தமிழ்நாட்டு ரேசன் கடைகளை மூட நெருக்கடி: தமிழ் தேசியப் பேரியக்கம் கண்டனம்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை:
ஓசையில்லாமல் தமிழ்நாட்டின் மீது இன்னொரு மிகப்பெரிய தாக்குதலை இந்திய அரசு தொடுத்திருக்கிறது!
“தேசிய உணவு உறுதிச் சட்டம்” என்ற நல்ல பெயரில் அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் சட்டம், தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் உணவு மறுப்புச் சட்டம்தான் என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அதை வலுவாக மெய்ப்பிக்கும் வகையில், மிகப்பெரிய நிதித் தாக்குதல் ஒன்றை தமிழ்நாட்டின் மீது மோடி அரசு இப்போது தொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 1 கோடியே 90 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட இன்றியமையாப் பொருள்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
அரசின் நியாயவிலைக் கடைகளில் வழங்கும் மானிய விலை அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்டவற்றைப் படிப்படியாகக் குறைத்து, இறுதியில் அறவே நீக்கி ரேசன் கடைகளை மூடிவிடுவது என்பதாக உலக வர்த்தகக் கழகத்தில், ஏற்கெனவே இந்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. அதற்கிணங்கப் பிறப்பிக்கப்பட்டதுதான், “உணவு உறுதிச் சட்டம்” !
இச்சட்டத்தின் அடிப்படையில், குடும்ப அட்டைதாரர்களில் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளோர் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு மானிய விலை அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் வழங்குவதில்லை என இந்திய அரசு அறிவித்தது. ஆயினும், இதனை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது.
தமிழ்நாட்டின் இந்த நீதியான நிலைபாட்டை இந்திய அரசு ஏற்க மறுத்து, தமிழ்நாட்டிற்கு வழங்கிவரும் உணவு மானியத்தை ஆண்டுக்காண்டு குறைத்து வருகிறது.
அனைத்து மாநிலங்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், மற்ற மாநிலங்கள் இந்திய அரசின் நிலைபாட்டை ஏற்றுக் கொண்டு மானிய வழங்கலை பெருமளவு வெட்டின. அதுமட்டுமின்றி, இந்தியாவிலேயே தமிழ்நாடு, கேரளா, உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும்தான் ரேசன் கடைகள் உருப்படியாக இயங்கி வருகின்றன.
இலவச அரிசி, குறைந்த விலை அரிசி ஆகியவற்றை தமிழ்நாடு, கூடுதலாக வழங்கி வருவதால் இத்தாக்குதலில் தமிழ்நாடுதான் பிற மாநிலங்களைவிட அதிகமாக அழுத்தப்படுகிறது.
ஏற்கெனவே, தமிழ்நாட்டிற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது. இப்போது, தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தில் வரலாறு காணாத வெட்டை இந்திய அரசு அறிவித்துள்ளது!
நியாயவிலைக் கடைகளின் வழியாக வழங்கும் இன்றியமையாப் பொருள்களுக்கு, தமிழ்நாடு அரசு தனது சொந்த வருமானத்திலிருந்து மானியம் கொடுத்து, குறைந்த விலையில் வழங்கி வருகின்றது. இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் இவ்வாறான உணவு மானிய நிதிச்சுமை 5,300 கோடியாகும். இதில், அரிசி மானியம் மட்டுமே ஏறத்தாழ 3,500 கோடியாகும்!
தமிழ்நாடு மொத்தம் 2 இலட்சத்து 50 ஆயிரம் டன் அரிசியை மாதந்தோறும் ரேசன் கடைகள் மற்றும் மானிய விலை வழங்கலுக்காக நடுவண் அரசின் தொகுப்பிலிருந்து வாங்கி வருகிறது. 20 கிலோ விலை இல்லா அரிசியாகவும், அதற்கு மேல் கிலோ ரூபாய் 3.50-க்கும் வழங்கி வருகிறது.
இந்திய அரசு, தமிழ்நாட்டு குடும்ப அட்டைதாரர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினர், வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பத்தினர் என்று தன் மனம் போன போக்கில் வகைப் பிரித்திருக்கிறது. இதனடிப்படையில், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளோருக்கு ஒரு கிலோ அரிசியை, 5 ரூபாய் 65 காசுக்கும், வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளோருக்கு ஒரு கிலோ அரிசியை, 8 ரூபாய் 30 காசுக்கும் அளிக்கிறது.
இப்போது, வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளோர் என்ற கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரும் 1 இலட்சத்து 26 ஆயிரம் டன் அரிசிக்கு பெற்று வந்த விலையை, 8 ரூபாய் 30 காசிலிருந்து, 22 ரூபாய் 50 காசாக – கிட்டத்தட்ட 3 மடங்கு உயர்த்தியுள்ளது.
இந்த வரலாறு காணாத விலை உயர்வால், தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 2,100 கோடி ரூபாய் மானியச் செலவு அதிகரிக்கும்.
இது மட்டுமின்றி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவ்வப்போது வழங்கப்பட்டுவரும் கூடுதல் அரிசியை தமிழ்நாட்டிற்கு மட்டும் மறுத்துவிட்டது இந்திய அரசு! இந்த வகையில், 24,000 டன் கூடுதல் அரிசியை தமிழ்நாடு அரசு வெளிச்சந்தையில் கிலோ ரூபாய் 30 விலை கொடுத்து வாங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதேபோல், வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளோர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் கோதுமை விலையையும், 6 ரூபாய் 10 காசிலிருந்து 15 ரூபாய் 25 காசாக உயர்த்தியுள்ளது இந்திய அரசு!
தமிழ்நாட்டைப் போல் தேசிய உணவு உறுதிச் சட்டத்தை ஏற்க மறுத்து வந்த கேரள மாநில அரசு, இந்திய அரசின் இவ்வகை நிதித் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் சரணடைந்துவிட்டது. தேசிய உணவு உறுதிச் சட்டத்தின்படி, வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு, ரேசன் கடைகளில் இனி எதுவும் வழங்குவதற்கில்லை என கேரளா அறிவித்துவிட்டது.
தமிழ்நாடு அரசு இந்த நிதித் தாக்குதலை எதிர் கொள்ள, உரிய உத்திகளை வகுக்க வேண்டுமேயன்றி வீழ்ந்துவிடக் கூடாது!
ஒருபுறம் நீர் முற்றுகை, வேளாண் மானிய வெட்டு, சந்தை மறுப்பு, வேளாண் விளை பொருள் விலை மறுப்பு போன்ற பல்வேறு தாக்குதல்களின் மூலம், தமிழ்நாட்டு வேளாண்மையை முடக்க முயன்று வரும் இந்திய அரசு, உணவு மானியத்தை வெட்டி அழிக்க முயல்வதை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு வழங்கும் உணவு மானியத்தைப் பணக் கணக்கில் ஒதுக்காமல், தானியக் கணக்கில் வழங்குவதற்கு வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்குத் தேவையான மானிய விலை அரிசியை – அரிசியாகவே ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து அள்ளிச் செல்லப்படும் வரி வருமானத்தில் பாதியையாவது இந்திய அரசிடமிருந்து மீட்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
ஒரே நேரத்தில் உழவு மானியத்தையும் உணவு மானியத்தையும் வெட்டி – தமிழ்நாட்டை பஞ்சக்காடாகத் மாற்றுவதற்கு இந்திய அரசு செய்யும் சதித்திட்டத்தை, தமிழ்நாட்டு உழவர்களும் மக்களும் விழிப்போடு புரிந்து கொண்டு களம் காண வேண்டும்!
தமிழினம் – ஆரிய இந்தியத்தின் கூர்முனை எதிரியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து, தமிழின உணர்வாளர்கள் இனப் போராட்டக் களத்தை உருவாக்க வேண்டும் – இல்லையேல், வீழ்வதற்கு வழியில்லை!
தமிழ்நாட்டு ரேசன் கடைகளை மூட நெருக்கடி: தமிழ் தேசியப் பேரியக்கம் கண்டனம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:26:00
Rating:
No comments: