொந்தரவுகளையும் ஏற்படுத்தக்கூடாது. ஒவ்வொருவருக்கும் தனது கருத்தை எத்தி வைக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கி உள்ளது. நீங்கள் செய்வது தவறு என்று ஒருவர் துண்டு பிரசுரத்தின் மூலமாக வெளிப்படுத்தினால்,  இல்லை நாங்கள் செய்வதுதான் சரி என்று நீங்களும் துண்டு பிரசுரம் மூலம் வெளிப்படுத்துங்கள். இரண்டையும் படித்து விட்டு எது சரியோ அதை மக்களே பின்பற்றிக் கொள்ளட்டும். இதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

துண்டு பிரசுரங்கள் வெளியிடக் கூடாது என்று சொல்வது மூலமோ, கூட்டங்கள் நடத்த தடை விதிப்பது மூலமோ, அவர்களை தொந்தரவு செய்வது மூலமோ எதையும் சாதிக்க இயலாது. தண்ணீரில் ஒரு பந்தை எவ்வளவு நேரம் அழுத்தினாலும் இறுதியில் அது பீரிட்டு வெளியே வந்துதான் தீரும். இதுதான் எதார்த்தம்.

- எம்.பாரூக்
தடைகள் விதிப்பதால் பிரச்சனைகள் தீருமா? எம்.பாரூக் பதில்கள். தடைகள் விதிப்பதால் பிரச்சனைகள் தீருமா? எம்.பாரூக் பதில்கள். Reviewed by நமதூர் செய்திகள் on 21:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.