வரலாற்று சிறப்புமிக்க ஜெய்சல்மர் கோட்டை சுவர் இடிந்தது


850 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க ஜெய்சல்மர் கோட்டை சுவர் இடிந்து விழுந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது ஜெய்சல்மர் கோட்டை.
இந்தக் கோட்டை 12ஆம் நூற்றாண்டில் (1156-ம் ஆண்டு) கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மஞ்சள் நிற மணல் மற்றும் கற்களால் இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. அதனால், மாலையில் சூரிய ஒளி கோட்டையின் மீது படும்போது தங்கம் போல் ஜொலிக்கும். அதனால், ஜெய்சல்மர் கோட்டையை சோனார் குய்லா (தங்க கோட்டை) என்று அழைக்கின்றனர்.
பழமை வாய்ந்த இந்தக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக ‘யுனெஸ்கோ’ அங்கீகரித்துள்ளது. கோட்டைக்குள் ஏராளமானோர் வீடுகளில் வசிக்கின்றனர். உலகிலேயே மிகப் பெரிய கோட்டை என்ற சிறப்பு வாய்ந்த ஜெய்சல்மர் கோட்டையை, இந்திய தொல்லியல் துறையினர் புனரமைத்து வருகின்றனர்.
கோட்டை சுவர்களை சீரமைக்கும் பணியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொல்லியல் துறையினர் தொடங்கினர். இந்நிலையில், நேற்று பிற்பகல் கோட்டையின் ஒரு பக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மதிய உணவுக்கு சென்று விட்டனர். அந்த நேரத்தில் சுற்றுலா பயணிகளும் அங்கில்லை. அதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால், கோட்டை சுவர் அருகில் உள்ள மூன்று வீடுகள் சேதம் அடைந்தன.
தகவல் அறிந்ததும் தொல்லியல் துறையினர் விரைந்து வந்து, கோட்டைக்குச் செல்லும் பாதைகளை தடுப்புகள் வைத்து தடுத்து விட்டனர். மேலும், அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் அந்தப் பக்கம் செல்ல தடை விதிக்கப்பட்டது. தண்ணீர் கசிவு மற்றும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கோட்டை சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க ஜெய்சல்மர் கோட்டை சுவர் இடிந்தது வரலாற்று சிறப்புமிக்க ஜெய்சல்மர் கோட்டை சுவர் இடிந்தது Reviewed by நமதூர் செய்திகள் on 04:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.