இது சர்வாதிகாரப் போக்கு:மக்கள் அதிகாரம்!


மதுவுக்கு மூடுவிழா நடத்தக்கோரி, திருச்சியில் மாநாடு நடத்தி அரசையே அதிரவைத்தது ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு. தற்போது, ‘நீதிபதிகள் யாரும் ஆண்டைகளும் அல்ல! மக்கள் யாரும் அவர்களின் அடிமைகளும் அல்ல!” என்ற கோஷத்தோடு, அதே அமைப்பு நீதிபதிகளின் ஏகபோக அதிகாரத்துக்கு எதிராக திருச்சியில் மாநாடு நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘நீதிபதிகளும் சாதாரண மனிதர்கள்தாம். ஒரு சார்புத்தன்மை, பாரபட்சம் மேலும் தவறுகளே செய்யாதவர்கள் அல்ல. இந்த உண்மை நீதிமன்றங்களிலேயே தொழில்புரியும் வழக்கறிஞர்களான எங்களுக்குத் தெரியும். ஆகவேதான், நீதிபதிகளை விமர்சிக்க எங்களுக்கு உரிமையுண்டு’ என்று, தங்கள் கருத்தை முன்வைத்தார்கள் வழக்கறிஞர்கள். இந்நிலையில்தான், வழக்கறிஞர்களை கட்டுப்படுத்தும்வகையில் புதிய சட்டத் திருத்தத்தை சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்தது. இதையடுத்து, “லஞ்சம் வாங்கும் நீதிபதிமீது புகார் கொடுத்தால், நீதிமன்றத்தில் சத்தமாக வாதிட்டால் அந்த வழக்கறிஞரை விசாரணையின்றி தொழிலிருந்தே விரட்ட திட்டமிட்டே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது” என்று வழக்கறிஞர்கள் கொதித்தெழுந்தார்கள். .
இதையெதிர்த்து, இரு மாதமாக வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள். டெல்லி பார் கவுன்சில் 126 வழக்கறிஞர்களை சஸ்பெண்டு செய்தது. இந்நிலையில்தான், நீதிபதிகளுக்கு எதிராக திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்தியிருக்கிறது மக்கள் அதிகாரம் அமைப்பு. இதுகுறித்து, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தர்மராஜ் அவர்களைத் தொடர்புகொண்டு நாம் பேசினோம்.
“இது நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்குமான பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. உண்மையில், இது மக்களின் பிரச்னை. நீதிபதிகளை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது என்ற சூழல் ஆபத்தானது. இது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கக்கூடியது. இதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று நாங்கள் கருதினோம். மாநில முதல்வரை, நாட்டின் பிரதமரை நம்மால் விமர்சிக்க முடிகிறது. ஆனால் நீதிபதியை விமர்சிக்க சட்டத்தில் இடமில்லை என்பதை நாங்கள் தவறு என்று கருதுகிறோம். ஏனென்றால், தவறு செய்யும் நீதிபதிகளை யார் கண்டிப்பது. இதை தட்டிக்கேட்கும் குறைந்தபட்ச வாய்ப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே உள்ளது. அதற்கும் வாய்ப்பூட்டு போடுகிறார்கள். வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் கைநீட்டிப் பேசக்கூடாது, புருவத்தை உயர்த்திப் பேசக்கூடாது என்று நெருக்கடி கொடுத்தால் ஒரு சாமானியன் என்ன செய்வான்?. நீதித்துறையில் நீதிபதிகளுக்கு இருக்கக்கூடிய இந்த சர்வாதிகாரப்போக்கை விமர்சிக்க நாங்கள் திருச்சியில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த முயற்சித்தோம். இதற்காக, பதினைந்து நாட்களுக்கு முன்னால் அனுமதி கேட்டோம். காவல்துறை எங்களை அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்தது. இறுதியில், இது மாநிலம் தழுவிய பிரச்னை. நீங்கள் நீதித்துறையையே விமர்சிக்கிறீர்கள். நாங்கள் அனுமதித்தால் அது போலீசுக்கும் நீதித்துறைக்குமான பிரச்னையாக மாறிவிடும்” என்று அனுமதிதர மறுத்தார்கள். தங்களின் பதவி உயர்வுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதே இந்த அனுமதி மறுப்புக்குக் காரணம்.
நாங்கள் திட்டமிட்டபடி மாநாடு நடக்கும் என்று அறிவித்துவிட்டோம். ‘எங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் கூட்டம் நடத்தினால் நாங்கள் கைது நடவடிக்கையில் ஈடுபடுவோம்’ என்றார்கள் காவல்துறையினர். நாங்கள் திட்டமிட்டபடி, 1300க்கும் மேற்பட்டோர் திரண்டோம். நீதித்துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினோம். உடனே எங்களை கைது செய்து மூன்று மண்டபங்களில் அடைத்தார்கள். பின்னர் விடுவித்தார்கள். நீதித்துறையின் இந்த சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார் அவர்.
இது சர்வாதிகாரப் போக்கு:மக்கள் அதிகாரம்! இது சர்வாதிகாரப் போக்கு:மக்கள் அதிகாரம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.