மோடியின் பயிர்காப்பீடு திட்டம் யாருக்கானது








மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஏதோ விவசாயிகளுக்காகவே ஆட்சிக்கு வருபவர்களைப்போல் விவசாயிகள் தற்கொலைக்கு முடிவு கட்டப்போவதாகவும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஆகின்ற உற்பத்தி செலவை காட்டிலும் கூடுதலாக 50% கொள்முதல் விலை நிர்ணயித்து வழங்கப் போவதாகவும், விவசாயத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்க போவதாகவும், விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி, பென்சன் வசதி, இன்சூரன்ஸ் வசதி என இப்படி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. 

2014 நாடாளமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை மோடி அளித்தார். 'விவசாயிகளுக்காக நான் கடுமையாக பாடுபடப் போகிறேன்' என்றார். 'நாட்டினுடைய பொருளாதாரத்தை நாம் முன்னேற்ற விரும்பினால் விவசாயத்திற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்' என்று கூறினார். தற்போது மோடி யாருக்காக பாடுபட்டு வருகிறார். யாருக்கு முன்னுரிமை வழங்குகிறார் என்பதையெல்லாம் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

மோடி ஆட்சிக்கு வந்தபிறகு எந்த ஒன்றிலும் அக்கறை கொள்ளவில்லை. விவசாயிகளின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2013 ல் 11,772 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை 2014 ல் 12,360 ஆகவும், 2015 ல் 12,602 ஆகவும் உயர்ந்துள்ளது என்பதை மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி 1995 முதல் 2015 ம் ஆண்டு வரை சுமார் 3.10 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் 2016 முதல் 2018 வரை விவசாயிகளின் தற்கொலை குறித்த எந்த புள்ளிவிபரத்தையும் என்சிஆர்டி வெளியிடவில்லை. அதற்கு காரணம் மோடி அரசு அதற்கு அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது என்பதேயாகும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டியை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு 7% ஆக இருந்த வட்டி விகிதத்தை 9% ஆக உயர்த்தியிருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதைக்கூட நீக்க வேண்டும் என இந்த அரசு துடிக்கிறது. அதற்கான பரிந்துரையை நிதி ஆயோக் கொடுத்துள்ளது. விவசாயத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொன்னார்கள். ஆனால் ஒருநாளைக்கு இரண்டாயிரம் பேர் வேளாண் தொழிலிருந்து வேறு தொழிலுக்கு மாறி வருகிறார்கள் என்பதே உண்மையாகும். ஏற்கனவே நொடிந்திருந்த விவசாயம் மோடி ஆட்சியில் கடுமையாக நொடிந்திருக்கிறது. இப்படி மோடி அரசு விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக விவசாயத்தையும், விவசாயிகளையும் ஒழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் விவசாயிகளுக்கு ஆதரவான திட்டம் என்ற பெயரில் மிக நேர்த்தியாக செய்து கொண்டு வருகிறது. 

இந்தியாவில் கடந்த நூறு வருடங்களாகவே மோசமான பருவநிலை மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் உள்ள 670 மாவட்டங்களில் 307 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் இருக்கின்றன. இந்தியாவில் பயிரிடப்படும் நிலப்பரப்பு 14 கோடி ஹெக்டேர். ஒரு போகத்துக்குமேல் பயிரிடப்படும் பரப்பையும் சேர்த்தால் மொத்த சாகுபடி பரப்பு 19 கோடி ஹெக்டேர் ஆகும். இதில் 40% பரப்பு இப்போது கடும் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 70% வரை சிறு விவசாயிகளே இருக்கின்றனர். இவர்களால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத சூழலே தற்போது நிலவி வருகிறது. அதனாலேயே விவசாயிகள் வேளாண் தொழிலிருந்து வெளியேறி வருகிறார்கள். 1951 ல் விவசாயிகளின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 71.9% ஆக இருந்தது. ஆனால் தற்போது 45.1% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போது விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் 90% பேர் 60 வயதை கடந்தவர்கள் என்று சொல்கிறது ஓர் ஆய்வு அறிக்கை. விவசாயிகளுக்கு திட்டவட்டமான இலாபம் கிடைக்காமல் இருப்பதால்தான், விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபடாமல் இருக்கின்றனர்.

இப்படி விவசாயமும், விவசாயிகளும் நொடிந்து கொண்டிருக்க அவர்களை காப்பாற்றி மேலே அழைத்து வர வேண்டிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மீண்டும் மீண்டும் அவர்களை நசுக்குவதிலேயே குறியாக இருந்து வருகிறது. இதில்  என்ன விசித்திரம் என்றால் அவர்களை ஒடுக்குவதற்கு அவர்களின் பெயரிலேயே திட்டங்களை தீட்டுவதுதான். இந்த திட்டம் விவசாயிகளை மீட்டுக்கொண்டு வரும் என்று விவசாயிகள் உட்பட பலரையும் நம்ப வைப்பதுதான். அப்படி விவசாயிகளை ஏறமாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம்தான் பிரதமரின் புதிய வேளாண் காப்பீடு திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yogana).

பிரதமரின் புதிய வேளாண் காப்பீடு திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yogana) ரூ. 17,500 கோடியில் கர்நாடகா மாநிலம் பெலகாவில் 18.02.2016 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வழக்கம்போல் ஆரவாரமாக மிகப்பெரிய விளம்பரத்துடன் திட்டம் தொடங்கப்பட்டது. தனது வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாக பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த திட்டத்தின் பெருமைகளை பேசி வருகின்றார். விவசாயிகளின் வாழ்வில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த திட்டம் என்று பெருமை கொள்கிறார். பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு காப்பரணாக விளங்கும் புரட்சிகரமான திட்டம் என்கிறார்.  உண்மையில் இந்த பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு பயன்பெற்றிருக்கிறதா என்று தொடர்ந்து பலராலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் எதையும் காதில் வாங்காமல் இந்த திட்டம் பெரும் வெற்றி பெற்று விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று காட்டுவதில் அதிதீவிர முனைப்பு காட்டுகிறார் திருவாளர் மோடி. தோல்வியைக்கூட வெற்றியாக சித்தரிக்க தெரிந்த வாய்ச்சொல் வீரர் ஆயிற்றே அவர்.

புதிய காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தவுடன் மக்களிடம் குறிப்பாக விவசாயிகளிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவானது என்பதை மறுப்பதற்கில்லை. "கரும்பு மற்றும் வாழைக்கு 5% மும், காரிப் பருவத்தில் பயிரிடப்படும் உணவுப் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட தோட்டக்களைப் பயிர்களுக்கு 2%  மும், ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு 1.5 மும் காப்பீடு வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. "வறட்சி, வெள்ளம், பூச்சித் தாக்குதல், விலங்குத் தாக்குதல் ஆகியவற்றால் பயிர்கள் அழிந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் மொத்த பிரிமியம் தொகையில் 1.5% முதல் 2% வரை செலுத்தினால் போதுமானது" என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்தக் காப்பீட்டில் பயிர் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகள் பெறக்கூடிய இழப்பீட்டுக்கு உச்ச வரம்பு கிடையாது. காப்பீடு செய்யும் அளவுக்கும் வரம்பு கிடையாது. பயிர்ச் சேதத்தின் அளவையும், தீவிரத்தையும் மதிப்பிட செயற்கைக்கோள்கள், ஆளில்லா சிறு விமானங்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். விவசாயிகள் தங்கள் செல்போனிலும் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யலாம். தகவல் கிடைத்து சரிபார்க்கப்பட்டு, இழப்பீட்டு மதிப்பில் 25% விவசாயிகள் வங்கி கணக்கில் உடனடியாகச் சேர்க்கப்படும். பெரிய விவசாயிகள் அதிகப் பரப்பளவில் பயிரிட்டிருந்தாலும் இதில் சேரலாம். காப்பீடு பெறவும் எந்த தடையும் இல்லை. ஒரு மாநிலத்திற்கு ஒரு காப்பீடு நிறுவனம்தான் இந்த பணியை மேற்கொள்ளும். இதனால் இழப்பீடு கோருதல், பெறுதல் போன்ற அலைச்சல் குறைவு. இந்த காப்பீடு திட்டத்தில் பயிருக்கு காப்பீடு செய்யப்படுவதால், வங்கிகளில் விவசாயத் செலவுகளுக்கு எளிதாக கடன் பெறலாம். இப்படி ஏகப்பட்ட விசயங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இவைகளையெல்லாம் பார்த்த விவசாயிகள் இந்த திட்டம் நமக்கு பெரும் நன்மை பயக்கும் என்று எண்ணி மகிழ்ச்சிகொண்டனர்.

ஏற்கனவே கடுமையான வறட்சியினால் பெரும் பாதிப்பை சந்தித்து வந்த விவசாயிகள் இந்த புதிய காப்பீடு திட்டம் தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவும் கருத தலைப்பட்டார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல இந்த திட்டத்தை பிரதமர் மோடி யாருக்காக தொடங்கினார், யார் இதனால் அதிக பலன்களை அடைகிறார்கள் என்பது அம்பலமாக தொடங்கிவிட்டன. விவசாயிகளும் புரிந்துகொண்டனர்.

விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக பல காப்பீடு திட்டங்கள் இதற்கு முன்பும் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. 1985 ல் முழுமையான பயிர் காப்பீடு திட்டம், 1999 தேசிய வேளாண் பயிர் காப்பீடு திட்டம், 2001 ல் பருவநிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டம், 2010 ல் திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் பயிர் காப்பீடு திட்டம் ஆகியவை செயல்பாட்டில் இருந்துள்ளன. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சி காலத்தில்கூட வேளாண் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதற்காக வேளாண் காப்பீடு நிறுவனம் தொடங்கப்பட்டது என்பது வரலாறு. ஏற்கனவே இருந்த காப்பீடு திட்டங்களின் மூலம் பெரிய அளவில் இல்லையென்றாலும் ஓரளவேனும் விவசாயிகள் இழப்பீடுகளை பெற்று வந்தனர். பிரதமர் மோடி இந்த திட்டத்தை மேம்படுத்துகிறேன் என்ற போர்வையில் தனியார் காப்பீடு நிறுவனங்களை உள்ளே இழுத்து  நல்ல நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை நாசம் செய்துவிட்டார் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். 

இந்த திட்டத்தில் நாடு முழுவதும் ஐந்து கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் பதினைந்து லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். விவசாயத்தில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பு ஏற்பட்டால் அரசு தரும் இழப்பீடு தாங்கள் செய்த முதலீட்டில் சிறிது அளவாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைகிறார்கள். ஆனால் இந்த விசயத்தில் விவசாயிகள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை. விவசாயிகளின் பெயரில் விவசாயிகளின் நலனிற்காக என்று சொல்லி தொடங்கப்பட்ட இத்திட்டம் முழுதும் காப்பீடு நிறுவனங்கள் லாபம்கொழிக்க என்று உருமாற்றம் பெற்றது. புதிய காப்பீடு திட்டத்தில் 17 காப்பீடு நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன. இதில் 5 மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களாகும்.  மீதியுள்ள 12 நிறுவனங்களும் தனியார் காப்பீடு நிறுவனங்கள். இந்த திட்டத்தில் முதலில் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ப்பதற்கு மோடி அரசு மறுத்தது. எதிர்ப்பு வலுத்தவுடன் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டது. 

இதில் பல தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளே இல்லை. உதாரணமாக பயிர் காப்பீடு செய்கிற ஒரு குறிப்பிட்ட தனியார் காப்பீடு நிறுவனத்திற்கு ஹரியானா மாநிலம் முழுவதிற்குமே 5,6 ஊழியர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை சிஎஸ்ஈ சுட்டிக்காட்டியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சரக்கு மற்றும் சேவை வரி விலக்கும் இந்நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல சலுகைகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மோடி அரசு வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தை வைத்து தனியார் காப்பீடு நிறுவனங்கள் தங்களை நன்றாக வளர்த்துக் கொள்கின்றன. பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தற்போது காப்பீடு நிறுவனங்களின் லாபம் 85% வரை உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. முதன்முறையாக கடந்த நிதியாண்டில் தனியார் காப்பீடு நிறுவனங்களின் மொத்த வணிகம் பொதுத்துறை நிறுவனங்களின் வணிகத்தை விடக் கூடுதலாகியுள்ளது. பயிர் காப்பீட்டின் 73% வருவாய் தனியார் நிறுவனங்களுக்குச் சென்றதே இதற்கு காரணம் என்று வணிக இதழ்கள் வெளிப்படையாகவே எழுதுகின்றன.

விவசாயிகளின் பணத்தையும், அரசின்மூலம் மக்களின் வரிப் பணத்தையும் கபளீகரம் செய்து வருகின்றன காப்பீடு நிறுவனங்கள். காரிப் பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு காப்பீடு பிரீமிய கட்டணம் ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ. 503, துவரை, உளுந்து, பச்சைப்பயிருக்கு ரூ. 260, நிலக்கடலைக்கு ரூ. 432, கம்புக்கு ரூ. 148 என்று நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகள் இடமிருந்து பெற்றுக்கொள்ளும் நிறுவனம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இழப்பீடு தொகை பெறுவதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் விவசாயிகள். அவர்களுக்கு உரிய நியாயம் இன்னும் கிடைக்கவில்லை. இந்த புதிய காப்பீடு திட்டத்தில் பிரீமியம் முந்தைய திட்டத்தைவிட அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதை சிஎஸ்ஈ அறிக்கையின் புள்ளிவிபரம் அம்பலப்படுத்துகிறது.

பயிர்களுக்கான காப்பீடுத் தொகை பயிரின் மதிப்பை காட்டிலும் மிகக் குறைந்த அளவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது இந்த திட்டத்தையே கேலி கூத்தாக ஆக்கிருக்கிறது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் துறையினரின் மதிப்பீட்டுக்கிணங்க ராஜஸ்தானில் உள்ள பண்ட்லி மாவட்டத்தில் சோயா பீன் பயிருக்கு அதிகபட்ச காப்பீடுத் தொகையாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 16,539 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதன் அசல் மதிப்பு தொகை ரூ. 50,000 ஆக இருக்கிறது. நெல்லுக்கு ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு விவசாய சாகுபடி செலவுகள் ரூ. 65,000 ஆக இருக்கையில் அதிகபட்ச காப்பீடுத் தொகையானது ரூ. 17,096 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சோயா பீனுக்கும், நெல்லுக்கும் காப்பீட்டுத் தொகை அவற்றின் உற்பத்தி செலவில் வெறும் 25% மட்டுமே கிடைக்கும். பயிர்களுக்கான இழப்புத் தொகையை வேண்டுமென்றே குறைவாக வைத்திருப்பதின் மூலம் காப்பீடு நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன.

2016-2017 ம் நிதியாண்டில் குறுவை சாகுபடி காலத்தில் காப்பீடு நிறுவனங்கள் 44% லாபம் ஈட்டிருக்கிறது. மொத்த வசூலான காப்பீட்டு பிரீமியம் தொகை ரூ. 15,735 கோடி. ஆனால் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கிய தொகை ரூ. 8,862 கோடி மட்டும்தான்.  

2016 ஜூன் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மட்டும் ரூ. 10,000 கோடி அளவுக்கு காப்பீடு நிறுவனங்களுக்கு லாபம் என்று சிஎஸ்ஈ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரூ. 15,891 கோடி பிரீமியமாக வசூலானதாகவும், ரூ. 6,000 கோடி அளவிற்கு விவசாயிகள் இழப்பீடு கோரியதாகவும், அதில் ஏப்ரல் 2017 வரை ரூ. 2,000 கோடி மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அது மேலும் கூறுகிறது.

'பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ் காப்பீடு நிறுவனங்களுக்கு பயிர் காப்பீடு பிரீமியம் தொகையாக ரூ. 17,796 கோடி செலுத்தப்பட்டது. நிறுவனங்கள் இழப்பீடாக வழங்கிய தொகை ரூ. 2,767 கோடி. நிறுவனங்களுக்கு கிடைத்த தொகை ரூ. 15,029 கோடியாகும்' என்று மத்திய வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளைவிட காப்பீடு நிறுவனங்கள்தான் அதிக பலன்களை அடைந்திருக்கின்றன என்று மத்திய அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.

2017-2018 ஆண்டிற்கான குறுவை பயிர் காப்பீடு கோரிக்கைகள் மதிப்பீடு செய்யப்படாதபோதே ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, இப்கோ உள்ளிட்ட பயிர் காப்பீடு நிறுவனங்கள், இந்த திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் சுமார் ரூ. 15,795 கோடி வரை லாபம் அடைந்திருப்பதாகவும், 2016-2017 ஆண்டிற்கான லாபம் தோராயமாக ரூ. 6,459 கோடி என்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது. அதேபோல் மறு காப்பீடு திட்டத்தின்கீழ் (RWCI) 2017-2018 ம் ஆண்டில் குறுவை சாகுபடிக்காக செலுத்தப்பட்ட பிரீமியம் தொகை ரூ. 1,694 கோடி. இதில் இழப்பீடாக அளித்த தொகை ரூ. 69.93 கோடி மட்டுமே. சுமார் ரூ. 1600 கோடியை காப்பீடு நிறுவனங்கள் ஏப்பம் விட்டுள்ளன. 

2016-17 ம் வருடத்திய பயிர் காலத்தில் காப்பீடு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ. 22,437 கோடி பிரீமியத் தொகை செலுத்தப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அவர்கள் ரூ. 7,700 கோடியை மட்டுமே இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். இதன்மூலம் அந்த ஆண்டு காப்பீடு நிறுவனங்களுக்கு ரூ. 14,737 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. பிரதமருடைய பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு நிறுவனங்கள் மிகப்பெரிய இலாபத்தை குவித்திருக்கிறது என்பது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மதிப்பீடாகும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது காப்பீடு நிறுவனங்கள் இலாபம் கொழிக்கவே இந்தத்திட்டம் தொடங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. நூறுநாள் வேலைத்திட்டம், கல்வி, சுகாதாரத் திட்டம் போன்றவற்றிற்கெல்லாம் நிதியை வெட்டி குறைத்து வழங்கும் மோடி அரசு காப்பீடு திட்டத்திற்கு மட்டும் நிதியை அதிக அளவில் வழங்குவது விவசாயிகள் மீதான அக்கறையால் அல்ல. மாறாக தான் ஆட்சிக்கு வர உதவிய தனியார் நிறுவனங்கள் இலாபம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான்.

2016-2017 ம் ஆண்டில் காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்தும், மத்திய, மாநில அரசுகளிடமிருந்தும் வசூலித்த பயிர்காப்பீட்டு பிரீமியம் தொகை மொத்தம் ரூ. 21,500 கோடி ரூபாய். இதில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட காப்பீடுத் தொகை வெறும் 714.14 கோடி ரூபாய். இது விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் புருசோத்தம் ருபாலா ஏப்ரல் 07 2017 அன்று மாநிலங்களவையில் அளித்துள்ள விபரமாகும்.

மத்திய அரசின் இந்த திட்டம் விவசாயிகளை வஞ்சிப்பதோடு நில்லாமல் தனியார் காப்பீடு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பெரும் தகிடுதத்தங்களை செய்து வருவது கண்கூடாக தெரிகின்றது. பிரதமர் மோடி கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவே அடியொற்றி நிற்கிறது. அதனால்தான் அவர் 'கார்ப்பரேட்களின் பிரதமர்' என்று விமர்சிக்கப்படுகிறார். 

மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளும், தனியார் காப்பீடு நிறுவனங்களும் பெருமளவில் ஆதாயம் அடைவதை போல், பயிர் காப்பீடுத் திட்டமும் தனியார் காப்பீடு நிறுவனங்கள் இலாபம் கொழிக்கவே வழிவகுத்திருக்கிறது. மோட்டார் வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு இவைகளுக்கு அடுத்து மூன்றாவது பெரும் தொழிலாக பயிர் காப்பீடு இன்று வளர்ந்துள்ளது. வளர்ந்துள்ளது என்று சொல்வதைவிட மோடி அரசால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

2016-2017 ல் இத்திட்டத்தின்கீழ் வசூலிக்கப்பட்ட பிரீமியம் ரூ. 22,437 கோடி. ஆனால் 2017 ஜூலை 25 வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு ரூ. 8,087.23 கோடி மட்டுமே. தனியார் பங்கேற்பு இல்லாத காலத்தில் 1998 முதல் 2015 வரை வசூலிக்கப்பட்ட மொத்த பிரீமியம் ரூ. 28,579.66 கோடி. ஆனால் அக்கால கட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு ரூ. 50,830.26 கோடி. மோடியின் இந்த திட்டம் யாருக்கு உதவுகிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

"மத்திய அரசின் பயிர்காப்பீடு திட்டம் மோசடியானது. பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளுக்கு பலனில்லை. தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம்" சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகிறார். அதற்கு இதுவரை அரசிடமிருந்து உரிய பதில் வரவில்லை. மாறாக புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் பல்வேறு மோசடிகளும், ஊழல்களும் அனுதினமும் அரங்கேறி வருகின்றன; வெளிப்பட்டும் வருகின்றன.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு  எதிரானது. குறிப்பாகப் பிரதம பீமா பசல் யோஜனா திட்டம் ரபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது. குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆகிய நிறுவனங்கள் நன்றாக சம்பாதிக்கும் நோக்கில் இந்த காப்பீடு அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வேளாண் ஆர்வலர் பி.சாய்நாத் குறிப்பிட்டுள்ளார். ரபேல் ஊழலே விண்ணை முட்டுகிறது. ஆனால் அதைவிட பெரிய ஊழல் பயிர்காப்பீடு திட்டத்தில் நடைபெற்றுள்ளதாக அவர் சொல்வது கவனிக்க வைக்கிறது.

எப்படி இதில் மோசடி நடைபெறுகின்றன என்பதையும் அவர் விளக்கி இருக்கிறார். மகாராஷ்டிராவில் 2.80 லட்சம் விவசாயிகள் சோயா பயிரிட்டுள்ளனர். ஒரு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் காப்பீட்டு தொகையாக ரூ. 19.20 கோடியைக் காப்பீடு நிறுவனத்திடம் செலுத்துகிறார்கள். மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனியாக தலா ரூ. 77 கோடி செலுத்துகிறது. ஒட்டுமொத்தமாக காப்பீடு நிறுவனத்திற்கு ரூ. 173 கோடி கிடைக்கிறது. ஒட்டுமொத்த பயிரும் மழையில்லாமல் கருகிப்போனால்கூட காப்ட்டு நிறுவனம் ரூ. 30 கோடி மட்டுமே இழப்பீடாக தரும். ஆனால் எந்தவிதமான முதலீடும் செய்யாமல் காப்பீடு நிறுவனம் ரூ. 143 கோடி எடுத்துக்கொள்ளும். இது ஒரு மாவட்டத்துக்கான பணம். இதேபோல்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்து வருவதாக பி.சாய்நாத் குறிப்பிடுகிறார். இந்தியாவின் மிகப்பெரிய ஊழலாக பயிர்காப்பீடு திட்ட ஊழல் பொதுவெளியில் வெளிவர துவங்கிருக்கின்றன. இருந்தாலும் இன்னும் அதிகளவில் பேசவேண்டிய விசயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன. ஊழலை ஒழிக்க வந்த பிதாமகனாக மோடி தன்னை முன்னிறுத்துகிறார். ஆனால் அவர் ஆட்சி மிகப்பிரமாண்டமான ஊழல் மிகுந்ததாக இருக்கிறது. இதை மறைப்பதற்குத்தான் தினந்தோறும் எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு வருகிறார். அவர் கட்சியை சார்ந்தவர்களும் தினந்தோறும் ஏதாவது பேசி பிரச்சனையை திசைதிருப்பி வருகிறார்கள்.

தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தில் பல்வேறு மோசடிகள்  நடைபெற்று வருகின்றது. மதுரை மாவட்டத்தில் 2016-2017 ம் ஆண்டுக்கு இரண்டாம் போக நெல் சாகுபடி செய்த 6,859 விவசாயிகளும், கோடை நெல் சாகுபடி செய்த 1,110 விவசாயிகளும் அதோடு கரும்பு, வாழை, பருத்தி, வெங்காயம், மக்காச்சோளம், தட்டைப்பயிறு, துவரம் பருப்பு என இதர விவசாயத்திற்காக இழப்பீடு கோரி 10,801 விவசாயிகளும் காப்பீடு செய்துள்ளனர். இதில் இரண்டாம் போகத்துக்கும் கோடைக்கும் மட்டும் இழப்பீட்டுத்தொகை கிடைக்க வேண்டிய 7,969 விவசாயிகளில் வெறும் 533 பேருக்கு மட்டுமே இழப்பீடு அறிவிக்கப்பட்டது. 

இதேபோல் தூத்துக்குடி மாவட்ட கீழமங்கலம் கிராமத்தில் 230 விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை செலுத்தியுள்ளனர்.  இக்கிராமம் மழையை நம்பி உள்ள மானாவரி  நிலப்பகுதியாகும். இக்கிராமத்தில் உளுந்து பயிரிட்ட 20 விவசாயிகள், பாசிப்பயிறு பயிரிட்ட 8 விவசாயிகள் மட்டும் இழப்பீடு பெற்றுள்ளனர். இழப்பை சந்தித்த மற்ற விவசாயிகளுக்கு ஏன் இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதற்கான காரணம்கூட தெரிவிக்கப்படவில்லை. குறிப்பாக சில்லாங்குளம் கிராமத்தில் 100 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இதில் 25  விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த பருவநிலை சாகுபடிக்குகூட இந்த விவசாயிகளிடம் பணம் இல்லை. இவர்கள் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இம்மாதிரியான நிலைமைகள்தான் மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் இருக்கிறது. தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற காவிரி பாசன மாவட்டங்களில் 2015-2016, 2016-2017 ஆண்டுக்குரிய காப்பீட்டுத் தொகை கோடிக்கணக்கில் வழங்கப்படாமல் இருக்கின்றன. இதற்காக பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் செய்தும் அது பலனளிக்கவில்லை.

நாகை வருவாய் கிராமத்தில் அரசின் கணக்குப்படி நன்செய் பரப்பு 118 ஹெக்டேர்தான். அதில் 53 ஹெக்டேரில் 52 விவசாயிகள் சாகுபடி செய்திருக்கிறார்கள். அரசு உறுதிப்படுத்திய தகவல் இது. ஆனால் அப்பகுதியில் 260 ஹெக்டேரில் விவசாயம் செய்ததாக போலியாக ஆவணம் தயாரித்து அந்த கிராமத்தில் இல்லாத 170 நபர்களின் பெயர்களை சேர்த்து New India Assurance என்ற காப்பீட்டு நிறுவனம் முறைகேடு செய்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு இழப்பீடு தருகிறோம் என்ற பெயரில் ரூ.3, ரூ.5, ரூ.10, ரூ.48 என்று காசோலை மூலமாக கொடுத்து பல இடங்களில் அவமானம் செய்திருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுக்காவுக்கு உட்பட்ட மைக்கேல் பட்டினம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து பயிர் காப்பீடு பதிவு செய்யப்பட்டு ரூ. 80 இலட்சம் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவான தொண்டு நிறுவனமான ஆஷா (ஏஎஸ்எச்ஏ) அமைப்பின் நிர்வாகி கவிதா குருகதி கூறுகையில் 'விவசாயிகளிடம் இருந்து பயிர் காப்பீடு பெறுவதால், விவசாயிகளைக் காட்டிலும் காப்பீடு நிறுவனங்களே அதிகமான லாபம் ஈட்டுகின்றன. ஒருவேளை இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டதும் அவர்களுக்கு முழுமையாக காப்பீடு தொகை உரிய நேரத்தில் சேர்வதும் இல்லை, கொடுப்பதும் இல்லை' என்கிறார்.

அரியானாவைச் சேர்ந்த பன்சிலால் என்ற விவசாயியின் கிசான் கிரெடிட் கார்டிலிருந்து ரூ. 2,480 எடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் என்ன விபரம் என அறிய சென்றபோது உனக்கு பயிர் காப்பீடு செய்திருக்கிறோம் என்று சொல்லிருக்கிறார்கள் அதிகாரிகள். பல இடங்களில் இதுபோன்று கட்டாயப்படுத்தி இத்திட்டத்தில் இணைத்திருக்கிறார்கள். இதன்மூலம் விவசாயிகளின் பணத்தை நிர்பந்தப்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு செல்ல வழியேற்படுத்திருக்கிறார்கள். "ஒருமனிதனை அவனுக்கே தெரியாமல் பாலிசிதாரர் ஆக்கும் விந்தை உலகத்தில் வேறு எங்கும் நடந்திருக்காது" என்று சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ் இவற்றை பொருட்படுத்திதான் கூறினார்.

குஜராத்தில் HDFC, ICICI ஆகிய நிறுவனங்கள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் மோசடி செய்திருப்பதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்திய விவசாய சங்கம் சார்பில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் காப்பீடு திட்டத்தை கட்டாயமாக்கக்கூடாது என்றும், காப்பீட்டுத் தொகை செலுத்தியவர்களுக்கு எந்தவிதமான ரசீதும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் காப்பீடு திட்டத்தில் வராத பயிர் வகைகளால் இழப்பு ஏற்படுவதாகவும், அதற்குரிய பலன் கிடைக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்தால் இழப்பு சந்திக்கும்போது அதற்குரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் மாற்றி பேசி வருகின்றன. இவர்களின் நோக்கம் இழப்பீடு வழங்காமல் மொத்த பணத்தையும் சுருட்ட வேண்டும் என்பதே. அதற்காகத்தான் புதிய புதிய கொள்கைகளை வகுத்தும், இணைத்தும் வருகிறார்கள். "மத்திய அரசும், காப்பீடு நிறுவனங்களும் சேர்ந்து வகுத்திருக்கும் கொள்கைபடி ஒரு வட்டாரத்தில் 70% பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டும்தான் விவசாயிகளுக்கு காப்பீடு தர முடியும்" மத்திய அமைச்சர் சோம்பல் சாஸ்திரி குறிப்பிடுகிறார். உதாரணத்திற்கு 1000 ஏக்கர் இருக்கும் இடத்தில் இயற்கையினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் 700 ஏக்கர் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் இவர்களின் கூற்றுப்படி. 300 ஏக்கர், 400 ஏக்கர், 500 ஏக்கர் வரை பாதிக்கப்பட்டால் கூட இழப்பீடு இல்லையாம். இது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும் என்று புரியவில்லை.

மத்திய அரசின் பிரதான் மந்திரி பசல் யோஜனா ஒரு தோல்வியடைந்த திட்டம். இது விவசாயிகளுக்கு கொஞ்சமும் உதவாது என்று 2016 ம் ஆண்டு முதலே அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் முல்லா கூறி வருகிறார். அது முற்றிலும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ICRIER அமைப்பு செய்த ஆய்வில் பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டத்தில் பயிர் இழப்பிற்கு அளிக்கப்படும் தொகை விநியோகத்தில் காலதாமதம், காப்பீடு நிறுவனங்கள் அதிகத் தொகையைப் பிரீமியம் ஆக வசூலிப்பது, இத்திட்டம் முறையான வகையில் சரியான வழியில் இயங்குகிறதா என்பதைக் கவனிக்க அரசு அதிகாரிகள் இல்லாதது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் விவசாயிகளிடம் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கு ஆதரவு இல்லை. அதனால் நிறைய விவசாயிகள் அந்த திட்டத்தில் இருந்து சகஜமாக விலகி வருகிறார்கள்.

பானிபட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் பி.பி.கபூர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் வேளாண்மைதுறையில் கேள்விகளை தொடுத்திருந்தார். அதற்கு வேளாண்மைத்துறையால் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தில்  இணைந்த விவசாயிகளில் சுமார் 84 இலட்சம் விவசாயிகள் விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான். இந்த நான்கு மாநிலத்தில் மட்டும் 68.31 இலட்சம் விவசாயிகள் மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களிலேயே பாஜகவின் மோடி திட்டத்திற்கு எதிராக சம்மட்டியடியை கொடுத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

மேலும் அந்த தகவலில் 2016-2017 ல் 5,72,17,159 விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2017-2018 ம் ஆண்டில் 4,87,70,515 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 31,25,025 விவசாயிகள் இத்திட்டத்தில் இருந்து விலகி உள்ளனர். மகாராஷ்டிராவில் 19,46,992 பேரும், உபியில் 14,69,052 பேரும், மபியில் 2,90,312 பேரும் விலகியுள்ளனர். தென்னிந்தியாவை பொறுத்தவரையில் கர்நாடகாவில் காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 27,37,667 லிருந்து 16,08,569 ஆக குறைந்துள்ளது என்று அந்த தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாநிலங்கள் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்திலிருந்து விலகி தங்கள் மாநிலத்திற்கென்று தனியாக ஒரு காப்பீடு திட்டத்தை கொண்டுவர யோசித்து வருகின்றன. 2016-2017 ம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 5.75 கோடிபேர். அதே 2017-2018 ம் நிதியாண்டில் இதன் அளவு 4.79 கோடி பேர். கடந்த ஒரே ஆண்டில் மட்டும் பயிர்காப்பீடு திட்டத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 17% குறைந்துள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விவசாயிகளுக்கு ஆதரவான திட்டம் என்று மோடி செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். கள யதார்த்தத்தில் விவசாயிகளைவிட காப்பீடு நிறுவனங்களே அதிகம் பயன்பெறுகின்றன. இதை மெல்ல உணர்ந்துகொண்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு வருகிறார்கள். தங்களுக்கு இழைக்கப்படும் மோசடிகளுக்கு எதிராக இப்படி போராடுகிறார்கள். இதுவும் போராட்டத்தின் ஒருவகைதான். தங்கள் பெயரில் காப்பீடு நிறுவனங்கள் கொழுக்க நாங்கள் எதற்கு சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தத்தான் தங்களை இந்த திட்டத்தில் இருந்து விடுவித்துக்கொள்கிறார்கள். அது நியாயமானதுதான். அதேவேளையில் விலகியதோடு நில்லாமல் இந்த மோசடிகளுக்கு எதிராக உரக்க குரல் எழுப்ப வேண்டும். அப்போதுதான் தாங்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டோம் என்பதை பொதுவெளியில் பதிய வைக்க முடியும். இல்லையென்றால் மோடியும், அவருடைய சகாக்களும் தொடர்ந்து பொய்யை பேசி, பரப்பி விவசாயிகளுக்கு இந்த திட்டம் பெரிய விடியலை தந்துள்ளது என்றும். அதனால் விவசாயிகள் தங்களது ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் பொய்யை உண்மையாக சித்தரிக்க முயல்வார்கள். பொய்யை உண்மையாக சித்தரிப்பதிலும், உண்மையை பொய்யாக சித்தரிப்பதிலும் பாஜகவினரிடம் யாரும் நெருங்க முடியாது என்பது பொதுவான அனுமானமாகும்.

பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தில் நடைபெறும் மோசடிகளும், முறைகேடுகளும், ஊழல்களும் இன்னும் அதிகம் வெளிக்கொணரப்பட வேண்டும். இந்த விசயத்தில் பெரும்பாலான ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் அமைதி காப்பது விந்தையாக உள்ளது. ரபேல் ஊழலைப் பற்றி தொடர்ந்து பேசி வருகின்ற ராகுல் காந்தியும், எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் அதைவிட பெரிய ஊழலான பயிர் காப்பீடு திட்டத்தின் மோசடியைப் பற்றியும் கவனம் கொடுத்து மக்கள் மத்தியில் பேசவேண்டும்.

இந்த திட்டம் வெற்றிபெற வேண்டுமானால் அரசு உடனே செய்யவேண்டியவை. பயிர் காப்பீடு திட்டத்தில் இருந்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களை உடனே வெளியேற்ற வேண்டும். இழப்பீடுகளை வழங்காமல் சாமானிய மக்களை இழுத்தடிக்கும் நிறுவனங்கள், இதுவரை கொள்ளை லாபம் அடைந்த நிறுவனங்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளுக்கு பயன் இருக்கும். ஆனால் இதை கார்ப்பரேட்களின் பிரதமர் மோடி செய்வார் என்பதை நம்புவதற்கில்லை.

இந்திய அரசியல் சட்டம் விவசாயத்தை காக்க வேண்டும் என ஆணையிடுகிறது. விவசாயத்தை உண்மையிலேயே காக்க வேண்டும் என்றால் நிலையான பாசன வலைப்பின்னல்களை ஏற்படுத்தி தர வேண்டும், விவசாயம் சார்ந்த உள்கட்டுமானம் அமைக்கப்பட வேண்டும், மாற்றுப் பயிர் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டறிய வேண்டும், உத்தரவாதமான, இலாபகாரமான ஆதரவு விலைகள் கிடைக்க வழிகளை ஏற்படுத்த வேண்டும், ஒரு பொதுவான கொள்முதல் அமைப்பின் மூலம் எல்லா விலை பொருட்களையும் வாங்குவதற்கு உத்தரவாதம் செய்து கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் மகிழ்ச்சியாக விவசாயத்தை மேற்கொள்ள முடியும். அப்போது நாமும் சொல்லலாம் இது விவசாயிகளின் தேசம் என்று பெருமையாக.

- வி.களத்தூர் எம்.பாரூக்
நன்றி : புதிய விடியல் இதழ் 01-15 டிசம்பர் 2018
மோடியின் பயிர்காப்பீடு திட்டம் யாருக்கானது மோடியின் பயிர்காப்பீடு திட்டம் யாருக்கானது Reviewed by நமதூர் செய்திகள் on 04:05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.