கம்யூனிஸ்ட் கட்சி - 2020 இலக்கு


உழைக்கும் மக்கள் விடுதலை, சமத்துவ சமுதாயம் என்ற இலக்கில் 1920ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வருகிற 2020ஆம் ஆண்டு தனது நூற்றாண்டை முடிக்கிறது. இந்த நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர் மார்க்சிஸ்ட் கட்சியினர். இன்னும் நான்கு ஆண்டுகள் இருந்தாலும் அதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட திட்டமிட்டுள்ளனர்.
‘மற்ற சில கட்சிகளுக்கு விழா என்பது வெறும் சடங்காக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை அது ஓர் உந்து சக்தி. கொல்கத்தா தேசிய மாநாட்டில் கட்சி உறுப்பினர் சேர்ப்பை உறுதியற்ற, தளர்வான தன்மையில் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைப்பது, மக்களுக்கான போராட்டங்களில் துடிப்புடன் இறங்குபவர்களை அடையாளம் கண்டு, துணை குழுக்கள்மூலம் அவர்களை கட்சிக்குள் கொண்டுவருவது, கட்சி அமைப்புச் சட்டம் கூறியுள்ள 5 அம்ச அளவுகோலின் அடிப்படையில் உறுப்பினர்களைப் புதுப்பிப்பது, துணை குழுக்களை முறையாகச் செயல்படுத்துவது, அவர்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களாகத் தயாராகும்விதத்தில் மார்க்சீய லெனினியத்தைப் போதிப்பது, வர்க்க வெகுஜன அமைப்புகளில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபடுவதை உறுதி செய்வது, கமிட்டிகளில் குறிப்பாக உயர்நிலை கமிட்டிகளில் வர்க்க மற்றும் சமூக சேர்க்கையை மேம்படுத்துவது, அடுத்த 3 ஆண்டுகளில் கட்சியில் பெண்களின் எண்ணிக்கை 25 சதவிகிதத்தை எட்டக்கூடியதத்தில் அதிகரிப்பதை உறுதி செய்வது, இளைஞர்களை ஈர்க்கக்கூடிய விதத்தில் கட்சியின் நிகழ்ச்சிகளையும், நடவடிக்கைகளையும் தகவமைத்து, கட்சியில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதை உறுதி செய்வது, முறையான ஊழியர் கொள்கையை உருவாக்கி, இளம் தோழர்களை அடையாளம்கண்டு பொறுப்புகளுக்கு உயர்த்துவது, தோழர்கள் குறித்த மதிப்பீட்டை கூட்டாக உருவாக்கி அதன் அடிப்படையில் பணிகளை ஒதுக்கீடு செய்வது, புரட்சிகர மாற்றத்துக்காக தியாகச் சமர் புரிந்து, சித்தாந்தப் பிடிப்பின் அடையாளமாகத் திகழும்விதத்தில் முழுநேர ஊழியர்களை வளர்ப்பது போன்ற திட்டமிடல்களை தீவிரப்படுத்தவுள்ளோம்.
மேலும், ‘மகத்தான கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக தீக்கதிர் கடந்த 50 ஆண்டுகளாக மாபெரும் சேவையைச் செய்துவருகிறது . தீக்கதிர் பத்திரிகை மதுரையில் ஆரம்பித்து சென்னை வந்து கோவை சென்று இப்போது திருச்சிராப்பள்ளியில் நான்காவது பதிப்பைத் தொடங்கி நடத்திக்கொண்டு இருக்கிறது. மக்கள் இயக்கத்தை வளர்ப்பதில் தீக்கதிரின் பங்கு அளவிடமுடியாதது. தமிழ்நாட்டின் அரசியல் வாழ்க்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் மேலும்மேலும் நிச்சயமான பங்கை, பணியை ஆற்றும்வகையில் தீக்கதிரையும் மற்ற ஏடுகளான செம்மலர், மார்க்சிஸ்ட் போன்ற இதழ்களையும் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் பரப்புவதும் விற்பனை செய்வதும் நமது கடமையாகும்’ என்று முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா தெரிவித்துள்ளார்.
எனவே, கட்சி ஏடுகளைப் பரப்புவது போன்ற பணிகளையும் தொடர்கிறோம். தமிழகத்திலும், புதுவையிலும் ஒரு லட்சத்துக்கு அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அதை பல லட்சங்களாகப் பெருக்கி, நூற்றாண்டை நோக்கி நடைபோடுகிறோம்’ என்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சி - 2020 இலக்கு கம்யூனிஸ்ட் கட்சி - 2020 இலக்கு Reviewed by நமதூர் செய்திகள் on 02:24:00 Rating: 5

No comments:

Powered by Blogger.