பென்ஷனுக்காக அதிகாரிகள் இழுத்தடிப்பு: விரக்தியில் சுதந்திர போராட்ட தியாகியின் மனைவி!
திருவாரூர்(26 ஆக.2016): பென்ஷனுக்காக அதிகாரிகள் தொடர்ந்து இழுத்தடிப்பதால் விரக்தியடைந்துள்ள சுதந்திர போராட்ட வீரரின் மனைவி, பென்ஷனே வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேட்டை சாலையில் வசித்து வந்தவர் சுதந்திர போராட்ட தியாகி டாக்டர் கே.எஸ்.முகம்மது தாவுது(99). இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இவர் ஆங்கிலேயருக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த ஐஎன்ஏ படையில் தீவிரமாக பணியாற்றியவர். நேதாஜிக்கு நெருங்கிய நண்பராக விளங்கினார். இவரது சேவைக்காக கலிபோர்னியாவில் கடந்த 1996 ஆம் ஆண்டு டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசின் தியாகிகள் பென்ஷன் வாங்கி வந்த முகமது தாவுது உடல்நலக்குறைவால் கடந்த 2015ம் ஆண்டு இறந்தார். அப்போது தியாகியின் மனைவி சபுரா அம்மாளிடம் ஆறுதல் கூற வந்த அதிகாரிகள் சபுரா அம்மாளிடம் தியாகியின் வாரிசு பென்ஷன் கிடைக்க வழி உண்டு அதற்காக ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியுள்ளனர். அதன் பின்னர் 17 மாதங்கள் ஆகியும் அவரது மனைவி சபுரா அம்மாளுக்கு பென்ஷன் கிடைக்கவில்லை. பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு மற்றும் பல ஆவணங்கள் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், திருத்துரைப்பூண்டி தாசில்தார் ஆகியோருக்கு சபுரா அம்மாள் புகார் மனு அனுப்பியும் இதுவரை பதிலில்லை. இதற்கிடையே தியாகி முகம்மது தாவூது வீட்டுக்குச் சென்ற வருவாய்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டு தியாகியின் இறப்பு உள்ளிட்ட 12 வகையான சான்றிதழ்கள் கேட்டுள்ளார்.
ஏற்கனவே பல ஆவணங்கள் சமர்பித்தும், தொடர்ந்து அதிகாரிகளால் இழுத்தடிப்பதால் பென்ஷனே வேண்டாம் என தியாகி முகம்மது தாவூதின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துவிட்டனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நண்பரின் மனைவிக்கே இந்த நிலையா? என சமூக ஆர்வலர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளதோடு இவ்விவகாரத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசிடம் தொடர்புள்ளவர்கள் முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பென்ஷனுக்காக அதிகாரிகள் இழுத்தடிப்பு: விரக்தியில் சுதந்திர போராட்ட தியாகியின் மனைவி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:15:00
Rating:
No comments: