ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்!

ஜார்ஜ்  ஃபெர்னாண்டஸ் காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உடல் நலக் குறைவால் தனது 88வது வயதில் இன்று காலமானார்.
அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், மூத்த தொழிற்சங்கவாதியுமான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக டெல்லியில் இன்று (ஜனவரி 29) காலமானார். அவருக்கு வயது 88. ஃபெர்னாண்டஸின் இறுதிச் சடங்குகள் டெல்லியில் நடைபெறவுள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் அவரது மகன் சியான் ஃபெர்னாண்டஸ் வந்த பிறகு, இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரில் 1930ஆம் ஆண்டு பிறந்தவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். அரசியலில் நுழைந்து 1967ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றார். 1974ஆம் ஆண்டில் ரயில்வே ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். நெருக்கடி நிலை காலத்தில் அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபோது, 1975 இல் முதல்வராக இருந்த திமுக. தலைவர் கருணாநிதி ஃபெர்னாண்டஸ் தலைமறைவாக இருப்பதற்கு உதவினார்.
சிறையில் இருந்தவாறே 1977ஆம் ஆண்டு பீகார் மாநிலம் முசாபர்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அச்சமயத்தில் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு ஜனதா தளம் கட்சியில் இணைந்த ஃபெர்னாண்டஸ், 1989-90 வரை வி.பி.சிங் அரசாங்கத்தில் ரயில்வே அமைச்சராக பணியாற்றினார். 1994ஆம் ஆண்டு ஜனதா தளம் க பிளவை சந்தித்ததையடுத்து, சமதா கட்சியை ஆரம்பித்தார் ஃபெர்னாண்டஸ். பாஜகவுடன் கூட்டணி அமைத்த இவர், வாஜ்பாயின் நம்பிக்கைக்குரியவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார்.
1998 முதல் 2004 வரை இரண்டு முறை பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவரது பதவிக் காலத்தின்போதுதான் கார்கில் போர் நடந்தது. இவருடைய வழிகாட்டலின்படியே பொக்ரான் அணுகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது. கடைசியாக 2009-10 காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
ஃபெர்னாண்டஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “இந்தியாவின் சிறந்த அரசியல் தலைமைப் பண்பை வெளிப்படுத்தியவர் ஃபெர்னாண்டஸ். அச்சமின்றி வெளிப்படையாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியவர். தொலைநோக்கு சிந்தனையுடன் நாட்டுக்கு மதிப்புமிக்க பங்களிப்பை செய்துள்ள அவர், ஏழைகளின் உரிமைக் குரலாகவும் விளங்கினார். பாதுகாப்பு அமைச்சராக இருந்து இந்தியாவை வலிமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றினார். தனது பொதுவாழ்வில் ஒருபோதும் கொள்கைகளிலிருந்து பின்வாங்காதவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஃபெர்னாண்டஸ் உடனான நினைவுகளைப் பகிர்ந்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் ஈழத்துக்கும் அவர் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எண்ணில் அடங்காதவை.பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக புலிகளுக்கு அவர் கவசமாகத் திகழ்ந்து செய்த உதவிகளை எண்ணும்போதே என் கண்களில் கண்ணீர் வடிகிறது. அவர் உடல்நலம் குறைந்து, நினைவு இழந்தபின் கடந்த எட்டு ஆண்டுகளில் இருபது முறை அவர் வீட்டுக்குச் சென்று அவர் படுக்கைக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து அழுதுகொண்டு இருப்பேன்.
ஈழத்தமிழர் இனப்படுகொலையைத் தடுக்க 2009 இல் இதே நாளான ஜனவரி 29 இல் வீரத் தியாகி முத்துக்குமார் தீக்குளித்து மடிந்த அதே நாளில் என் உடன்பிறவாத அண்ணன், நான் உயிரினும் மேலாக நேசித்த அண்ணன் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் மறைந்தார் என்ற செய்தி அறிந்து நிலைகுலைந்துபோனேன். ஈழத்தமிழர் வரலாற்றிலும், இந்திய ஜனநாயக வரலாற்றிலும் அழியாத புகழ் ஒளியாக ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் நிலைத்து இருப்பார்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
https://minnambalam.com/k/2019/01/29/56
ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்! ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்! Reviewed by நமதூர் செய்திகள் on 02:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.