விடுதலைக்காக விதையாய் விழுந்தவர்கள்! - வி.களத்தூர் எம்.பாரூக்


மூன்று இடங்களில் வெட்டுக்காயம் பட்டு மெல்ல சரிந்து கொண்டிருந்த திப்புவிடம், "சரணடைந்து உயிரைக் காத்துக்கொள்வோம்" என்று ராஜாகான் வேண்டினான். "ஆட்டைப்போல் 100 ஆண்டுகள் வாழ்வதை விடவும், புலியைப்போல் சில நாட்கள் வாழ்வதே பெருமை" என்று கூறிய திப்பு யாரிடமும் மண்டியிடாமல், உயிர்பிச்சை கேட்காமல் வீரமரணத்தை முத்தமிட்டான்.


திப்புவின் குணம் மட்டும் அப்படியானது அல்ல. இந்திய முஸ்லிம்களுடைய குணமும் அப்படிதான் இருந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தனது விகிதாச்சாரத்தை விட அதிகம் பங்கேற்பு செய்த ஒரு சமூகம் முஸ்லீம் சமூகம். அவர்களுடைய மார்க்க கடமைகளில் ஒன்றாகவே விடுதலைக்காக போராடுவதையும் பார்த்தார்கள். "கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கலந்து கொள்ள மாட்டோம்" மௌலவி. அப்துல் ஹமீது பாகவி அன்று கூறியது ஒரு சிறு உதாரணம்தான். "முஸ்லிம்கள் பிரிட்டிஷாரின் ராணுவத்தில் பணியாற்றுவது ஹராம்" என்று சென்ற இடங்களிலெல்லாம் முழங்கினார் மௌலானா முஹம்மது அலி.
.
முஸ்லிம்கள் இந்திய விடுதலைக்காக போராடுவதை தனது மார்க்க கடமைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல் கருதினார்கள். அதனால் பெருந்திரளாக பங்கேற்றார்கள். போராட்டத்தில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வீரமரணமடைந்தனர். "ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் விடுதலை வேள்வியில் பங்கெடுத்ததிற்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள்" என்கிறது ஒரு அறிக்கை.  முஸ்லிம்கள் சமரசமில்லாத கடுமையான போராட்டத்தை நடத்தியவர்கள். அதனால் ஆங்கிலேயர்களின் கடும் சின்னத்திற்கு ஆளானவர்கள்.

"முஸ்லிம் மக்கள் ஆயுதம் தாங்கி போராடவும் தயாராக உள்ளனர். ஒரே சமயத்தில் 15,000 பேர் திரண்டு எழும் அபாயம் நிலவுகிறது. கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்கிறது ஆங்கில அரசின் அறிக்கை. தமிழகத்தின் ஒரு பகுதியில் நடைபெற்ற சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை அமைந்துள்ளது. இதுபோல இந்தியாவெங்கும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் எந்த வகையான போராட்டத்திற்கும் தயாராகவே இருந்தனர்.

அந்த அளவிற்கு முஸ்லிம்கள் சுதந்திர தாகத்தை கொண்டிருந்தார்கள். துவக்கத்திலிருந்தே அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதில் முன்னணியில் உறுதியுடன் இருந்தார்கள் முஸ்லிம்கள். நூறாண்டுகளுக்கு மேல் போர்ச்சுகீசியர்களை எதிர்த்து போராடியவர்கள் குஞ்சாலி மரைக்காரர்கள். 

1528 ல் பர்கூர் எனுமிடத்தில் போர்ச்சுகீசிய கப்பல்களை தாக்கினர். போர்ச்சுக்கல் நாட்டிற்கு கப்பல்களைத் தகர்த்தனர். எதிர்த்த போர்ச்சுக்கீசியர் அனைவரும் கடலுக்குள் சமாதியாயினர். இது குஞ்சாலி மரைக்காயரின் முதல் மாபெரும் வெற்றி. அந்நிய ஆதிக்கத்தை எதிர்ப்பதில் முதல் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர், மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் ஆகிய மூன்று பேருமே சிறப்பாக முறையில் செயல்பட்டார்கள். அதற்காகவே அவர்கள் பல்வேறு இன்னல்களையும், இழப்புகளையும் சந்தித்தார்கள்.

அதேபோல ஆங்கிலேய படையை சிதறடித்து அவர்களை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை மற்ற மன்னர்களிடத்தில் ஏற்படுத்தியவர்களில் இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒருவர் சிராஜ் உத் தௌலா. மற்றொருவர் திப்பு சுல்தான். இருவருமே கடுமையான ஒரு பின்னடைவை ஆங்கிலேயர்களுக்கு ஏற்படுத்தினார்கள். இருவரையும் நேரிடையாக வீழ்த்த முடியாது என்று தெரிந்துகொண்ட ஆங்கிலேயர்கள் துரோகத்தை கைக்கொண்டு அவர்களை வீழ்த்தினார்கள்.

ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராக நின்றவர்தான் வங்கத்தை ஆண்ட சிராஜ் உத் தௌலா. 23.06.1757 ல் நடைபெற்ற பிளாச்சிப் போர்தான் முதல் பெரிய யுத்தமாகும். அது ஆங்கிலேயருக்கும், தௌலாவிற்கும் இடையேதான் நடைபெற்றது. இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரன்தான் தௌலா. இவரை தோற்கடிக்க தோற்கடிக்க கடும் பிராய்ச்சித்தம் செய்தனர் ஆங்கிலேயர்கள்.

08.09.1780 ல் மைசூரின் மீது படையெடுத்த பெய்லின் படையைச் சிதறடித்து, அவனைக் கைது செய்து தந்தை ஹைதர் அலியின் முன் நிறுத்தினார் திப்பு. "உங்கள் மகன் எங்களை தோற்கடிக்க மட்டும் செய்யவில்லை. முற்றிலும் நாசப்படுத்தி விட்டார்" என்றான் பெய்லி. திப்புவின்  வீரத்தையும், மன உறுதியையும் கண்ட ஆங்கிலேயர்களால் அவனை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது என்பதனை உணர்ந்து கொண்டு துரோகிகளின் கைக்கொண்டு வெற்றிபெற்றனர். திப்புவின் மரணத்திற்கு பிறகுதான் இனி இது எங்கள் தேசம் என்று மிதப்பு அடைந்தனர். அந்த அளவிற்கு திப்பு அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

அதேபோல சுதந்திரத்திற்காக போராடிய மற்ற மன்னர்களின் பின்புலத்திலும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள் முஸ்லிம்கள். ஆனால் அந்த மன்னர்கள் கொண்டாடப்படும் அளவிற்கு அவர்களுக்கு பின் தூணாக இருந்த வீரம் செரிந்த தியாகத்தை செய்த முஸ்லிம்கள் கொண்டாடப்படுவதில்லை. பல மன்னர்களிடம் தளபதிகளாக, வீரர்களாக பங்கெடுத்து இருக்கிறார்கள் முஸ்லிம்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் மூன்று முஸ்லீம் தளபதிகள் சிறப்பாக செயலாற்றி இருக்கிறார்கள். அதேபோல நூற்றுக்கணக்கான முஸ்லீம் வீரர்களும் அவருடைய படையில் இருந்து ஆங்கிலேயருக்கு எதிராக காலத்திலே நின்றிருக்கிறார்கள். ஜாக்சன் துரையை கட்டபொம்மன் சந்திக்கும்போதுகூட முஸ்லீம் தளபதிகளும் உடன் சென்றனர்.

இராமநாதபுரத்திற்கு ஜாக்சன் துரையை சந்திக்க கட்டபொம்மன் சென்ற போது அவரோடு சென்ற தளபதிகள் "முகம்மது தம்பியும், இபுராமு சாகிபு, இசுமாலு ராவுத்தரும்" என்று வீரபாண்டியன் கட்டபொம்மு கதைப்பாடல் கூறுகிறது. கட்டப்பொம்மன் படையில் ஏராளமான இஸ்லாமிய வீரர்களும் இருந்திருக்கிறார்கள் என்றும் மற்றோர் கதைப்பாடல் கூறுகிறது. 

அதேபோல மற்ற மன்னர்களின் கீழ் இயங்கி வெளியில் தெரியாமல் போன மாவீரன்தான் சேக் உசேன். அவரின் வீரப்போராட்டம் பல இடங்களில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. தென்னிந்திய கிளர்ச்சியில் மருது பாண்டியர் சகோதர்களின் படையைத் தலைமை தாங்கி நடத்தி சென்றவர்களில் குறிப்பிடத்தகுந்த வீரர் சேக் உசேன். இவரை "திண்டுக்கல் புரட்சி கூட்டத்தின் எழுச்சி வீரர், சிறந்த போராளி" என்று வரலாற்று அறிஞர் கே.ராஜப்பன் குறிப்பிடுகிறார். மருது பாண்டியரின் வீழ்ச்சியின் போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்ட சேக் உசேன் பினாங்கு தீவில் சங்கிலியில் பிணைக்கப்பட்டு நடமாடக்கூட முடியாமல் பசி பட்டினியால் வாடி அங்கேயே காலமானார். அவரின் தியாகம் மருது பாண்டியரின் அளவிற்கு மிகப்பெரியது. 

19 நூற்றாண்டில் சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டியது "பிரஸ்ஸி" என்ற இயக்கமாகும். 1839 -1857 வரை 18 ஆண்டுகள் இவ்வியக்கம் ஆங்கிலேயருக்கு பல சிக்கல்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியது. இதுதான் இந்தியாவின் முதல் மக்கள் இயக்கமாகும். இதை கட்டியவர் ஹாஜி. ஷரியத்துல்லா ஆவார்

"ஒரு கையில் வாளையும், மறுகையில் பேனாவையும் ஏந்தி அவ்வீரத்தியாகி மௌலவி அகமதுஷா புரிந்த தொண்டிற்கு இணையே இல்லை" என்று சாவர்க்கர் குறிப்பிடுகிறார். (எரிமலை பக்கம் 354).
1922 ல் காமராஜர் பங்கேற்ற சுதந்திர போராட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு சுதந்திர எழுச்சி பாடல்களை பாடி மக்களுக்கு சுதந்திர எழுச்சியை ஏற்படுத்துபவர் பாவலர் விருதுநகர் அப்துல் ரகுமான் என்பவர் ஆவர். அதன்பிறகுதான் காமராஜர் அந்த கூட்டங்களில் பேசுவார்.

இதுபோன்ற மறைந்தும், மறைக்கப்பட்டும் எத்தனையோ நேர்மையான மனிதர்களின் தியாகங்களும், வீரம்செறிந்த போராட்டங்களும் புதைந்து இருக்கின்றன இம்மண்ணில். அவர்கள் இந்த தேசத்திற்காக விதையாய் விழுந்தவர்கள். அவர்களை இந்த 70 வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் நாம் நினைவுகூறுவோம். அவர்களின் தியாகங்களை உலகறிய செய்வோம்.

- வி.களத்தூர் எம்.பாரூக்
thasfarook@gmail.com

நன்றி : http://www.onlineoodagam.com/2016/08/blog-post_224.html
விடுதலைக்காக விதையாய் விழுந்தவர்கள்! - வி.களத்தூர் எம்.பாரூக் விடுதலைக்காக விதையாய் விழுந்தவர்கள்! - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 07:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.