பாதுகாப்பான அணு உலை உலகில் உள்ளதா..?
ரஷிய அரசின் உதவியுடன் கூடங்குளத்தில் அணுமின் நிலையமானது அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகள் உள்ளன. அதில் 2 அணு உலைகள் முதல் நிலை உற்பத்தியானது தொடங்கியுள்ளது என்று அணுமின் நிலையத்தில் இருந்து செய்திகள் மட்டுமே வெளிவந்துள்ளன. ஆனால் அணு உலைகளின் செயல்பாடுகள் பற்றியும், உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவுகள் பற்றியும், அணு உலைகளின் பாதுகாப்பு நிலை பற்றியும் முழுமையாக மக்களிடம் வெளியிடப்படவில்லை.
மேலும் 3 ஆவது மற்றும் 4 ஆவது அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்று செய்தி சிலமாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. இன்னிலையில் தற்போது கூடங்குளம் 3, 4-வது அணு உலைகளுக்கு அஸ்திவாரம் காங்க்ரீட் போடும் வேலையை (Base Concreting Work) பிரதமர் மோடியும், ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினும் கோவாவிலிருந்து காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்கள்.
இடப்பற்றாக்குறை, பணியாளர் குடியிருப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களிலேயே மேலும் அணு உலைகளை அமைப்பது என இந்திய அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி கூடன்குளத்தில் 3, 4, 5, 6 எனத் தொடர்ந்து இந்திய அரசு அணு உலைப் பூங்கா அமைக்கும் என மோடி பேசியுள்ளார்.
இதற்கு மக்கள், இந்த அணு உலையில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டால் எங்கள் உயிருக்கு ஆபத்து உண்டாகும் அபாயம் உள்ளது எனவும், அணு உலையின் பாகங்கள் பழையதாகவும் பழுதடைந்து உள்ளதாகவும், எனவே இந்த அணு உலைகளை மூடிட வேண்டும் எனவும். இந்த அணு உலையில் இருந்து வெளிவரும் கழிவுகள் கடலில் சேர்க்கப்படுவதாகவும், இதனால் கடல் உயிரினங்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் கடலை மட்டும் நம்பி வாழ்ந்து வரும் நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உண்டாக வாய்ப்பு உள்ளது, எனவே அணு உலைகளை மூடிட வேண்டும், இதற்கு மாற்றாக வேறு மின்னாற்றல் நிலையங்களைக் கொண்டு மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அரசானது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது துவங்கப்பட உள்ள அணு உலைகளை எதிர்த்து, மாணவர்கள் திட்ட அறிக்கையைக் கிழித்து எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோவியத் ரஷ்யா உடைந்து போனதற்கு முக்கிய காரணம் நான் கொண்டுவந்த சீர்திருத்தமான "ப்ரெஸ்ட்ரோய்க்கா" (perestroika) கிடையாது, செர்னோபில் அணு விபத்தே முக்கிய காரணம் என சோவியத் ரஷியாவின் முன்னாள் அதிபர் கோர்பச்சேவ் கூறியுள்ளதை நாம் இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும் .( ஆதாரம்: http://www.washingtonsblog.com/2012/03/soviet-leader-chernobyl-nuclear-accident-caused-the-collapse-of-the-ussr.html)
அனைத்து நாடுகளும் அணுஉலைகளை படிப்படியாக மூடுகின்றன. ஜப்பானிய நாளேடு ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய கருத்துக் கணிப்பில் 77 சத மக்கள் படிப்படியாக அணு உலைகளை மூடிவிட வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து உள்ளனர். இந்திய அரசு ஆஸ்திரேலியா, கசகஸ்தான், நமீபியா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியம் வாங்குகிறது. ஆனால் இதில் எந்த நாடுமே ஒரு அணுமின் நிலையத்தைக் கூட அவர்கள் நாட்டில் நிறுவவில்லை. இந்த உதவாத தொழிற்நுட்பத்தின் குப்பைக் கிடங்காக தமிழகம் ஏன் மாற்றப்பட வேண்டும் என தோழர் முகிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் புதிய அணுஉலைகள் அமைப்பதில் மும்முரமாக இருந்துவருவது, மக்களின் மத்தியிலும், சமுகச் செயல்பாட்டாளர் மத்தியிலும், கொந்தளிப்பையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது.
தற்போது அனல் மின்சாரம் தயாரிக்க யூனிட் 4 ரூபாய் 50 பைசா, சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க யூனிட் 5 ரூபாய் 50 பைசா என இருக்கும்போது, அணு உலையில் இருந்து பெறப்படும் மின்சாரத்தைத் தயாரிக்க மட்டும் 19 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் அரசாங்கம் இத்திட்டத்தினை நிறைவேற்றவே தவியாய் தவித்துக் கொண்டு இருக்கின்றது. காரணம் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் கமிசனுக்காகவே.
இத்தகைய அணு மின் நிலையமானது விபத்துகுள்ளாகும்போது ஆகும் செலவுகளைக் கணக்கிட்டோமானால் பல பில்லியன் டாலரைத் தாண்டும்.
ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் நடந்த விபத்தின் போது சீரமைப்பு பணிக்காக சுமார் 200 பில்லியன் டாலர்கள் செலவானது. இந்தத் தொகை முழுவதையும் ஜப்பான் அரசாங்கம்தான் ஏற்றது.
தமிழக மக்களின் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட நடவடிக்கை என்று கூறிக்கொண்டு ரஷ்யா –அமெரிக்கா - பிரான்சு ஆகிய நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பெறவும், இந்தியாவை ஆளுகின்ற கட்சிகள் அணுஉலைகளின் பெயரால் மிகப் பெரும் பலன் பெறுவதற்காகவும், அணு உலைகளைத் தமிழக மக்களின் தலையில் சுமத்த தரகு முதலாளிய பார்ப்பனிய ஏகாதிபத்திய எடுபிடி இந்தி அரசு முயற்சிக்கின்றது.
ஈழம் துவங்கி மூன்று தமிழர் விடுதலை, ஜல்லிக்கட்டு, கெயில், காவிரிப் பிரச்சினை என தொடர்ந்து தமிழகம், ஏகாதிபத்திய எடுபிடி இந்திய அரசின் அடிமை தேசிய இனம் என செயல் வழியே உணர்த்தி வருகிறது.
தமிழர்களே.. ஏகாதிபத்திய எடுபிடி இந்திய அரசின் அடிமைகளா நாம்..?
- உமா கார்க்கி
பாதுகாப்பான அணு உலை உலகில் உள்ளதா..?
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:05:00
Rating:
No comments: