ஓ.பி.சி இட ஒதுக்கீடு: காங்கிரஸின் புதிய வாக்குறுதி!

ஓ.பி.சி இட ஒதுக்கீடு: காங்கிரஸின் புதிய வாக்குறுதி!

முன்னேறிய சமூகத்தினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவித்துள்ள பாஜகவுக்கு போட்டியாக பிற்படுத்தப்பட்டோருக்கு 52 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற முழக்கத்தை தேர்தல் வாக்குறுதியாக அளிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே முழுமையாக உள்ளன. தேர்தலையொட்டி வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடும் பணியை பிரதமர் மோடி ஏற்கெனவே தொடங்கிவிட்டர். பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாநில கட்சிகளும் பெருமளவில் ஒன்றுதிரண்டு வருகின்றன.
இந்த சூழலில் நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர, அவர்களுக்கு 52 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை தேர்தல் வாக்குறுதியாக அளிப்பதற்கான சிந்தனையில் காங்கிரஸ் கட்சி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது.
50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு செல்லக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நடைமுறையில் இருப்பதால், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த முடியாமல் இருந்தது. இந்நிலையில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வரம்பை மீறும் விதமாக முன்னேறிய சமூகத்தினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக தாக்கல் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
எனவே 50 விழுக்காட்டு வரம்பை மீறுவதாக இருந்தால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் 50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற குரல்கள் வட மாநிலங்களில் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்த பரிசீலனைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. பல்வேறு வல்லுநர்கள் மற்றும் ஆலோசனை அமைப்புகளுடன் இதுகுறித்த பரிந்துரைகளை காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளதாக அக்கட்சியின் முத்த தலைவர் ஒருவர் தி பிரிண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க பாஜக முடிவெடுத்திருப்பது நாடு முழுவதும் இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களிடம் கோபத்தைத் தூண்டியுள்ளது என்பதும், இதை சரியாகப் பயன்படுத்தினால் பிற்படுத்தப்பட்ட மக்களின் பெரும்பான்மை வாக்குகளைக் கவரலாம் என்பது காங்கிரஸின் கணக்காக உள்ளது. தி பிரிண்ட் ஊடகத்திடம் இதுபற்றி பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மேலும் கூறுகையில், “முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க பாஜக முடிவெடுத்திருப்பதன் மூலம் 50 விழுக்காடு வரம்பை தற்போது தாண்டியுள்ளது. எனவே ஏன் அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என பல்வேறு நிபுணர்களும் தற்போது கேள்வியெழுப்பி வருகின்றனர். அதுகுறித்த பரிந்துரைகளையும், ஆய்வுகளையும் பெற்று வருகிறோம்” என்றார்.
பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றிடமும் இதற்கான ஆலோசனைகளைப் பெறும் பணியில் காங்கிரஸின் ஆய்வுப் பிரிவும், தேர்தல் பிரிவும் ஈடுபட்டுள்ளன. ”2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததில் பிற்படுத்தப்பட்டோரின் வாக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக மோடி இருந்ததும் பாஜகவுக்கு சாதகமாகப் பயன்பட்டது” என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியுள்ளார்.
அதேசமயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதி வாரியாகத் தீர்மானிப்பதும் மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது. இதற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய ஆய்வெடுப்பை நடத்த வேண்டியுள்ளது. மண்டல் அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியலில் நாடு முழுவதும் 1932 ஜாதிகள் உள்ளன. மக்கள்தொகையில் சுமார் 52 விழுக்காடாகும். அதைக்கொண்டே காங்கிரஸ் 52 விழுக்காடு என்ற எண்ணிக்கையை அறிவிக்க ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. ஆனால் 2006ஆம் ஆண்டு வெளியான தேசிய மாதிரி ஆய்வின் படி பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை எண்ணிக்கை 40.94ஆக உள்ளது. அதற்குப் பிறகு கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை 54 விழுக்காடாக உயர்ந்துவிட்டதாகவும் விவாதங்கள் எழுந்தன.
காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இதை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், தேர்தல் வாக்குறுதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 52 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற முழக்கத்தை காங்கிரஸ் வைக்குமானால் அது பாரதிய ஜனதாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எது எப்படியோ பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேசிய அளவில் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://minnambalam.com/k/2019/01/23/38
ஓ.பி.சி இட ஒதுக்கீடு: காங்கிரஸின் புதிய வாக்குறுதி! ஓ.பி.சி இட ஒதுக்கீடு: காங்கிரஸின் புதிய வாக்குறுதி! Reviewed by நமதூர் செய்திகள் on 00:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.