முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதால்தானே தலாக் நடைமுறையை நீக்க முயலுகிறார்கள்? - எம்.பாரூக் பதில்கள்
தலாக் விஷயத்தை பொறுத்தவரையில் மற்ற மதங்களை காட்டிலும் இஸ்லாத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வை முன்வைக்கிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிய நினைப்பவர்கள் தங்கள் குறைகளை களைந்து மீண்டும் சேர்ந்து வாழவே இஸ்லாம் விரும்புகிறது. அதற்காகத்தான் கால அவகாசத்தையும் கொடுக்கிறது. அதையும்மீறி பிரிய விரும்புகளுக்கு அவர்களின் விருப்பப்படி மூன்று முறை தலாக் சொல்லி விவகாரத்து செய்துகொள்ளலாம். பிறகு விரும்பினால் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளலாம். விவகாரத்து செய்வதில் ஆணைவிட பெண்ணுக்கு அதிக உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.
"ஓர் ஆண் ஒரு பெண்ணை விவகாரத்து செய்ய (மூன்று மாதம்) சமகால இடைவெளியில் 'தலாக்' சொல்லி விவகாரத்து செய்ய முடியும். அதே ஓர் பெண் ஒரு ஆணை விவகாரத்து செய்ய மூன்று மாதங்கள் காத்திருக்க தேவையில்லை. ஓர் முறை 'குலா' சொன்னால் போதும்".
ஆனால் தலாக் இங்கு விவாதிக்கப்பட்ட அளவிற்கு குலா விவாதிக்கப்படவில்லை. பிடிக்காத கணவனை இலகுவாக ஒரு பெண் குலா மூலம் விவகாரத்து செய்து விட முடியும். ஆனால் மற்ற சமூகத்தில் அது அவ்வளவு சாத்தியம் இல்லாதது. உதாரணத்திற்கு இந்துக்களில் விவாகரத்து பெறுவதற்கு பல ஆண்டுகளாக நீதிமன்றபடி ஏறஇறங்க வேண்டி இருக்கிறது.
அதேபோல் இந்து திருமண சட்டத்தின்படி வழங்கப்படும் தீர்ப்பின்படியும் பல இடங்களில் தம்பதியினர் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள். அந்த சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கத்திலிருந்து சிதறி வருவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
"கு டும்பங்களை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்து திருமண சட்டம். ஆனால் தற்போது அந்த சட்டம் நேர் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்பங்களை இணைப்பதற்கு பதிலாக உடைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுகிறது. இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் விவகாரத்து கேட்டு கோர்ட்டுகளில் வழக்குகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. திருமணம் ஆகும்போதே
விவகாரத்துக்கான முன் எச்சரிக்கை மனுவையும் தாக்கல் செய்து விடுகிறார்கள். தம்பதிகளில் யாரவது ஒருவருக்கு தொழுநோயோ, மனநிலை பாதிப்போ இருந்தால் விவகாரத்து வழங்கலாம் என்று இந்து திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை பல தம்பதிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள்" என்று எப்படி வருந்தி சொன்னவர் வேறுயாருமல்ல உச்சநீதிமன்ற நீதிபதி அரிஜித் பசாயத்.
முஸ்லிம்களை பொறுத்தவரையில் விவகாரத்து செய்பவர்கள் குறைவானவர்கள்தாம். சதவீத அடிப்படையில் இந்துக்களே அதிகமாக விவகாரத்து செய்கிறார்கள் என்பதே அரசு தெரிவிக்கும் செய்தி.
அதேநேரத்தில் முஸ்லிம்களில் சிலர் அறியாமையின் காரணமாக, தலாக் வழிமுறைகளை முழுமையாக உள்வாங்கி கொள்ளாததின் விளைவாக "முத்தலாக்" என்ற முறையை பின்பற்றுகிறார்கள். அது மிகவும் தவறானது. ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லக்கூடாது என்று பல முஸ்லிம் அறிஞர்கள் இதுதொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முத்தலாக் என்ற ஒன்றை வைத்தே தலாக் வழிமுறைகளை நீக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அது சரியல்ல. இதேபோல் ஒவ்வொரு மதத்தில் உள்ள திருமண சட்டங்களையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்தினால் சட்டத்திற்கும் நடைமுறைக்கும் பல வேறுபாடுகளை நாம் காணலாம்.
உதாரணத்திற்கு இந்து திருமண சட்டத்தை எடுத்துக் கொள்வோம் : 1) திருமணம் செய்து கொள்ளும் ஆண் அல்லது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி உயிருடன் துணை இருக்கக்கூடாது. 2) மணமக்கள் மற்றவர்களின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்யக்கூடாது. 3) மணமக்கள் உறவினர்களாக இருக்கக்கூடாது. இதுபோன்று பல வழிமுறைகளை உள்ளடக்கி இருக்கிறது.
ஆனால் நடைமுறையில் இவைகளெல்லாம் பின்பற்றப்படுவதில்லை. அதற்காக அந்த சட்டத்தை நீக்க கூறுவார்களா?
நமது அரசியல் சட்டம் உலகிலேயே மிகப் பெரியது. உன்னதமானது. ஆனால் அதை பலர் தவறாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் அரசியல் சட்டத்தை நீக்கிவிட முடியுமா?
ஆகவே முத்தலாக் பிரச்சனையை பொறுத்தவரையில் அதில் உள்ள குறைபாடுகளை களைய முஸ்லிம் அறிஞர்கள் தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறார்கள். விரைவில் அதற்கு தீர்வு எட்டப்பட்டுவிடும் என்றே நம்புகிறேன். இதை ஒரு காரணமாக வைத்து தலாக் நடைமுறையை நீக்க முயலுவது அபத்தமானதாகும்.
- வி.களத்தூர் எம்.பாரூக்
முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதால்தானே தலாக் நடைமுறையை நீக்க முயலுகிறார்கள்? - எம்.பாரூக் பதில்கள்
Reviewed by நமதூர் செய்திகள்
on
08:28:00
Rating:
No comments: