வேலை விற்பனைக்கு: வே.மதிமாறன்!
தமிழகத்தில் சிறந்த கல்லூரிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அதிகமான எண்ணிக்கையில் இடம் பெறும் என்று அனுமானிக்கலாம்.
இந்தக் கல்லூரிகளில் பணியாளர்களுக்கான சம்பளத்தை அரசாங்கம் கொடுத்துவிடுகிறது. ஆசிரியர்களின் நியமனம், கல்லூரி நிர்வாகம் முதலானவற்றை கல்லூரி நிர்வாகம்(Management) பார்த்துக் கொள்ளும். இத்தகைய அணுகுமுறையில் குறைபாடுகள் இல்லை என்று சொல்ல முடியாது. ‘சாதிக்காரர்களுக்குத்தான் வேலை தருகிறார்கள்; மற்றவர்களால் உள்ளே நுழைய முடியாத இரும்புக் கோட்டையாக இருக்கிறது’ என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டேயிருக்கும்.
ஆனபோதிலும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பார்க்கும் போது பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாகமும் தரமும் சிறப்பானதாகவே இருக்கும். கிட்டத்தட்ட அத்தனை கல்லூரிகளிலும் சுயநிதி பிரிவு, அரசு உதவி பெறும் பிரிவு என்று இருபிரிவுகளை வைத்திருக்கிறார்கள். சுயநிதி பிரிவுக்கான பேராசிரியர்களை தாமாகவே நியமித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நிர்வாகத்திலிருந்து ஏழாயிரமோ, எட்டாயிரமோ மாத ஊதியமாக வழங்கப்படும். தங்கள் கல்லூரியின் அரசு உதவி பெறும் பிரிவுகளில் காலியிடங்கள் உருவாகும் போது அந்த இடங்களுக்கு சுயநிதி பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படும் பேராசியர்களை நியமிப்பார்கள். ‘அரசு உதவி பெறும் பிரிவுக்குச் சென்றுவிட வேண்டும்’ என்ற நோக்கம் சுயநிதிப் பிரிவு பேராசிரியர்களை கடுமையாக உழைக்கச் செய்யும். அதே சமயம் மேலாண்மையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசு உதவி பெறும் பிரிவு பேராசிரியர்களும் சிறப்பாகச் செயல்படுவார்கள்.
இப்படியாக நிர்வாக மேலாண்மையானது கல்லூரியை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இன்றைய தினத்தில் கல்லூரி பேராசிரியர்கள் நியமன முறையானது எல்லாவற்றையும் அடித்து உடைத்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணிக்கான காலியிடம் உருவாகும் போது தேவையான பேராசிரியர்களின் எண்ணிக்கையை அரசாங்கத்திடம் கல்லூரிகள் ஒப்படைத்துவிட வேண்டும். உதாரணமாக இயற்பியல் துறைக்கு ஒன்று, கணிதத் துறைக்கு இரண்டு, பொருளாதாரப் பிரிவுக்கு ஒன்று என காலியிடங்கள் இருக்கிறது எனில் இந்த எண்ணிக்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அரசாங்கத்தால் விளம்பரங்கள் வெளியிடப்படும். யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நியமனம் முழுவதையும் அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள். பேராசிரியர்களின் நியமனத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம். இப்பொழுதுதான் ப்யூன் வேலையிலிருந்து பேராசிரியர் வேலை வரைக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது அல்லவா? பேராசிரியர் பணிக்கு இருபத்தைந்து லட்சம் வரைக்கும் விலை பேசப்படுவதாகச் சொல்கிறார்கள்.
சில அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. புலம்புகிறார்கள். நிறையக் கல்லூரிகளில் குறைந்தது பத்து பேராசிரியர்களுக்கான பணியிடங்களாவது காலியாகக் கிடக்கின்றன. அரசாங்கத்திடம் ஒப்படைக்கவே தயங்குகிறார்கள். தகுதியே இல்லாதவர்கள் உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள். பல்லாண்டுகளாகக் கட்டிக் காத்து வந்த கல்லூரியின் தரம் அசைத்துப் பார்க்கப்படும் என்று உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் நம்புவதும் சரிதான். இல்லையென்றெல்லாம் மறுக்க முடியாது.
‘ஒண்ணுமே தெரியாத மண்ணு மாதிரி இருப்பான்...லட்சக்கணக்குல பணத்தைக் கொடுத்துட்டு வந்து போஸ்டிங் ஆர்டரைக் காட்டுவான்....’ என்கிறார்கள்.
சுயநிதிப் பிரிவுகளில் தற்காலிகப் பேராசிரியர்களாகப் பணி புரிகிறவர்களுக்கு இருபது லட்சங்களைப் புரட்டுவது என்பது சாத்தியமே இல்லாத காரியமாக இருக்கும். இருபது லட்சங்களைப் புரட்ட முடியுமெனில் அவர்கள் ஏன் ஏழாயிரத்துக்கும் எட்டாயிரத்துக்கும் எதற்கு வேலை செய்யப் போகிறார்கள்? வேடிக்கை மட்டும்தான் பார்ப்பார்கள். வெளியாட்கள் பணத்தைக் கொடுத்து கல்லூரிகளுக்குள் பேராசிரியர்களாக நுழையும் போது இனி எந்தக் காலத்திலும் தம்மால் உதவி பெறும் பிரிவுகளில் நுழைய முடியாது என்பது அவர்களை மனதளவில் தளர்வடையச் செய்யும். வந்தோமோ போனோமா என்கிற வேலையில் செய்வார்கள்.
பணம் கொடுத்து வேலையை வாங்கிக் கொண்டு உள்ளே வருகிறவன் என்ன மனநிலையில் வருவான்? பணம் கொடுத்து வேலை வாங்கியிருக்கிறோம்; இவன் யார் கேள்வி கேட்பதற்கு என்றுதான் யோசிப்பான். அரசுக் கல்லூரிகளுக்கும் உதவி பெறும் கல்லூரிகளுக்குமிடையேயான மிகப்பெரிய வித்தியாசமே இந்த மனநிலைதான். மேலாண்மை மற்றும் நிர்வாகத்தினர் குறித்தான ஒருவிதமான பயம் கலந்த மரியாதை அரசு உதவி பெறும் கல்லூரியின் பேராசிரியர்களிடமும் பணியாளர்களிடமும் இருக்கும். அரசாங்கக் கல்லூரிகளில் நானே ராஜா; நானே மந்திரிதான். இனி அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இப்படியான மனநிலைதான் உருவாகும்.
சில மாதங்களுக்கு முன்பாக ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஐடி துறையில் பணியாற்றுகிறார். எம்.எஸ்.ஸி முடித்துவிட்டு ஐடிக்குள் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நேரம் கிடைத்த போது எம்.பிஃல் முடித்துவிட்டார். இனி இந்த வேலை போதும் என்றும் பேராசிரியர் ஆவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபடப் போவதாகச் சொன்னார். அவர் சொன்ன டெக்னிக் மேற்சொன்னதுதான். இருபத்தைந்து லட்ச ரூபாயை முதலீடு செய்து இடம், வீடு என்று வாங்கிப் போடுவதைக் காட்டிலும் யாராவது ஒரு அரசியல்வாதியைப் பிடித்து அவரிடம் கொடுத்து பேராசிரியர் வேலை வாங்கவிருப்பதாகச் சொன்னார். ‘அவ்வளவு ஈஸியா?’ என்றெல்லாம் யோசிக்கவே வேண்டியதில்லை. பணம் மட்டும் கையில் இருந்தால் எல்லாமே எளிதுதான்.
பேராசிரியர் வேலை என்பது அவருடைய கனவு என்றெல்லாம் சொல்ல முடியாது. பேராசிரியர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த லட்சக்கணக்கான ரூபாயைப் பெறுவதற்காக இருபத்தைந்து லட்சத்தை முதலீடு செய்ய ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பாடம் சொல்லித் தருவதற்கான ஆர்வம், பேராசிரியர் ஆவதான கனவு என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை.
நிலைமை படு மோசமாகிக் கொண்டிருக்கிறது. வெளியில் தெரிகிறதோ இல்லையோ- இதுதான் நிலவரம்.
அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் வெகு வேகமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு பள்ளியில் வேண்டுமானாலும் விசாரித்துப் பார்க்கலாம். மாணவர்களின் எண்ணிக்கை அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. எவ்வளவுதான் சிரமம் என்றாலும் தனியார் பள்ளிகளைத்தான் பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆசிரியர்களை மட்டும் குறை சொல்ல வேண்டியதில்லை. சில களைகள் இருக்கலாம் என்றாலும் எழுபது சதவீத ஆசிரியர்கள் மனப்பூர்வமாகத்தான் வேலை செய்கிறார்கள். ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்களது சுதந்திரம் முழுமையாகக் கத்தரிக்கப்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு ரத்தினக் கம்பளங்களை விரித்து வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு எந்த ஊரில் பார்த்தாலும் தனியார் பள்ளிகள்தான் கொடி கட்டுகின்றன. கல்வித்துறை அதிகாரிகளிலிருந்து அதிகார மட்டம் வரைக்கும் கட்டுக் கட்டாக கப்பம் கட்டுகிறார்கள். அதனால் தனியார் பள்ளிகள்தான் ஊக்குவிக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் முழுமையாகச் சிதைக்கப்பட இன்னமும் அதிக காலம் தேவைப்படாது.
அதைவிட மோசமான நிலையை நோக்கித்தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் சென்று கொண்டிருக்கின்றன என்பதுதான் துக்கம். எவ்வளவுதான் திறமை மிக்கவராக இருந்தாலும் பேராசிரியர் வேலையை வாங்கப் பணம் கொடுக்க வேண்டு. திறமையே இல்லையென்றாலும் பணம் கட்டினால் வாங்கிவிடலாம். இது எவ்வளவு அபாயகரமான சூழல்? பேராசிரியர்களுக்கென ஒரு மரியாதை இருந்தது. இந்த பேராசிரியர் இந்தப் பாடத்தை நடத்தினால் எந்தக் காலத்திலும் மறக்காது என்கிற பேச்சு இருந்தது. பேராசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு இருந்தார்கள். இனி காமாக்களும் சோமாக்களும்தான் பேராசிரியர்கள். லட்சங்களைக் கொட்டி வந்த எச்சிகள்தான் பாடம் நடத்துவார்கள். இவர்களிடம்தான் மாணவர்கள் பாடம் படிக்க வேண்டும்.
எந்தவொரு நாட்டில் ஒவ்வோர் பத்தாண்டிலும் கல்வித்தரம் உயர்ந்து கொண்டிருக்கிறதோ அந்த நாடுதான் பல்துறை வளர்ச்சியடையும். எந்த நாட்டில் ஒவ்வோர் பத்தாண்டிலும் கல்வியும் அதன் தரமும் கீழே சரிகிறதோ அந்த நாடும் மக்களும் நாகரிகத்திலும், அறிவிலும் வீழ்ந்து கொண்டேயிருப்பார்கள். இதுதான் நடக்கும். தமிழகம் அப்படி சரிந்து வீழ்ந்தும் கொண்டிருக்கிறது. நேரடியாகக் கண்களுக்கு புலனாகவில்லை என்றாலும் இதுதான் நிதர்சனம்.
நன்றி: http://www.nisaptham.com/
வேலை விற்பனைக்கு: வே.மதிமாறன்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:16:00
Rating:
No comments: