மதுரையின் சங்ககாலம்தான் கீழடி! - எழுத்தாளர் வெங்கடேசன்
‘கீழடிதான் மதுரையின் சங்ககாலம்’ என தனது முகநூல் பக்கத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் தமிழர்களை ஒரு இனக் குழு சமூகமாகவும், தமிழகத்தை சிந்து சமவெளி போன்ற நகர நாகரிகம் இல்லாதது என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தமிழ் இலக்கியங்கள் எல்லாம் வெறும் கட்டுக்கதை என்கின்றனர். பத்துப்பாட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்ட மா.ராசமாணிக்கனார், 1964இல் பரிபாடல், திருமுருகாற்றுப்படை, கலிதொகை, சிலப்பதிகாரம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றின் அடிப்படையில் சங்ககால மதுரை என்பது, திருப்புவனத்துக்கு நேர் மேற்கிலும், திருப்பரங்குன்றத்துக்கு நேர் கிழக்கிலும் அமைந்திருக்க வேண்டும். அதை ஆய்வுகள் செய்து கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டார்.
அதே புவியியல் அமைப்பில், மதுரைக்கு அருகேயுள்ள கீழடியில் இந்திய தொல்லியல் துறையினர் செய்த அகழாய்வில், இதுவரை, 5,300 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஒப்பிட தென்னிந்தியாவில் வேறு இடங்களே இல்லை. பிராகிருதம் உள்ளிட்ட வேற்று மொழி எழுத்துடன் கூடிய பெயர்கள், ஆப்கானிஸ்தான் பவழ மணிகள் மற்றும் ரோமாபுரி மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. புவியியல், தொல்லியல் போன்றவற்றின் சான்றுகளின்படி மிகவும் வளர்ச்சி அடைந்த, வாணிபத்தில் சிறந்து விளங்கிய நகர நாகரிகம் இருந்ததை அறிய முடிகிறது. இதுவே, சங்ககால மதுரையாக இருந்திருக்கலாம். இதை அறியும் நோக்கில் மாநில அரசு இங்கு அகழாய்வு பணியைச் செய்து பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியத்தை அமைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரையின் சங்ககாலம்தான் கீழடி! - எழுத்தாளர் வெங்கடேசன்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:46:00
Rating:
No comments: