சிறுவாணி யாருக்கு? அன்றும் இன்றும் - ஓர் அலசல்


சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட, கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்ற செய்தி தமிழகத்தையே பதற்றத்துக்குள்ளாக்கிவிட்டது. ஒருபக்கம், தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். மறுபக்கம், தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். மேற்குத் தமிழக மக்களோ, தங்களின் நீர் ஆதாரம் பறிக்கப்பட்டுவிடுமோ என அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள்.
சிறுவாணி ஆற்றுப் பிரச்னையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் பவானி மற்றும் சிறுவாணி ஆறுகள் பயணிக்கும் பாதைகளை அறிந்துகொள்ள வேண்டும்.
பவானி நதி, தமிழகத்தில் நீலகிரி மேற்கு நீர்ப்பிடிப்பு பகுதி அதாவது western catchment என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து அப்பர் பவானி அணைக்கட்டுக்குச் சென்று கேரளாவுக்குள் நுழைகிறது. கேரளாவில் அமைதிப் பள்ளத்தாக்கையொட்டி, தெற்கு நோக்கிப் பாய்ந்து முக்காலி என்ற இடத்தை அடைகிறது. அங்கிருந்து 120 டிகிரி திரும்பி வடகிழக்குத் திசையில் பாய்ந்து அட்டப்பாடி சமவெளிக்கு வருகிறது. பவானி அட்டப்பாடியில் 35 கி.மீ. தூரம் வளைந்து நெளிந்து பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களைப் பசுமையாக்குகிறது. அங்கேதான் கோட்டத்துறை என்ற இடத்துக்கருகே பவானியோடு சிறுவாணி ஆறு இணைகிறது. அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் கடந்தால் அத்திக்கடவு என்ற இடத்தில் தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது பவானி. அங்கிருந்து வடகிழக்கே நகரும் பவானி நதி பில்லூர் அணையை அடைகிறது. பில்லூர் அணைதான் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்கிறது. ஆக, சிறுவாணியோடு கைகோர்த்து தமிழகம் வரும் பவானி ஆறுதான் மேற்குத் தமிழகத்தின் உயிர்நாடி. அந்த உயிர்நாடியை அறுத்தெறியத் துடிக்கிறது கேரள அரசு. இது இன்று நேற்று தொடங்கிய பிரச்னை அல்ல.
சுமார் எழுபது ஆண்டுகளுக்குமுன்பே, அட்டப்பாடி மக்களின் விவசாயத் தேவையைப் பூர்த்திசெய்ய சித்தூரில் சிறுவாணிக்கு குறுக்காக பிரம்மாண்ட அணைகட்ட கேரளா திட்டமிட்டது. காவிரி நடுவர் மன்ற ஒப்பந்தப்படி, காவிரியின் கிளை நதிகளில் 6.5 டிஎம்சி நீர் வரை கேரளா எடுத்துக்கொள்ள உரிமம் உள்ளது. அதற்கேற்ப தடுப்பணை மட்டும் கட்டிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. அதற்காக கேரள அரசு, இப்பகுதி பழங்குடிகளின் 247 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வேலையையும் தொடங்கியது. சித்தூர் அணை கட்ட ரூ.200 கோடி மதிப்பில் திட்டமும் தயாரித்துள்ளது. ஆனால் பல்வேறு பிரச்னைகளால் அந்தத் திட்டம் அப்படியே நின்றுபோனது. ஊழல், நிலத்தை கையகப்படுத்தியதில் மோசடி, இயற்கை ஆர்வலர்களின் எதிர்ப்பு, வனவிலங்குகளின் தொல்லை என இந்தத் திட்டம் நின்றுபோனதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. ஆனாலும் தமிழகத்தின் எதிர்ப்பே இந்தத் திட்டம் நின்றுபோனதற்கு பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. எனவே, கேரள அரசோடு எழுபது ஆண்டுகளுக்குமுன்பே நாம் போராடத் தொடங்கிவிட்டோம்.
ஆனால் கேரள அரசு அத்தோடு சும்மா இருக்கவில்லை. 2002இல் முக்காலியில் அணைகட்ட தன் முயற்சியைத் தொடங்கியது. அமைதிப் பள்ளத்தாக்கில் பல கிளைகளாகப் பிரியும் பவானி முக்காலி கிராமத்துக்கு வந்து சேருகிறது. பிறகு, 35 கி.மீ. பயணம் செய்து தமிழகத்தில் பில்லூர் வந்தடைகிறது. இந்த ஆதார நீர்த்தடத்தில்தான் ஒரு பெரிய அணையைக் கட்ட கேரள அரசு 2002ஆம் ஆண்டில் திட்டமிட்டு அடிப்படை வேலையைத் தொடங்கியது. அதற்காக, 40 அடி ஆழமுள்ள பவானி ஆற்றுக்குமேலே ஒரு கான்கிரீட் தூணை எழுப்பியது கேரள மாநில மின்வாரியத் துறை. வடகிழக்கே பாயும் பவானி நதிக்கு குறுக்கே பிரம்மாண்ட தடுப்பணை கட்டி, இதற்கு நேர் எதிராக ஆற்றைத் திருப்பி 1,800அடி உயரத்திலிருந்து விழும் மத்தம்பட்டி அருவியுடன் இணைக்கத் திட்டமிட்டது கேரளா. இதன்மூலம், மின்சாரம் தயாரிப்பதுதான் கேரள அரசின் திட்டம். இதற்கான செலவு ரூ. 100 கோடியைத் தாண்டும் என்று அப்போது கூறப்பட்டது. அத்துடன், இந்தப் பகுதியில் ஒரு சர்வதேச குளிர்பானக் கம்பெனி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கம்பெனி மினரல் வாட்டரோ, குளிர்பானங்களோ தயாரிக்கத்தான் மறைமுகமாக கேரள அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் கேரள மக்களிடம் அப்போது எழுந்தது. இந்நிலையில்தான், அப்போதைய அந்தோணியின் அரசை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
‘இந்த ஆறு திசைதிருப்பப்படும் பகுதியில் அபரிமிதமாக தண்ணீர் பொங்கினால்’ தம் நிலங்கள், வீடுகள் எல்லாம் ஆற்றோடு போய்விடும் என்று அஞ்சிய இந்தப் பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து, கம்யூனிஸ்ட் கட்சியோடு கைகோர்த்து போராட்டக் களத்தில் குதித்தார்கள். அதேசமயம், அந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு பவானி நீர் கிட்டவே கிட்டாது என்று தமிழக விவசாயிகள், சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் யாவும் போராட்டத்தில் குதித்தன. மேலும் தங்கள் பகுதிக்கு வரும் பவானி வறண்டுவிடும் என்று அஞ்சி, சோலையூர் உள்ளிட்ட முள்ளி பகுதிகளில் உள்ள கேரள மக்களும், அட்டப்பாடி பழங்குடியினரும் இந்த அணைத் திட்டத்தை எதிர்த்தார்கள். அவர்களுடன் தமிழக விவசாயிகளும், அரசியல் அமைப்பினரும் கைகோர்த்தார்கள். 14.02.2003 அன்று இதற்காக கூட்டம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து, பெரியார் தி.க., கு.ராமகிருஷ்ணன், காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கலந்துகொண்டு அணைக்கு எதிராகத் தீர்மானம் போட்டு, முக்காலியில் அணைகட்ட திட்டமிட்ட பகுதியை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் கலந்துகொண்டார். இதற்கு சில நாட்கள் கழித்து கொங்கு இளைஞர் பேரவை, பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், மதிமுக-வினர் முக்காலி பவானியை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் பலரும் தாக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னை இரு மாநிலங்களுக்கும் இடையே பெரிதாக வெடித்தது. அப்போது மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. அதன் தலையீட்டால் முக்காலி அணைக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி கிடைக்கவில்லை. முக்காலிக்கு கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள அட்டப்பாடி கிராமங்களில் பெரும்பாலும் பழங்குடியினருடன் தமிழர்களே வசிக்கின்றனர். முக்காலி அணை கட்டப்படுவதால் அங்கு செல்லும் பவானி வறண்டு பாதிக்கப்படும். சிறுவாணிக்கு குறுக்கே கட்டப்படும் சித்தூர் அணையை அணைத் திட்டத்திலேயே கொண்டு வருவதில்லை என்ற கருத்துகள் அட்டப்பாடியில் இருக்கும் தமிழர்களிடையிலேயே வலுக்க ஆரம்பித்தது. இந்நிலையில், 2012இல் மீண்டும் தூசி தட்டப்பட்டது சிறுவாணிக்கு குறுக்கான சித்தூர் அணை விவகாரம். 2012இல் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னி தாலா, அட்டப்பாடி பகுதிக்கு வந்து நிலவரங்களை ஆய்வு செய்தார். இங்குள்ள மக்களின் நீர் தேவையை வலியுறுத்தி பழைய சித்தூர் அணை மட்டுமல்ல; சிறுவாணி சென்று பவானியில் கலக்கும் இடம்வரை சிறுசிறு தடுப்பணைகளைக் கட்டுவதன்மூலம் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்ற பரிந்துரையை அரசுக்குத் தந்தார். சித்தூர் அணையில் ஒரு பெரிய அணையையும், அந்த ஆறுகளின் வழியோரங்களில் 12 தடுப்பணைகளும் கட்டி 6.5 டிஎம்சி தண்ணீரை எடுக்கத் திட்டமிட்டு, அதற்கு நிதியையும் அறிவித்தது கேரள அரசு. முல்லை பெரியாறுக்கு பழிவாங்கவே இந்தத் திட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது கேரள அரசு. இங்கே அணைகள் கட்டப்பட்டால் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்கள் முழுமையாகப் பாதிக்கப்படும். மேலும் ‘தற்போது அணை கட்ட திட்டமிட்டிருக்கும் அணைக்கு மேலேதான், கோவைக்கு நீர் வழங்கும் சிறுவாணி அணை உள்ளது. அது முழுக்க கேரள பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் அதை இஷ்டம்போல் திறந்துவிட்டு புதிய அணையை நிரப்பிக்கொள்ள மாட் டார்கள்’ என்று கேட்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு ‘இந்த அணையைக் கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளிக்கக்கூடாது’ என்ற கோரிக்கையையும் வைத்தார். தொடர்ந்து பல்வேறு கட்சிகள் தமிழக-கேரள எல்லை ஆனைகட்டி வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி, கோ.க.மணி தலைமையில் பாமக-வினர் ஆனைகட்டியைத் தாண்டி சிறுவாணி பகுதிக்குச் செல்ல அணி திரண்டனர். இரு மாநில போலீஸாரால் தடுக்கப்பட்டனர். சிறுவாணி நதி ஓரங்களில் அணை கட்ட ஆய்வு செய்யாமல் கேரள அரசு ஒதுங்கிக்கொண்டது. அதற்குப் பிறகு, தொடர்ந்து கேரள அரசுத் தரப்பிலிருந்து பல்வேறு கடிதங்கள் தமிழக அரசுக்கு சென்றுள்ளது. தமிழக அரசு அந்தக் கடிதங்களை ஏன் பொருட்படுத்தாமல் இருந்தது என்று தெரியவில்லை.
இப்போது அதன் உச்சமாகவே ஒருதலைபட்சமாக மத்திய அரசின் நீர்ப் பாசன மதிப்பீட்டுக் குழு கேரளத்துக்கு, அட்டப்பாடியில் அணை கட்ட அனுமதி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. பவானி முக்காலி அணையானாலும், சிறுவாணி சித்தூர் அணையானாலும் சிறு, சிறு தடுப்பணைகள் கட்டவும், அதில் பாசன வசதி பெறவும்தான் கேரள அரசு திட்டமிட்டு வருகிறது. அதுவும் 3 அணைகள் சித்தூரிலிருந்து கூட்டப்பட்டி வரையிலான சிறுவாணி பகுதியிலும், 5 அணைகள் முக்காலியிலிருந்து கூட்டப்பட்டி வரையிலான பவானி பகுதியிலும் ஆகமொத்தம் 8 அணைகள் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர். அதேசமயம் ‘இன்றைக்கு வரை முக்காலி பகுதியிலோ, சிறுவாணி பகுதியிலோ ஒரு அதிகாரிகூட அணைகட்டும் ஆய்வுக்கு வரவில்லை’ என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். மேலும் அவர்கள், ‘அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதைப் போன்று கேரள அரசிடம் இருந்தோ, நிபுணர் குழுவிடம் இருந்தோ இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. அதுபோன்ற அனுமதியை மத்திய அரசு வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை’ என்றனர். மேலும், ‘அட்டப்பாடியில் அணைக்கு அனுமதி கிடைத்திருப்பதாகக் கூறப்படும் இடத்தில் ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். அதேபோல வன விலங்குகளும், அரியவகைத் தாவரங்களும் உள்ளன. எனவே, அங்கு அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க முடியாது. அப்படி ஒரு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதை முறியடிப்போம் ’ என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
இந்நிலையில், உண்மையில் சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதித்துவிட்டதா என்ற கேள்வியை இயற்கை ஆர்வலரான ஓசை காளிதாஸிடம் கேட்டோம். அதற்கு அவர், ‘சிறுவாணியில் குறுக்கே அணைகட்ட சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை தயார் செய்ய மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி வாங்கியிருப்பது உண்மை. சிறுவாணியில் 5 டிஎம்சி தண்ணீர் பெற உரிமை இருக்கிறது என்கிறது கேரளா. சிறுவாணி, கேரளாவில் உற்பத்தியாகி கேரளாவிலே பவானியாற்றில் கலக்கிறது. பவானியாறு தமிழ்நாட்டில் நீலகிரியில் உற்பத்தியாகி, கேரளாவுக்குள் பயணம் செய்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது. சிறுவாணி உற்பத்தியாகும் இடத்திலே ஒரு அணையைக் கட்டி, சுரங்கப்பாதை மூலம் சிறுவாணி நீர் கோவைக்கு கொண்டுவரப்பட்டது. 1887இல் ஆரம்பித்து 1929 வருடம் வரை நாற்பது ஆண்டுகால கடும் உழைப்பில் இத்திட்டம் நிறைவேறியது. அன்று பாலக்காடு சென்னை மாகாணத்தில் கோவை ஜில்லாவின் அங்கமாக இருந்தது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போதுதான் பாலக்காடு கேரளாவில் இணைக்கப்பட்டது. ஆக, இந்தப் பிரிவினைக்கு முன்னரே சிறுவாணி திட்டம் நிறைவேற்றப்பட்டது. சிறுவாணி தண்ணீர் கோவையின் குடிநீருக்கு பயன்பட்டதுபோக உபரிநீர் பவானியில் கலக்கும். பவானி ஆறுதான் மேற்குத் தமிழகத்தின் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்த பவானி ஆறு, கேரளாவின் அட்டப்பாடி சமவெளி முழுவதும் ஓடுகிறது. எனவே, பவானி ஆறு கேரள மக்களுக்கும் பயன்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் பயன்படுத்தியது போக மீதியுள்ள பவானி நீர்தான் தமிழ்நாட்டுக்கு வருகிறது. ஒரு நதியின் கடைமடைப் பகுதியில் இருப்பவர்கள்தான் அந்த நதிநீர் மீது உரிமை கொண்டாட முடியும் என்கிறது சர்வதேச நதிநீர் கொள்கை. எனவே சிறுவாணி பவானி, காவேரி என அனைத்து நதிநீர் மீதான உரிமை தமிழகத்துக்கு மட்டுமே உள்ளது. சிந்து நதி இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்குச் செல்கிறது. பாகிஸ்தானுடைய அனுமதியில்லாமல் நாம் சிந்து நதியில் ஒரு அணை கட்ட முடியாது. சர்வதேச நதிநீர் கொள்கை அதை அனுமதிக்காது. பிரம்மபுத்திராவும் கங்கை நதியும் இந்தியாவிலிருந்துதான் வங்கதேசத்துக்குச் செல்கிறது. வங்கதேசத்தின் அனுமதியில்லாமல் நாம் இங்கே அணை கட்ட முடியாது. எனில், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயலுவதும், கேரளா சிறுவாணியில் அணை கட்ட முயலுவதும் சர்வதேச நதிநீர் கொள்கைக்கு எதிரானது. சிறுவாணி தண்ணீரைத் தடுக்க முயலும் இந்தத் திட்டம், கேரள மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்ல. தமிழகத்தோடு வம்பிழுப்பதற்கான திட்டம். மேற்குத் தமிழகத்தின் உயிர்நாடியாக பவானி ஆறு இருக்கிறது. அது கோவை, திருப்பூர், அவிநாசி, அன்னூர், பல்லடம், கோபிச்செட்டிபாளையம் இப்படி எண்ணற்ற ஊர்களுக்கு இந்த பவானிதான் உயிர் ஆதாரமாக இருக்கிறது. இதை கெடுக்க நினைக்கிறது கேரள அரசு. தார்மீகரீதியாகவும் இந்திய தேசிய நதிநீர் கொள்கைரீதியாகவும் உலகளாவிய ஆற்றுநீர் கொள்கைரீதியாகவும் கேரளா செய்யும் செயல் தவறானது" என்று பேசி முடித்தார்.
கேரளா தொட்டதற்கெல்லாம் அணை கட்டுவேன் என்று கிளம்புவதற்கு தமிழ்நாடு பதிலடி கொடுக்க முடியும் என்கிறார்கள் தமிழக நீர் நிலைகளைப் பற்றிய தரவுகளை நன்கு அறிந்தவர்கள். அதாவது நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உள்ள பாண்டியாற்றின் நீர் முழுவதும் கேரளாவுக்குச் சென்று, புன்னம்புழா ஆற்றில் கலந்து கடலில் கலக்கிறது. இந்த நீரை தமிழகத்துக்குப் பயன்படுத்தும்வகையிலும் மின் உற்பத்தி செய்யவும் பாண்டியாறு - புன்னம்புழா நீர்மின் திட்டம், 1969ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, கூடலுார் சுற்றுப்புறப் பகுதிகளில் பாயும் 10க்கும் மேற்பட்ட சிறு ஆறுகளை இணைத்து, மின் உற்பத்திக்கான அணைகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இதற்குக் காரணம், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், கேரளாவின் ஜீவநதியான சாலியார் ஆற்றின் நீர்வரத்து அடியோடு நின்றுவிடும். இன்று, அரசியல் லாபத்துக்காக முல்லைப் பெரியாறு பிரச்னையை கேரள அரசியல் கட்சிகள் பெரிதாக்கி வருகின்றன. ஆகவே பாண்டியாறு, புன்னம்புழா திட்டம் உள்ளிட்ட, பிற முக்கிய அணைத் திட்டங்களை தமிழக அரசு முயற்சித்தால் என்னவாகும் என்பதை கேரளா யோசித்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.
-வேட்டை பெருமாள்
சிறுவாணி யாருக்கு? அன்றும் இன்றும் - ஓர் அலசல் சிறுவாணி யாருக்கு? அன்றும் இன்றும் - ஓர் அலசல் Reviewed by நமதூர் செய்திகள் on 03:16:00 Rating: 5

No comments:

Powered by Blogger.