"மாற்று" கோசம் ஏன் வெற்றிபெறவில்லை! - வி.களத்தூர் எம்.பாரூக்


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பல விசித்திரங்களை கொண்டது. இதற்கு முன் இல்லாத அளவிற்கு பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இதுவரைக்கும் நடந்த தேர்தல்கள் போல் அல்லாமல் பல கட்சிகளும் தனித்தும் அல்லது தனி அணி அமைத்தும் போட்டியிட்ட இத்தேர்தல் வரலாற்றில் இடம்பெறக்கூடிய தேர்தலாக அமைந்துவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக, திமுக என்ற இரு அணிதான் பிரதானமாக போட்டியிடும். சில நேரங்களில் மூன்றாம் அணியும் போட்டியிட்டுருக்கிறது. 1989 ல் காங்கிரசும், 1991, 1996 ல் பாமகவும், 1996, 2001 ல் மதிமுகவும், 2006 ல் தேமுதிகவும் தனித்து இரண்டு கட்சிகளுக்கு போட்டியாக களத்தில் நின்றுயிருக்கின்றன. சில தேர்தல்களில் இந்த முயற்சி ஓரளவு வென்றும் இருக்கிறது.

2016 சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகளும் முதல் அமைச்சர் வேட்பாளர்களை அறிவித்து களம் கண்டன. அதிக 'முதல் அமைச்சர்' வேட்பாளர்களை கண்ட தேர்தல் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். அதிமுக, திமுக ஆண்ட இந்த ஐம்பது வருடங்களில் தமிழகம் மிகவும் பின்னோக்கி சென்று விட்டதாகவும், ஊழல் மலிந்துவிட்டதாகும் மிகப்பெரிய அளவில் பிரசாரங்கள் செய்யப்பட்டன. தமிழகம் சந்தித்து கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அந்த இரு கட்சிகளை சாடியே பெரும்பாலான கட்சிகளும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.

தேர்தல் களத்தில் அதிமுக அணி, திமுக அணி, மக்கள் நலக் கூட்டணி தேமுதிக அணி, பாஜக அணி, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சில சிறு கட்சிகளும் தங்களால் முடிந்த அளவில் ஒரு அணிகளை கட்டி எழுப்பினார்கள். உதாரணமாக சிங்க கூட்டணி, சமூக நல கூட்டணி போன்ற அணிகளும், தனித்து காந்திய மக்கள் கட்சி, கொதேமக உட்பட பல கட்சிகளும் போட்டியிட்டன. 

தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகளாக கோலோய்சிக்கொண்டிருக்கும் அதிமுக, திமுக போன்ற கட்சிகள்கூட இவர்களால் யாருக்கு பாதிப்பு ஏற்படப்போகிறது என்று ஒருவித அச்சத்துடனே பார்த்தன. இந்த இரு பெரிய கட்சிகளின் ஆதிக்கம் இனி குறையும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழக தேர்தல் களம் என்கிற சக்கரம் அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளை மட்டுமே சுற்றிவரும் என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த தேர்தலில் அதிகம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது மக்கள் நலக் கூட்டணிதான். தேர்தலுக்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பாக அதற்கான விதை போடப்பட்டது.

அப்பொழுது முதல் பலரது பாராட்டையும், ஆதரவையும் பெற்றது. இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் மக்கள் நலனுக்கான பல்வேறு போராட்டங்கள் நடத்தி இருப்பதால் அவர்கள் முன்வைத்த கூட்டணி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மாற்றத்தை விரும்பக்கூடிய இளைஞர்களிடம். தேர்தல் அரசியலின் தவறான வியூகங்கள் அவர்களையும் விட்டுவைக்கவில்லை. விளைவு யாரும் எதிர்பார்க்காத கடுமையான வீழ்ச்சியை சந்தித்தனர்.

இரு பெரும் கட்சிகளை வீழ்த்த திமுக, பாஜக  கட்சிகளிடம் பேரம் பேசிக் கொண்டிருந்த தேமுதிகவையும், அதிமுகவின் கடைக்கண் பார்வைக்காக கடைசி வரை ஏங்கி நின்ற தமாகாவையும் இணைத்துக்கொண்டது பெரிய தவறு. அதுமுதலே பல்வேறு விமர்ச்சனங்களை சந்திக்க நேர்ந்தது. அக்கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட விஜயகாந்த் அதிமுக, திமுக விலிருந்து எவ்வகையில் மாற்று என்ற பலரின் கேள்விக்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் மக்கள் அவரை ஒரு மாற்றாக அங்கீகரிக்கவே இல்லை. 

தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் இதுவரை மக்களை ஒருங்கிணைத்து பெரிய போராட்டத்தினை அவர் மேற்கொண்டதில்லை போன்ற காரணங்களால் அவரின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே வந்தது. 2006 ல் அவர் தனித்து நின்று வாங்கியது 8.4% வாக்குகள். 2011 அதிமுகவுடன் இணைந்து பெற்ற வாக்குகள் 7.88%. தற்போது அந்த கட்சி 104 இடங்களில் போட்டியிட்டு 2.4% வாக்குகளே பெற்றுள்ளது. இதில் 103 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. இதுவே தேமுதிகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதை தெளிவாக காட்டுகிறது. அதனால்தான் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் அதன் நிர்வாகிகள் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து நின்று கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று விஜயகாந்தை வற்புறுத்தி இருக்கிறார்கள்.

தனது பங்கிற்கு வைகோ அக்கூட்டணிக்கு பெருத்த அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார். தேர்தல் பிரச்சாரம் முழுக்க அதிமுகவை விட திமுகவையே கடுமையாக அவர் சாடியது மக்கள் நலக் கூட்டணி அதிமுகவின் பீ டீம் என்ற திமுகவின் பிரசாரத்திற்கு வலுசேர்த்துவிட்டது. கலைஞர் கருணாநிதியை சாதியை சொல்லி வசைபாடியது, கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியது போன்ற சம்பவங்கள் அக்கூட்டணியின் நம்பகத்தன்மையை சிதைத்துவிட்டது. தவறான 'தேர்தல் வியூகங்களுக்கு' பெயர் போன வைகோ வை ஒருங்கிணைப்பாளராக அறிவித்ததே முதல் சறுக்கல். 

திருமாவளவனை ஒருங்கிணைப்பாளராக அல்லது முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்திருந்தால் இக்கூட்டணிக்கு வலு சேர்த்திருக்கும். இதுபோன்ற பல்வேறு காரணிகளால் பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய மக்கள் நலக் கூட்டணி தேர்தலில் பெரும் பாதிப்பை சந்தித்தது. வரும் தேர்தல்களில் இக்கூட்டணி தொடருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். கூட்டணியின் தலைவர்கள் தொடர விரும்பினாலும் தொண்டர்கள் விரும்பமாட்டார்கள் என்பதே எதார்த்தம். ஏனென்றால் இந்த சட்டமன்ற தேர்தலிலேயே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் வாக்கு மற்றொரு கட்சிக்கு விழவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. 

இந்த தேர்தலில் 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி" என்ற புதிய கவர்ச்சிகர கோசத்துடன் ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்த கட்சி பாமக. இருபெரும் கட்சிகளையும் வீழ்த்தும் அரிதாரமாக நினைத்துக்கொண்டு அன்புமணியை முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து மற்றவர்களை விட மிகவேகமாக முன்னோக்கி சென்றார்கள். பல புதுமையான தேர்தல் உத்திகளை புகுத்தி தேர்தல் களம் கண்டார்கள். தனது சாதி அரசியலை மூடி மறைக்க பெரிய முயற்சியை செய்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. 

பல இடங்களில் வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்று சாதீ பிராச்சரங்களை செய்தார்கள். மாநிலம் தழுவிய கட்சியாகவும் வளர முடியவில்லை. வட மாவட்டங்களில் மட்டுமே அக்கட்சி சிறப்பான வாக்குகளை பெற்றது. மற்ற இடங்களில் மக்கள் அந்த கட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக கார்பரேட் கம்பனி உதவியுடன் பல கோடிகளை இறைத்தும் அந்த கட்சியால் 5.3% வாக்குகளையே பெற்றுள்ளது. வாக்குகளின் அடிப்படையில் மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளது. இதுவே பெரிய வெற்றியாக அன்புமணி ராமதாஸ் சொல்கிறார். இந்த முயற்சி வரும் தேர்தலிலும் தொடரும் என்று கூறுகிறார். 

அரசியல் பார்வையாளர்களும் பாமக தனது செல்வாக்கை தக்க வைத்துள்ளது என்பதாகவும் இதுவே அவர்களுக்கு பெரிய வெற்றி என்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் பாமகவின் ஆரம்ப கால தேர்தல் வரலாற்றிலிருந்து பார்த்தோமையானால் பாமகவிற்கு இந்த தேர்தலில் சிறிய சறுக்கல் என்பது புலன்படுகிறது. 1991 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் வென்றது. 1996 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நான்கு இடத்தில் வென்றது. அப்போதே அதன் வாக்கு வங்கி 4-5% ஆகும். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் 5.23% வாக்குகளை பெற்றது. அதே வாக்கைதான் தற்போதும் பெற்றுள்ளது. 

ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினரைகூட பெறவில்லை. பாமகவின் கோட்டை என்று சொல்லப்படுகிற பென்னாகரத்தில் போட்டியிட்ட பாமகவின் முதல் அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இத்தனைக்கும் இத்தேர்தலில்தான் தனது எல்லாவிதமான சக்தியையும் பயன்படுத்தி முழு பலத்துடன் களம் இறங்கியது பாமக. அதிமுக, திமுகவிற்கு அடுத்து அதிக பணத்தை செலவழித்தும் இருக்கிறது பாமக விற்கு 5.3% வாக்கு வங்கிதான் அதற்கு உச்சபட்சம் என்பதை மக்கள் சரியாக உணர்த்தி விட்டார்கள். வரும் காலத்திலும் இதற்குமேல் பெற வாய்ப்புகள் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தனித்து நின்றாலும் அன்புமணியின் முதல்வர் கனவு வெறும் கனவாகவே இருக்கும்.

இதேபோல் திராவிடத்தை வீழ்த்துவோம் என்று புறப்பட்ட நாம் தமிழக கட்சியும் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது. 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 1.1% வாக்குகளையே பெற்றுள்ளது. இதுவே பெரிய வெற்றியாக அக்கட்சியினர் பார்க்கிறார்கள். அவர்களின் கடுமையான உழைப்பிற்கும், தமிழினம் சந்திக்கும் பிரச்சனைகள் சார்ந்த செயல்பாடுகளுக்கும் கிடைத்த வெற்றியாக இதை பார்க்கலாம். மற்றபடி இரு பெரும் கட்சிகளை வீழ்த்தும் வலிமை என்பது இவர்களிடம் இல்லை. வரும்காலத்திலும் இதே நிலை தான் தொடரும். தற்போதே இவர்களின் சர்ச்சையான பேச்சுகளாலும், செயல்பாடுகளாலும் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இது அவர்களுக்கு தேர்தல் களத்தில் பாதிப்பையே ஏற்படுத்தும்.

பாஜக கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள். சிறு கட்சிகளின் கூட்டணியுடன் 2.8% வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலேயே 2.22% வாக்குகளை பெற்ற்றது. இந்த தேர்தலில் அவர்களின் வாக்கில் சிறிது சறுக்கல் ஏற்பட்டுள்ளது.  சென்னை, கோவை, குமரி மாவட்டகளில் மட்டும் இக்கூட்டணி ஓரளவு வாக்குகளை பெற்றுள்ளது. மற்றபடி இவர்களுக்கு வேறு எங்கும் செல்வாக்கு இல்லை என்பது தேர்தல் முடிவு உணர்த்துகிறது. மத்திய அரசின் விளம்பரமும், மோடி மேஜிக்கும் இங்கு எடுபடாது என்பது மீண்டும் ஒருமுறை மக்கள் உணர்த்தியுள்ளனர். நோட்டா 1.3% வாக்குகளை பெற்றுள்ளது. வாக்குகளின் பட்டியலில் 7  வது இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்துதான் பல கட்சிகளும் நிற்கின்றன. 

இந்த தேர்தலில் மாற்றத்தை முன்வைத்து பல கட்சிகள் களம் கண்டன. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதற்கு தமிழக மக்களை மட்டும் குறை காண முடியாது. பணத்தை இறைத்து அதிமுக, திமுக பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கின்றனர் என்று தேர்தலில் தோற்ற பல கட்சிகளின் தலைவர்களும் குற்றம் சாட்டுகின்றனர். 

அதிமுக, திமுக மட்டும் 80% வாக்குகளை பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் பணத்திற்காகத்தான் வாக்களித்தார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. அது ஒரு சிறு காரணம் அவ்வளவே. இருபெரும் கட்சிகளை வீழ்த்தும் பொருட்டு தனது கட்சியை அமைப்பு ரீதியாக யாரும் இங்கு வளர்க்கவில்லை. தொண்டர்களிடமும் போதிய தயாரிப்பில்லை. பல கட்சிகள் மக்களை நெருங்ககூட இல்லை. தமிழக வீதிகளில் சுற்றி சுழன்ற 'மாற்று' என்ற கோசம், 'வெற்று' கோசமாக இருந்ததால் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்.

- வி.களத்தூர் எம்.பாரூக்
"மாற்று" கோசம் ஏன் வெற்றிபெறவில்லை! - வி.களத்தூர் எம்.பாரூக் "மாற்று" கோசம் ஏன் வெற்றிபெறவில்லை! - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 06:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.