அடைக்கலமின்றித் தவிக்கும் ஐரோம் ஷர்மிளா - பானு
ஐரோம் ஷர்மிளா தன் பதினாறு ஆண்டுகால உண்ணாவிரதத்தை முடித்தார். எதற்காக உண்ணாவிரதம் இருந்தார்? ஆம்.. சரிதான்.. அவரது மாநிலமான மணிப்பூரில் சிறப்பு ராணுவம் நுழைக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் யாரை எப்போது வேண்டுமானாலும் சோதிக்கலாம் எனும் அராஜகத்தை எதிர்த்து, உண்ணாவிரதப்போர் நிகழ்த்தினார். கட்டாய உணவூட்டலில் மருத்துவமனையிலேயே கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.
பல திசைகளிலிருந்தும் அவருக்கு ஆதரவுக்குரல் எழுந்தது. ராணுவத்தைத் திரும்பப்பெறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றார். ஒரு நாள், இரு நாட்கள் அல்ல.. பதினாறு வருடங்களுக்குப் பிறகு தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். அரசியலில் ஈடுபட்டு ஆட்சியைப் பிடிக்க உதவுங்கள்; ராணுவத்திற்கு நான் தடையுத்தரவு பிறப்பிப்பேன் என்றார்.
தமக்காக ஒரு பெண் தன் உயிரைப் பணயம் வைத்து அரசை எதிர்த்தார். இப்பொழுது அரசியலில் பயணிக்கும் அவரது அறிவிப்பைக் கண்டு மக்கள் ஆரவாரிப்பர்; பெரும் ஆதரவு அளிப்பர் என்றெல்லாம் உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, மணிப்பூர் மக்களோ ஷர்மிளாவின் முடிவை ஆட்சேபித்தனர். ஆதரிக்கவில்லை. வரவேற்கவில்லை.ஏன், தங்குவதற்கு இடம் கூட கிடைக்காத ஷர்மிளா, மறுபடியும் அதே மருத்துவமனையில் தானே சிறைபுகுந்துள்ளார்.
ஷர்மிளா திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்ததை மக்கள் விரும்பவில்லையாம். திருமணம் செய்தவர்கள் சமுகப்பணியாற்ற இயலாதா? திருமணம் செய்தாலும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் அரசியலில் ஈடுபட்டாலும் தன் போராட்டம் தொடரும் என்று உறுதி அளித்த ஒரு பெண்ணுக்கு மக்கள் சிறிதும் தம் கவனத்தை அளிக்கவில்லை. எந்த அமைப்பும் அவருக்குக் கை கொடுக்கவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கோவில்களில் கூட அவர் அனுமதிக்கப்படவில்லை.
ஷர்மிளாவின் இந்நிலையைக் கண்டு மனம் வருந்திய பல இந்தியர்களில் ரேணுகா ஷஹானேவும் ஒருவர். வட இந்திய நடிகை ரேணுகா ஷஹானே, மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கிக்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஷர்மிளா தம் வீட்டில் தங்குவது தனக்குக் கிடைக்கவிருக்கும் கண்ணியம் என்றும் கூறியுள்ளார். மேலும் தன் முகப்புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“ஷர்மிளா, நீங்கள் உணவின்றித் தவிக்கும்போது உங்களுக்கு மக்கள் ஆதரவளித்தனர்.உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட உங்களின் தனிப்பட்ட விருப்பத்தை யாரும் எதிர்க்க முடியாது. நீங்கள் போராட்டத்தை இன்னும் கைவிடவில்லை என்பதை நான் அறிவேன். புறக்கணிப்பு என்பது உங்களுக்குப் புதிதல்ல. ஆனால் அது இம்முறை உங்கள் புறத்திலிருந்தே வந்துள்ளது. அரசியலைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. என்றாலும் தம் கருத்தைப் பிறரிடம் திணிப்பதை நான் எதிர்க்கிறேன். ஒருவர் விரும்பியவரைத் திருமணம் செய்வதை யாரும் தடுக்க முடியாது. நீங்கள் இருந்த சிறைக்கே மீண்டும் சென்ற காட்சி என் மனதை வருத்துகிறது. ”
போராட்டத்தின் திசையை அல்ல; வழிமுறையையே மாற்றியுள்ளதாக ஐரோம் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
- http://www.thoothuonline.com/archives/76763
அடைக்கலமின்றித் தவிக்கும் ஐரோம் ஷர்மிளா - பானு
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:29:00
Rating:
No comments: