காஷ்மீர் - என்ன செய்யப் போகிறது இந்திய அரசு? - அ.மார்க்ஸ்
“ஒவ்வொரு முறையும் எங்கள் பிரச்சினையின்பால் உலகின் கவனத்தை ஈர்க்க இப்படி உயிர்த் தியாகங்களைச் செய்ய வேண்டி உள்ளது. எங்களின் சுய நிர்ணய உரிமையை உலகம் அங்கீகரிக்க எண்ணற்றோர் தங்கள் எஞ்சிய வாழ்நாளை ஊனமுற்றோர்களாகக் கழிக்கும் நிலையைத் தேர்வு செய்ய வேண்டி உள்ளது. இன்று நூற்றுக்கணக்கான எங்கள் குழந்தைகள் பார்வைகளை இழக்கவும் நேர்ந்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் எங்கள் பிரச்சினை குறித்து ஒரு விவாதத்தை உருவாக்க வேண்டுமானால் குடம் குடமாக காஷ்மீரிகளின் இரத்தம் தெருவில் ஓட வேண்டி உள்ளது..” - இப்படித் தொடங்குகிறது காஷ்மீர் மக்களின் குரலை வெளிப்படுத்தும் நாளிதழ்களில் ஒன்றான Greater Kashmir இதழின் இன்றைய நடுப்பக்கக் கட்டுரை.
ஆனால் இப்படி உயிர்த் தியாகங்களைச் செய்து, இரத்தம் சிந்தி உலகின் கவனத்தை ஈர்த்து, இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி என்ன பயன். இந்த எதிர்ப்புகள் சற்றே அடங்கினால் அவ்வளவுதான் இந்திய அரசு காஷ்மீர்ப் பிரச்சினையைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு வேறு வேலைகளில் மூழ்கி விடும். அவர்களுக்கு வேலைகளா இல்லை, சிறுபான்மையினரைச் சீண்டுவது, கார்பொரேட்களுக்குக் குடை பிடிப்பது...
நேற்று ராஜ்நாத் சிங் சிறீநகரில் ஆளுநர் வோராவுடனும் முதல்வர் மெஹ்பூபாவுடனும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது இந்திய அரசுக்கும் இராணுவத்திற்கும் எதிராக சென்ற ஜூலை 8 முதல் நடைபெறும் கல்லெறிப் போராட்டத்தின் 50 வது பலியாக இன்னொரு இளைஞன் சமீர் அஹமது செத்துப் போனான். அவனது இறுதி ஊர்வலத்திலும் ஆயிரக் கணக்கில் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அங்கு போராட்டம் ஓய்வதாக இல்லை.
ஒரு குழு அமைத்து பெல்லெட் துப்பாக்கிப் பயன்பாட்டிற்குப் பதிலாக என்ன செய்வது என்பது ஆராயப்படும் எனச் சொன்னதைத் தவிர ராஜ்நாத்சிங் வேறு உருப்படியான திட்டம் எதையும் அறிவிக்க வில்லை. மன்மோகன் சிங் செய்ததைப் போல காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை ஆராய ஐந்து செயற்பாட்டுக் குழுக்களை அமைத்தல், அனைத்துக் கட்சித் தூதுக்குழுவை அனுப்புதல் என்றெல்லாமும் கூட ஏதும் பேசவில்லை. அவருக்குத் தெரியும் அப்படி ஏதும் அறிவிப்புச் செய்தால் அது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது, காஷ்மீரிகளை இன்னும் சீண்டிப் பார்ப்பது என்பதாகவே எதிர்கொள்ளப்படும் என்று.
அந்த மக்கள் ஏற்கனவே தெள்ளத் தெளிவாகத் தெரிவித்து விட்டனர். அவர்கள் எதிர்பார்ப்பது. மன்மோகன் செய்தது போல ‘ஈத் பேக்கேஜ்’ என்பதையோ நரேந்திர மோடி அறிவித்தது போல ‘வெள்ள நிவாரணம்‘ என்பதையோ அல்ல நிவாரணங்கள் மற்றும் நிதி உதவிகள் அல்லது வேலை வாய்ப்புத் திட்டங்கள் அல்ல அவர்களின் கோரிக்கை. அப்படியாகப் பிரச்சினையைத் திசை திருப்புவது அவர்களை அவமானப் படுத்துவது. அவர்களின் பிரச்சினை ‘ஆஸாதி’. அதாவது காஷ்மீர மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் அறுபத்தைந்து ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினை ஒன்று உள்ளது என்பதை முதலில் இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான்.
அதை ஏற்க மறுக்கிறது இந்திய அரசு என்பதுதான் அடிப்படைச் சிக்கல். இன்று அதே நாளிதழில் பாஜ.கவின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் என்பவர் ஹைதராபாத்தில் பேசியதும் வெளி வந்துள்ளது. “காஷ்மீர் ஒரு பிரச்சினையே இல்லை. அங்கே கொஞ்சம் பேர் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாங்கள் திருத்திச் சரியான பாதைக்குக் கொண்டு வருவோம். இந்திய மக்கள் இராணுவத்தை முழுமையாக ஆதரிக்க வேண்டும். பிரச்சினை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமானது. அதை மத்திய அரசு கவனித்துக் கொள்ளும். மாநில அரசுக்கு அதில் எந்த வேலையும் இல்லை”.
என்ன ஆணவப் பேச்சு!
காஷ்மீர மக்களுடன் மட்டுமல்ல காஷ்மீர அரசுடனும் கூட அவர்கள் பேச மாட்டார்களாம். எல்லாம் பாகிஸ்தானால் வந்ததாம். அதை மத்திய அரசு கவனித்துக் கொள்ளுமாம். நம்முடைய வேலை இந்திய இராணுவத்தை ஆதரித்து இந்திய தேசபக்தியை நிறுவுவதுதானாம். ராஜ்நாத் சிங்கும் அதுதான் சொல்கிறார். இன்றைய எழுச்சிக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்கின்றார். இது காஷ்மீர மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்த பிரச்சினை அல்ல என்கிறார், ஆனால் அம்மக்களின் கூற்றுகள் அனைத்தையும் நீங்கள் கவனித்தீர்களானால் பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்கிற இந்திய அரசின் வாக்குறுதியை அவர்கள் இன்று வேறெப்போதையும் விட அதிகமாக அழுத்தம் கொடுத்துப் பேசுவது தெரியும்.
காஷ்மீரில் இன்று உருவாகியுள்ள எழுச்சிக்குப் பின்னணியாக பாக் இருக்கிறது என இந்திய அரசு திரும்பத் திரும்பச் சொல்வது அபத்தம். இதன் பொருள் பாக்கிற்கு எந்தப் பங்கும் இல்லை என்பதல்ல. அங்கு ஒரு சொலவடை வழக்கத்தில் உண்டு. “எல்லோருக்கும் ஒரே ஒரு நிழல் என்றால் ஒவ்வொரு காஷ்மீரிக்கும் மூன்று நிழல்கள் உண்டு”. அவருடைய நிழல் தவிர அவரைத் தொடர்ந்து வரும் இந்திய, பாக் உளவாளிகளின் நிழல்கள் இரண்டு.
ஆனால் இன்றைய எதிர்ப்பு என்பதை வெறும் பாக். தூண்டல் என ஒதுக்கிவிட்டு, அம்மக்களின் உண்மையான கவலையை இந்திய அரசு வழக்கமான திமிர்த் தனத்துடன் புறக்கணித்தால் நிச்சயம் அதற்குத் தோல்விதான்.
ஜூலை 8 அன்று இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிடின் கமான்டர் புர்ஹான் முசாஃபர் வானியின் அமைப்பில் வேறெப்போதையும் விட இன்று காஷ்மீரிகள்தான் அதிகம் உள்ளனர். மொத்தமுள்ள 145 பேர்களில் 91 பேர் காஷ்மீரிகள். 54 பேர்கள்தான் வெளிநாட்டார் என்பதும் இன்று வெளியாகியுள்ளது.
இந்திய அரசு காஷ்மீர் விஷயத்தில் செய்யும் மிகப் பெரிய தவறுகளில் ஒன்று அங்கு பெரிய எழுச்சிகள் இல்லாத போதெல்லாம் அவர்கள் அடங்கி விட்டார்கள் என நம்புவது. இந்திய அரசின் மீதான காஷ்மீரிகளின் வெறுப்பை ஒரு வரிப்படமாக வரைந்தால் அது மேல் நோக்கி மட்டுமே செல்லும் ஒரு கோடாகத்தான் இருக்கும். திடீர்த் திடீரேன அந்தக் கோடு எகிறிப் பின் தொடரும். எந்நாளும் அது கீழ் நோக்கி இறங்கியதே இல்லை. 65 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் இந்திய அரசுடன் நடத்தும் போராட்ட வரலாற்றில் குறைந்த பட்சம் நான்கு கட்டங்கள் உண்டு. காஷ்மீரிகள் அமைதி விரும்பிகள். 1989 வரை, சுமார் 40 ஆண்டு காலம் அவர்கள் அமைதி வழியில்தான் போராடினார்கள். ஒரு சொட்டு இரத்தமும் அங்கு சிந்தவில்லை. அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முற்றாக மறுக்கப்பட்ட பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கவிழ்க்கப்பட்டதும். வெற்றிபெற்ற வேட்பாளர்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டதும்தான் அவர்களை ஆயுதப் போரட்டத்திற்கு இழுத்துச் சென்றது என்பதை இது குறித்து எழுதும் அத்தனை நடுநிலையாளர்களும் பதிவு செய்துள்ளனர்.
வெற்றிபெற்றும் தோற்றதாக அறிவிக்கப்பட்ட சையத் சல்லாவுதீன் தான் முதல் ஆயுதம் தாங்கிய முஜாஹிதீன் படையை உருவாக்கியவர் என்பது வரலாறு. 2003 வரை அங்கு கடுமையான ஆயுதப் போராட்டம். கடும் அடக்கு முறை. 8000 பேர் காணாமலடிக்கப்பட்டார்கள். 80,000 பேர் கொல்லப்பட்டார்கள். ஏழு லட்சம் இந்திய இராணுவம் ‘அஃப்ப்சா’ சட்ட அதிகாரத்துடன் அங்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டது. அந்தச் சட்டப்படி அவர்கள் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம். எவரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம். அப்படிச் செய்பவர்களை மாநில அரசோ, மாநில மனித உரிமை ஆணயமோ கைது செய்யவோ, வழக்குத் தொடரவோ இயலாது. பிரதமர் கையொப்பமிட்டால்தான் நடவடிக்கை எடுக்கலாம். அவர் கையெழுத்திட்டதாக வரலாறே இல்லை. ஒரு முறை அப்படி மனித உரிமை ஆணையம் குற்றவாளி என அறிவித்த ஒருவரைக் கைது செய்யும் ஆணையில் கையெழுத்துப் போட மன்மோகன் சிங் மறுத்தது குறித்து ஒரு இதழாளர் சந்திப்பில் சித்தார்த் வரதராஜன் கேள்வி எழுப்பியபோது மன்மோகன்சிங் தலை குனிந்தாரே தவிர பதில் சொல்லவில்லை (ஜூன் 4, 2010 The Hindu).
2003 முதல் 2007 வரை அங்கு ஆயுதப் போராட்டம் நின்றிருந்தது. இந்திய அரசு காஷ்மீரிகள் சோர்ந்துவிட்டனர் என நம்பியது. 2008 அக்டோபர் 6 அன்று காஷ்மீர் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து ஒரு அமைதியான பேரணியை அறிவித்தபோது அதைக் கடுமையாக ஒடுக்கியது. பார்வையாளர்களாகச் சென்றிருந்த நாங்கள் எல்லாம் கதவுகள் பூட்டப்பட்டு வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டோம். அதன்பின் நடந்த மாநிலத் தேர்தலில் தேர்தல் புறக்கணிப்புக் கோரிக்கையை மீறி 60 சத மக்கள் வாக்களித்ததைக் கண்டு இந்திய அரசு களிப்படைந்தது. கஷ்மீரிகள் பணிந்துவிட்டதாக நம்பியது. ஆனாலும் குவிக்கப்பட்ட ஏழு லட்சம் படைவீரர்களில் ஒருவரைக் கூடக் குறைக்கவில்லை. அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்கவில்லை. அதிகாரக் கொழுப்பெடுத்த இராணுவம் வழக்கம்போலப் பெண்களைத் தூக்கிச் சென்றது. பதவி உயர்வு கிடைக்கும் என்பதற்காக இளைஞர்களை ஏமாற்றி அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றது.
2010இல் போராட்டத்தின் மூன்றாம் கட்டம் தொடங்கியபோது அது ஆயுதப்போராட்டமாக இல்லை. அதை நடத்தியது முஜாஹிதீன்கள் இல்லை. இளைஞர்கள், பெண்கள், பள்ளிச் சிறுவர்கள். அவர்கள் கைகளில் இருந்த ஆயுதங்கள் வெடிகுண்டுகளோ, கலாஷ்னிகோவ்களோ அல்ல. வெறும் கற்கள். ஆனாலும் இந்திய இராணுவம் துப்பாக்கிகளால் அவர்களுக்குப் பதிலளித்தது. 126 பேர் கொல்லப்பட்டனர். 600 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இன்றுவரை மாநில அரசு தேர்தலின்போது வாக்களித்திருந்தும் அந்த வழக்குகளைத் திரும்பப் பெறவில்லை. அவ்வளவுதான் அதன் அதிகாரம்.
இது 2016. இன்று நடப்பது காஷ்மீர்ப் போராட்ட வரலாற்ரின் நான்காம் கட்டம். இடையில் அதிகாரத்திற்கு வந்த மோடி அரசு காஷ்மீர மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளில் ஒன்றான அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை முற்றாக ஒழித்துக் கட்டும் வீர வசனங்களை உதிர்க்கத் தொடங்கியது. 2015ல் காஷ்மீரில் பெருகிய வெள்ளத்தின்போது இராணுவம் களத்தில் இறங்கியதைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி எல்லாம் சரியாகிவிட்டது போலப் பிரச்சாரம் செய்தது. வெள்ளத்தில் பெரிய அளவில் சேவை செய்த காஷ்மீர இளைஞர்களின் பங்கை மறைத்து இந்திய ஊடகங்களும் இராணுவத்தின் புகழைப் பாடின.
ஆனால் இராணுவ அடக்குமுறைகள் தொடர்ந்தன. சிறுவர்களை எங்கு கண்டாலும் அவர்களைச் சீண்டுவது இராணுவத்தின் வழக்கம். தண்டனை விலக்கு அதிகாரம் படைத்த, கையில் ஆயுதம் தரித்த படைவீரர்கள் அதெல்லாம் செய்யத்தானே செய்வார்கள். ஒரு அழகான பெண்ணையோ இல்லை தன்னை வெறுப்புடன் பார்க்கும் இளைஞனையோ அவர்கள் சீண்டுவதில், கடத்திச் செல்வதில், பயன்படுத்துவதில், பயன்படுத்தப்பட்டபின் கொல்வதில் என்ன வியப்பு. அப்படிச் சீண்டப்பட்டவர்களில் ஒருவன்தான் இன்றைய எழுச்சியின் நாயகன் புர்ஹான் முசாஃபர் வானி. ஒரு படித்த வசதியான குடும்பத்தில் பிறந்தவன். அவன் தந்தை முசாஃபர் அஹமது வானி ஒரு பள்ளித் தலைமை ஆசிரியர். அவன் தாய் அறிவியலில் பட்ட மேற்படிப்பு படித்த ஒரு ஆசிரியை. மூத்த சகோதரன் காலித் முசாஃபர் வானி எம்.காம் படித்தவன். இருவரும் புதிதாக வாங்கிய மோட்டார் சைகிளை ஓட்டிச் சென்ற போது இராணுவத்தினர் அவர்களைத் தாக்கி, அவமானப் படுத்தி வண்டியையும் உடைக்கின்றனர். அப்போது முஜாஹிதீன் ஆகித் தலைமறைவானவன்தான் புர்ஹான். அதன் பின் காலித்தும் தந்தையும் பலமுறை கைது செய்யப்படுகின்றனர். 2015ல் காலித்தை இராணுவம் துப்பாக்கி மட்டையால் அடித்தே கொல்கிறது.
இந்த ஜூலை 8ல் புர்ஹான் வானியும் கொல்லப்பட்டான். இது ஒரு போலி மோதல் படு கொலை என ஆளும் பி.டி.பி கட்சித் தலைவர் ஒருவரே குற்றம் சாட்டியுள்ளார்.
யூ ட்யூபில் பெரியவர் முசாஃபர் வானியின் நேர்காணல் உள்ளது. “தீயை அணைக்க பெட்ரோலை ஊற்றுகிறது இந்திய அரசு. இன்றைய தேவை தண்ணீர். பெட்ரோல் அல்ல. என் மகன்கள் இருவர் மட்டுமல்ல அனைத்து இளைஞர்களுமே இங்கு தாக்கப்பட்டுள்ளனர். அவமானப்படுத்தப் பட்டுள்ளனர். இதற்கு எதிர் வினை என்பது அவரவர் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. என் மகனைப் போன்றவர்கள் அதைப் பொறுத்துக் கொள்வதில்லை. ஒருவரின் சுயமரியாதை திரும்பத் திரும்ப அவமதிக்கப்படும்போது அவர் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க நேரிடுகிறது. இறைநம்பிக்கை உள்ள காஷ்மீரிகள் இறைவனின் பாதையில் மரணத்தைச் சந்தித்தால் கவலை கொள்ள மாட்டார்கள். என் பிள்ளைகளைக் காட்டிலும் எனக்குப் பெரிது அல்லாஹ்,. திருக்குர்ஆன், இறைத்தூதர் நபிகள் நாயகம் தான்” என்கிறார் இரண்டு மகன்களையும் இழந்த அந்தத் தந்தை.
இன்றைய புதிய தலைமுறைப் போராளிகள் வித்தியாசமானவர்கள். இவர்கள் தம் முகங்களை கருப்புத் துணியால் மூடிக் கொள்வதில்லை. சேகுவரா போல தம் அழகான முகத்தை ஆயுதம் தாங்கிய கவர்ச்சித் தோற்றத்துடன் சமூக ஊடகங்களில் வளைய விடுகின்றனர். இவர்கள். ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடுபவர்கள். எங்கோ ஒரு காட்டில் உட்கார்ந்து கொண்டு, “நாங்கள் காதலை உயிர்ப்புடன் கொணர்ந்துள்ளோம்.காயம்பட்ட இதயங்களை வென்று..’ எனும் பாடலை முணுமுணுப்பவர்கள். அவர்களின் இந்தப் பதிவுகள் பல்லாயிரக் கணக்கில் கண நேரத்தில் தீயாய்ப் பரவுகின்றன. புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் இரண்டு லட்சம்.
மிகிர் ஸ்வரூப் சர்மா எனும் கட்டுரையாளர் சொல்வதுபோல, “காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது என நம்புவது அறிவிலித்தனம். அமைதி திரும்பிவிட்டது என நம்பிச் செயல்படும் வரை அங்கு அமைதி திரும்பப் போவதில்லை. 15 உள்ளூர் மக்களுக்கு ஒரு இராணுவ வீரன் என்கிற எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு, உலகிலேயே அதிக இராணுவமயமான பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்குதான் எனும் நிலை தொடரும்வரை அங்கு அமைதி திரும்பப் போவதில்லை. இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் இங்குள்ள மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள வரை இங்கு அமைதி திரும்பப் போவதில்லை. அத்து மீறி செயல்பட இயலாத வகையில் தங்கள் கைகளைக் கட்டிப்போடக் கூடிய சட்டத் தடைகள் நாட்டின் ‘மையப் பகுதியில்’ நடைமுறையில் உள்ளது போல, இங்கே காஷ்மீரில் தமக்கு இல்லை என இப்பகுதி முழுவதும் எங்கும் நிறைந்திருக்கும் படை வீரர்கள் அறிந்திருக்கும் வரை இங்கே அமைதி திரும்பப் போவதில்லை. தங்களின் செயல்பாடுகளுக்கு இந்தியாவின் பிறபகுதிகளில் அரசு எவ்வாறு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டி உள்ளதோ அதே நிலை இங்கும் வரும்வரை இங்கே அமைதி திரும்பப் போவதில்லை.”
என்ன செய்யப் போகிறது இந்திய அரசு?
காஷ்மீர் - என்ன செய்யப் போகிறது இந்திய அரசு? - அ.மார்க்ஸ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:59:00
Rating:
No comments: