தமிழகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்!!

ஜாக்டோ-ஜியோ என்ற அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புகள் 9 அம்சக் கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும், போரட்டங்களையும் மேற்கொண்டுள்ளன.
இந்தப் போராட்டம் அரசு மற்றும் இந்துந்துவா ஆதரவாளர்களாரலும், தனியார் பள்ளி முதலாளிகளாலும் திட்டமிட்டு "ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்கியும் பத்தாது என்று போராட்டம் நடத்துகிறார்கள், அவர்களுக்கு சம்பளத்தை கூடுதலாகக் கொடுத்தால் பிற துறைகள் ஒழுங்காக இயங்காது. அரசு பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும்" என்றெல்லாம் சொல்லி மக்களை போராட்டத்திற்கு எதிரான மனநிலைக்கு கொண்டு செல்கின்றனர்.
jacto geo velloreஇந்த அவதூறுப் பிரச்சாரம் வெற்றியும் அடைந்துள்ளது என்பதுதான் உண்மை. சாதாரண மக்களிலிருந்து படித்த மேதாவிகள் என தன்னை எண்ணிக்கொள்பவர்கள் வரை இருக்குற‌ சம்பளம் போதாதுன்னா வேலையை விட்டுப் போ, வேலையில்லாதவனுக்கு வேலை கொடுப்போம் என்கிறார்கள்.
இந்த போராட்டப் பிரச்சனையே இங்கிருந்துதான் உருவானது. ஆசிரியர்கள் பற்றாக்குறை என படித்த தகுதியான பட்டதாரிகளை தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் வேலைக்கு எடுத்து அவர்களை பல ஆண்டுகள் குறைந்த சம்பளத்தில் வேலையை மட்டும் அதிகம் வாங்கிய பிறகு சட்டப்படி பணி நிரந்தரம் செய்யாமல் இருந்தது. பணி நிரந்தரம் செய்யக் கோரி பல மனுக்கள் கொடுத்தும் பலனில்லாமல் நீதிமன்றம் படியேறியும், சில போராட்டங்களின் மூலமும் போராடி பணிநிரந்தரம் செய்யப்படும்போது அவரைப் புதிதாக வந்தவர் இடத்தில் அரசு வைத்து அரசு ஊழியர்கள் மீதான முதல் சுரண்டலை செய்கிறது.
இதுபோல் அரசு செய்யக்கூடாது என்றும், பணியில் சேர்ந்த நாளைத்தான் அவரின் பணிநாளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்த நாளை பணியில் சேர்ந்த நாளாக எடுத்துக்கொண்டால் அவரது சீனியாரிட்டி பாதிக்கப்படும் என்றும், அது உழைப்பு சுரண்டல் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு 2004க்கு முன்பு பலர் தங்கள் சீனியாரிட்டியை மீட்டுள்ளனர்.
அதை கோரிக்கையாக வைத்து இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக மனுமேல் மனு அளித்துப் பார்த்தனர். அடையாள போராட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் என பல வழிகளில் போராடிப் பார்த்தனர்.
அரசு அவர்களின் கோரிக்கைகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
இப்போது ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணமாக தற்காலிக ஆசிரியர்கள் எடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு பணிநிரந்தரம் செய்யப் போராடுவார்கள். பணி நிரந்தரம் செய்யப்பட்டால் ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப் போராடுவார்கள். இது தொடரும்.
அப்போதும் நடுநிலைமை என்ற ஒரு மக்கள் விரோதக் கூட்டம் 'போராட்டம் தவறு' என்று அரசு ஊழியர்கள் மீது அவதூறு பரப்பும்.
இதுபோல் தங்களுக்கு செய்யப்படும் ஓர் அநீதிக்காக போராடுவது குற்றமா?
இரண்டாவது பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். முன்னர் இருந்த ஓய்வூதியம் முறையாக செயல்படுத்தப்பட்டது. அதனால் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஓரளவு பயன்பெற்றனர்.
ஆனால் 2004 ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியம் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. அது தொழிலாளர் அரசு பங்களிப்போடு தரும் ஓய்வூதியம் என்று சொன்னது. அந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்தவே இல்லை. கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாய் தொழிலாளர்கள் பணத்தை அரசு முறையாக பராமரிக்காமல் MGR நூற்றாண்டு விழா போன்ற கண்ட விழாக்கெல்லாம் செலவு செய்துவிட்டு, ஓய்வூதியத்தை அரசு ஊழியர்கள் கேட்டால் வடிவேலு பாணியில் "செலவு பண்ணிட்டேன்" என்கிறது.
இன்று வரை 3500 பேருக்கு மேல் பணி ஓய்வு பெற்றும், 1800 பேருக்கு மேல் இறந்தும் அவர்களின் பணி ஓய்வுத் தொகையில் ஒத்த ரூபாய் கூட பெறவில்லை. மகளின் திருமணத்திற்கோ, படிப்பு செலவிற்கோ, தொழில் தொடங்குவதற்காகவோ ஓய்வுபெற்றால் பணம் வரும் என நம்பி VRS கொடுத்தவர்கள் அதிகம். ஆனால் அவர்கள் இன்று வரை ஓய்வூதியம் பெறவேயில்லை.
அந்த குடும்பங்கள் இந்த காரணத்திற்காக செத்தால் இந்த நடுநிலை சமூகம் நீலிக்கண்ணீர் வடிக்கும். போராடினால் அவர்கள் மீதே வன்மத்தைக் கக்கும்.
3500 பள்ளிகளில் மாணவர்கள் இல்லை என மூடப் போகிறார்களாம். இதுநாள் வரை படித்த மாணவர்கள் எங்கே போயினர்? எல்லாரும் தனியார் பள்ளிக்கு சென்றுவிட்டனர்.
அரசின் கடமை என்ன? எல்லாருக்கும் கல்வி கொடுப்பது. ஆனால் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக அரசுப் பள்ளியை ஒழுங்காகப் பராமரிப்பதே இல்லை, அதற்காக நிதி ஒதுக்குவதில்லை. காரணம் தனியார் பள்ளிகளை நடத்துவதே இந்த ஆட்சியாளர்கள்தானே.
தங்கள் கல்வி வியாபாரம் தடை இல்லாமல் நடக்க அரசு பள்ளிகள் மூடப்படவேண்டும். அதற்கு தடையாக பல இடங்களில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ ஈடுபாடுடைய ஆசிரியர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையை ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்த்தி வருகின்றனர்.
ஏர்போர்ட்டையும், எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் முறையாகப் பராமரிக்க முடிந்த அரசால் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பராமரிக்காமல் விடுவதன் நோக்கத்தை உணருங்கள். எல்லாம் தனியார்நலன், உயர்வர்க்க நலன்.
சாதாரண மக்களின் நலனுக்கான அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது என போராடுவது தவறா?
இப்படியாக‌ அரசு ஊழியர்களின் போராட்டம் என்பது உரிமைக்காகவும், அரசு பள்ளிக் கட்டமைப்பை காக்கும் முயற்சிக்காக நடத்தப்படும் போராட்டமாகும். இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய ஊதாரி செலவு செய்யும் அரசும், தனியார் பள்ளி முதலாளிகளும், அதன் அடிவருடிகளும், மக்களுக்கு விரோதமான சங்கிகளும், ஒரு மண்ணும் தெரியாமல் தங்களை அறிவாளிகளாக எண்ணிக் கொள்ளளும் நடுநிலை நக்கிகளும் மக்களிடம் திட்டமிட்டு போராட்டத்தின் மீதான வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இதனை முறியடிக்க வேண்டியது முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் கடமை.
கொஞ்ச நாளைக்கு முன்பு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு வங்கி ஊழியர்கள் போராட்டம் நடந்தது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப் போராடுகிறார்கள். கல்வி உரிமைக்காக மாணவர்கள் போராடுகிறார்கள்.
.அவை ஒவ்வொன்றும் ஆளும்வர்க்க அடிவருடிகளின் பொய்ப் பிரச்சாரத்தாலும், அரசு அடக்குமுறையாலும் நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன. காரணம் இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த துறை சார்ந்தவர்களைத் தாண்டி செல்வதேயில்லை.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் மக்கள் தொகையில் இவர்களே பெரும்பான்மையினர். ஒவ்வொருவரும் போராடுகிறார்கள். ஆனால் ஒரு துறை போராட்டத்தின்போது மற்ற துறையினர் பொதுமக்கள் என்றும், போராட்டத்தால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றும் விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
அதனை முறியடிக்கும் வேலையை ஓட்டுக்கட்சிகள் செய்வதே இல்லை. காரணம் எல்லாம் பாழாய்ப் போன ஓட்டுக்காக. இதனை எல்லாம் தாண்டி ஒரு துறையினர் போராடும்போது மற்ற துறையினர் அவர்களுக்கு ஆதரவளித்து போராட்டத்தில் இறங்கும்போதுதான் அரசு ஸ்தம்பிக்கும், பயம் ஏற்படும், மக்கள் விரோத நடவடிக்கைகள் கைவிடப்படும், உண்மையான மக்களாட்சி ஏற்படும்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் அரசு தீவிரமான மிரட்டல்களை, போராடும் ஆசிரியர்களுக்குக் கொடுத்து வருகிறது.
அனைத்து துறையின் தொழிலாளர்களும் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்தால் மட்டுமே ஆளும்வர்க்கத் அடக்குமுறையிலிருந்து தொழிலாளர் வர்க்கம் தற்காத்துக் கொள்ள முடியும்.
தமிழகத் தொழிளார்களே! ஒன்று சேருங்கள்!!
- திராவிடன் தமிழ்
http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36557-2019-01-29-06-11-34
தமிழகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்!! தமிழகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்!! Reviewed by நமதூர் செய்திகள் on 02:50:00 Rating: 5

1 comment:

  1. கட்டுரையை உங்கள் வலைதளத்தில் வெளியிட்டு ஆதரவளித்தமைக்கு நன்றி.-திராவிடன் தமிழ.

    ReplyDelete

Powered by Blogger.