காந்தி பிறந்த நாளில் கோட்சேவுக்கு சிலையா?


‘காந்தி பிறந்த நாளில் குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் காந்தியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அதேநாளில், மீரட் நகரில் காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு சிலை திறப்பதா? அந்தச் சிலையை அகற்றாவிட்டால் கோட்சேவுக்கு உருவ எரிப்புப் போராட்டம் நடத்திட தேதி அறிவிக்கப்படும்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘மீரட் (உ.பி) நகரில் கோட்சே சிலை திறப்பு விழாவை காந்தியார் பிறந்த நாளில் அகில பாரதீய ஹிந்து மஹா சபா திக்கர் திவாஸ் என்ற பெயரில் கொண்டாடி மகிழ்கிறது’. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டின் செய்தி இது. இதை எப்படி மத்திய, மாநில அரசுகள் அனுமதித்தன என்பது புரியாத புதிராக உள்ளது. அதுமட்டுமா? காந்தியாரைக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவின் மார்பளவு சிலையை உருவாக்கி 2014இல் திறக்க முடியாததை, எவ்வித தங்குதடையுமின்றி இப்போது ஆர்.எஸ்.எஸ். கூட்டுப் பரிவாரமான அகில பாரதீய ஹிந்தி மகாசபா ஜாம் ஜாம் என்று மேளதாளத்துடன் இப்போது செய்கிறது.
அதுவும் காந்தியாரின் 148ஆம் ஆண்டுபிறந்த நாளை நாடே கொண்டாடும் நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள் காந்தியார் படத்துக்கும், அவரது சிலைகளுக்கும் மாலை போட்டு மரியாதை செய்யும் தருணத்தில், கோட்சே சிலையைத் திறக்க அனுமதித்து இருப்பது, எவ்வித தங்கு தடையும் செய்யாமல் அகமகிழ்வுடன் நடந்திருப்பது பச்சையான இரட்டை வேடம் அல்லவா? நாட்டின் மதச் சார்பின்மை கொள்கைக்கு, வன்முறை இந்துப் பயங்கரவாதப் போக்கு நோர்மாறானது அல்லவா? இந்த கோட்சே நிலை திறப்பு, அரசமைப்புச் சட்டத்துக்கே அறைக்கூவல் அல்லவா?
பிரதமரும் மற்றவர்களும் காந்தியார் புகழ் பஜனையும் பாடுவது, இப்படி காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலையெடுப்பவர்களையும் அனுமதித்து மகிழ்ச்சியில் திளைப்பது இரட்டை வேடம் அல்லவா?
நாடு எங்கே போகிறது? நாட்டின் உள்ள அத்தனை முற்போக்காளர்களும், மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்களும் வெகுண்டெழுந்து உரத்த குரலில் இதைக் கண்டிக்க உடனடியாக முன்வர வேண்டாமா?
இப்போக்குக்கு திராவிடர் கழகம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அச்சிலை அகற்றப்படாவிட்டால் தமிழ்நாடு முழுவதிலும் கோட்சே உருவ எரிப்பு அறப்போராட்டம் நடத்தி, மதவெறி ஒழிப்புப் போராட்டமாக அதனை நடத்திட வெகுவிரையில் ஒரு தேதி குறிப்பிட வேண்டி வரும். அதைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அச்சிலையை அகற்றிட ஆணைப் பிறப்பித்துச் செயல்பட வைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காந்தி பிறந்த நாளில் கோட்சேவுக்கு சிலையா? காந்தி பிறந்த நாளில் கோட்சேவுக்கு சிலையா? Reviewed by நமதூர் செய்திகள் on 04:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.