பறிக்கப்படுகிறதா தமிழக மாணவர்களின் உயர்கல்வி?

மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் வெளிமாநிலங்களில் பிளஸ் 2 படிப்பை முடித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ் சீட் வழங்கப்பட்டு வருகிறது. ' தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன்களுக்கு இது எதிரானது. நமது மாணவர்களின் உயர்கல்வி உரிமையை அரசு தட்டிப் பறிக்கிறது' எனக் கொந்தளிக்கின்றனர் கல்வியாளர்கள். 

பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு பிறகு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில், முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களில் இரண்டு பேர் பிளஸ் 2 படிப்பை ஆந்திராவில் நிறைவு செய்திருக்கிறார்கள். அதேபோல், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. மருத்துவக் கலந்தாய்வில் முதலிடம் பிடித்த மாணவி ஒருவர், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்று படிப்பை முடித்துள்ளார். அவரது வீட்டில் இருந்து கேரளா செல்வதற்கு அரை மணி நேரம் போதுமானது என்பதால், பத்தாம் வகுப்புக்குப் பிறகு பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புகளை கேரளாவில் நிறைவு செய்திருக்கிறார்.

" மருத்துவம் மற்றும் பொறியியல் கலந்தாய்வில் இதுபோன்ற சர்ச்சை எழுப்பப்படுவது இதுதான் முதன்முறை. இதற்கு முன்பு இப்படியொரு கேள்வி எழுந்ததில்லை. நமது மாநிலத்தின் பாடத்திட்டத்திற்கும் பிற மாநிலங்களின் பாடத்திட்டத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் நேரத்தில், வெளிமாநிலத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தவறான முன்னுதாரணம்" எனக் கொந்தளிக்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. 

மேலும் அவர் நம்மிடம், " பத்தாம் வகுப்பு வரையில் தமிழ்நாட்டில் படித்த ஒரு மாணவி, அடுத்த இரண்டாண்டுகள் வெளிமாநிலத்தில் படித்தால், அவரை எப்படி நேட்டிவிட்டி உள்ளவராகக் கருத முடியும்? இதன் மூலம் தமிழக மாணவர் ஒருவரின் உயர்கல்வி வாய்ப்பை அந்த மாணவி தட்டிப் பறிக்கிறார். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பிளஸ் 2 வகுப்பில் ஐந்து பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் என ஐந்து வகுப்புகள் அங்கு செயல்படுகின்றன. இவர்களுக்கு வகுப்பறைக் கல்வியை விடவும் உயர் கல்வியில் சேருவதற்கான கோச்சிங் வகுப்புகள் அதிகளவில் நடத்தப்படுகின்றன.

நமது ஊரில் ஆறு வகுப்புகள் செயல்படுகின்றன. உயர்கல்வியில் சேருவதற்கான கோச்சிங் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. இதனால் அந்த மாணவர்களோடு நமது மாணவர்கள் கடுமையாக போட்டிப் போடுகின்றனர். மருத்துவக் கலந்தாய்வில் மாநில அரசுக்கு 85 சதவீதமும் மத்திய அரசுக்கு 15 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீட்டில், வெளி மாநிலத்தில் படித்த தமிழக மாணவர்களை அனுமதிப்பது என்பது முற்றிலும் தவறானது. அரசின் உயர்கல்வித் துறை இதனை அனுமதிக்கிறதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்றார் விரிவாக. 

ஆனால், உயர்கல்வித் துறை அதிகாரிகளோ, " கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையெனில் மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இருப்பிடச் சான்றிதழைக் காட்டினாலே போதுமானது. அதன்படிதான் கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள்" என்கின்றனர். 

'மருத்துவம் உள்ளிட்ட உயர்படிப்புகளில் கிராமப்புற ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்' என்ற குரல் காலம்காலமாக ஒலித்து வருகிறது. இப்போது எழுந்துள்ள வெளிமாநில சர்ச்சை எப்போது ஓயும்? எனக் கேள்வி எழுப்புகிறார்கள் பெற்றோர்கள். 

ஆ.விஜயானந்த் 
பறிக்கப்படுகிறதா தமிழக மாணவர்களின் உயர்கல்வி? பறிக்கப்படுகிறதா தமிழக மாணவர்களின் உயர்கல்வி? Reviewed by நமதூர் செய்திகள் on 06:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.