விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம்!






'என் வாழ்க்கைச் சாதனங்களை நீ பறித்துக் கொள்ளும்போது என் உயிரையே பறித்தவனாகிறாய்' கவிஞர் பியரி யின் புகழ்பெற்ற கவிதை இது. விவசாயிகளின் வாழ்க்கையாகவும், உயிராகவும் இருப்பது அவர்களுடைய நிலம்தான். நிலங்களை விவசாயிகள் இழக்க நேரிடும்போது அது அவர்களின் உயிரை பறிப்பது போன்ற வேதனையை உணர்கின்றார்கள். அதனால்தான் விவசாயிகளின் நிலங்களின் வழியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. அதை எதிர்த்து போராடுகிறார்கள்.

1947 ஆம் ஆண்டிலிருந்து 2004 வரை 6 கோடி மக்கள் தங்கள் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் வேறு வழியின்றி இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களிடமிருந்து 6.25 கோடி ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்கள் ஏமாற்றத்தையே தருகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே மறுவாழ்வு திட்டத்தின்மூலம் பயனடைந்திருக்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. தேசத்தின் நலனிற்காக, வளர்ச்சிக்காக என்று பிடுங்கப்படும் தங்கள் நிலங்களினால் விவசாயிகள் தங்க வாழ்வாதாரம் சிதறடிக்கப்படுகிறது என்ற கசப்பான உண்மையை உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் அரசுகளுடைய பல திட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இன்று தெருவில் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது விவசாயிகளின் நிலங்களில் அமைக்கப்பட்டுவரும் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து 13 மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய அரசின் இந்திய பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழக அரசின் மின் தொடரமைப்பு கழகம் இணைந்து மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளை செய்து வருகின்றது. 

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து ஆந்திரம் வழியாக திருப்பூருக்கு மின்சாரம் கொண்டு வந்து தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 800 கி.மீ. தூரத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.   

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களின் வழியாக இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய மின்சார வாரியமும், தமிழக அரசும் 2015 ம் ஆண்டு அளித்தது. தமிழ்நாட்டில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. 2,024 கி.மீ. அளவிற்கு இதன் பாதைகள் போடப்படுகிறது.

ஒரு இடத்தில் மின் கோபுரம் அமைக்கப்பட்டால் அந்த இடத்தில் 40 முதல் 90 மீட்டர் அகலத்துக்கு விவசாயம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. விவசாயிகள் கொதித்தெழுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இந்த நிபந்தனையால் அந்த நிலங்களில் உயரமான தென்னை, தேக்கு உள்ளிட்ட மரப்பயிர்கள் வளர்க்க முடியாமல் போகும். ஆழ்துளை கிணறுகளும் அமைக்க முடியாது. கட்டுமான பணிகள் எதுவும் செய்ய முடியாது. அதேபோல் இயந்திரங்களைக் கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாது. இதனால் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். நிலத்தின் மதிப்பும் குறையும். விற்க நினைத்தாலும் அதனால் பெரிதாக பலன் இருக்காது. அதுமட்டுமல்ல உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கும் மின் தூண்டல் காரணமாகப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. 

'நாங்க இந்த ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்தை நம்பி வாழ்ந்துட்டு இருக்கோம். எங்கள் நிலத்தில் எங்களிடம் கேட்காமல் டவர் போடுவதாக சொல்லி காட்டுக்குள் வேலை செய்கிறார்கள். இந்த நிலம் பறிபோய்விட்டால் நாங்கள் எதை நம்பி வாழ்வோம்' என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். 

இந்த திட்டத்தை பலாத்காரமாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்று வருகின்றன. ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும், நிலத்துக்காரர்களின் அனுமதி பெற வேண்டும், உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும், பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்த வேண்டும், திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தால் அழைத்து பேச வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு இதில் எந்த ஒன்றையும் செய்யவில்லை. 

2014 ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் படி அரசு நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போது நிலம் எடுக்கும் பகுதியை சேர்ந்த 70% விவசாயிகளின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதி மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தில் பின்பற்றப்படவில்லை.  அதே சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தும்போது சந்தை மதிப்பில் நான்கு மடங்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அதில் வெளிப்படைத்தன்மையும் இல்லை. இழப்பீடு வழங்குவதில் பல குளறுபடிகள் இருப்பதாக விவசாயிகள் குமுறுகிறார்கள். தங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் வாடகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

'இந்திய மின்சாரத் திட்டம் 2003 ன் படி சம்மந்தப்பட்ட நில உரிமையாளர் ஆட்சேபனை தெரிவித்தால் மாவட்ட ஆட்சியரை அணுகி முறையிட்டு விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்று மின்கோபுரங்கள் அமைக்க வேண்டும். ஆனால் இவர்கள் அந்த சட்டங்களைக்கூட பின்பற்றாமல் விவசாயிகளை மிரட்டி சொற்ப இழப்பீட்டு தொகை கொடுத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்' என்று தமிழக விவசாயிகளின் சட்ட ஆலோசகர் ஈஸ்வரன் குற்றம்சாட்டுகிறார்.

விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விவசாயிகளின் நிலங்களில் செயல்படுத்துவதற்கே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. திட்டத்தை மாற்றுவழிகளில் செயல்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நியாயமான கோரிக்கையாக இருக்கிறது. அதாவது விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு பதிலாக சாலை வழியாக புதைவிட கேபிள் வழிமூலம் மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என்று கோருகிறார்கள். 

இந்த திட்டத்தை கேரளாவில் அப்படிதான் செயல்படுத்தி வருகிறார்கள். புகழூர் - திருச்சூர் மின்பாதை திட்டத்தில் 40 கி.மீ. நீளத்திற்கான பாதை சாலையோரம் பூமிக்கு அடியில்தான் செல்கின்றன. கேரளாவில் அமல்படுத்தும் வழிமுறையை ஏன் தமிழகத்தில் அமல்படுத்த முடியாது. விவசாயிகளின் நிலங்களின் வழியாகவே கொண்டு செல்வோம் என்று ஏன் இந்த அரசு இவ்வளவு முரண்டு பிடிக்கிறது என்று தெரியவில்லை.

கேரளாவிலிருந்து கர்நாடகத்திற்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் பாதையும் தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாகத்தான் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் ஏழு மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எட்டு வழி சாலைத் திட்டத்தினால் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து பரிதவிப்பில் இருந்து வருகிறார்கள். தற்போது இந்த திட்டமும் சேர்ந்துகொண்டு விவசாயிகளை மீள முடியாத துயரத்தில் தள்ள இருக்கின்றது.

அதனால்தான் விவசாய பெருங்குடி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையில் எடுத்து போராடி வருகிறார்கள். ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரத போராட்டம், அதிகாரிகளை முற்றுகை இடுவது என பலவகைகளில் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் இதுபோன்ற ஜனநாயகப் போராட்டத்திற்குக்கூட அனுமதி வழங்காமல் பல்வேறு நெருக்கடிகளை செய்து வருகிறது காவல்துறை. பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் மீதே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வது விவசாயிகளை கோபமடைய வைத்திருக்கிறது.

ஜனநாயக வழியில் போராட தடை விதிப்பது, வழக்கு போடுவது, தடியடி பிரயோகிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது, பலவந்தமாக நிலத்தை பிடுங்குவது, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி மறுப்பது, சமூக செயல்பாட்டாளர்களை தொடர்ந்து கைது செய்வது  என அமைதி பூங்காவான தமிழகம் தற்போது போலீஸ் ஸ்டேட் ஆக மாறி நிற்பதை காணச்சகிக்கவில்லை.

தமிழக அரசும், காவல்துறையும் மக்கள் பக்கம் நிற்காமல் யாருக்கோ அடிபணிந்து வேலை செய்வதாக தெரிகிறது. இந்த திட்டத்தினால் பாதிக்கப்படும் பெரும்பான்மையான மாவட்டங்கள் அஇஅதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் அமைந்திருப்பவை. முதல்வரின் சொந்த மாவட்டமும் இதில் அடங்கி இருக்கிறது. தனது சொந்த மக்கள்மீதே காவல்துறை, வருவாய்த்துறையினரை கொண்டு அச்சுறுத்தி அடக்குமுறைகள் கையாண்டு இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களை எல்லாம் ஒடுக்கி வருவது வியப்பை தருகிறது. எட்டு வழிச்சாலை திட்டத்திலும் இதே அணுகுமுறையைத்தான் முதல்வர் கையாண்டார்.

தமிழக அமைச்சர்களும் தங்கள் பங்கிற்கு போராடும் மக்களை கொச்சைப்படுத்தி வருகிறார்கள். வாழ்வாதார போராட்டங்களை சிலரது தூண்டுதல் என்று திசை மாற்றுகிறார்கள். இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று கூறுகிறார்கள். இதுபோன்ற பேச்சுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'புடவையைத்தானே இழுக்கிறேன் பெண்ணே! உன் சுந்தர தேகத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே திரெளபதி!' என்று அஸ்தினாபுரத்து இளவரசன் துச்சாதனன், சான்றோர்கள் நிறைந்த அவையில் கூறியதை படித்திருப்போம். அதுபோலத்தான் இருக்கிறது 'நிலங்களைத்தானே பறிக்கிறோம் மக்களே! உங்கள் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை விவசாயிகளே!' என்று மத்திய, மாநில அரசுகள் சொல்வதும். 

கூடங்குளம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், ஷேல் காஸ் என்று அழிவு திட்டங்களே தமிழகத்தில் கொண்டு வரப்படுகின்றன. அதைபோல் எட்டுவழிச் சாலை திட்டமும், உயர் அழுத்த மின் கோபுர திட்டமும் நிதர்சனமாக விவசாயிகளை அழித்தொழிக்கும் திட்டம்தான். இதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. 

- வி.களத்தூர் எம்.பாரூக்
நன்றி : புதிய விடியல் இதழ் 01-15 ஜனவரி 2019
விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம்! விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.