நீதி: இத்தாலியா - தமிழனா?
இலங்கை கடற்படையினரால் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஆறு மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மீனவர்கள்மீது தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடந்துவருகிறது. எந்த நடவடிக்கையாக இருப்பினும் இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள கடல் பரப்பில் குமரி மீனவர்கள் இருவரை இத்தாலி வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அந்த இரு வீரர்களையும் கேரள போலீஸார் கைது செய்தனர். கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு தலா 1 கோடி இழப்பீடு வழங்கியது. ஆனால், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோ குடும்பத்துக்கு மாநில அரசு 5 லட்சம்தான் இழப்பீடு வழங்கியது. மத்திய அரசு சரியான இழப்பீடு வழங்கவில்லை’ என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஆகஸ்ட் 4ஆம் தேதி நேற்று நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட கடற்பகுதி எது என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை. மாநில அரசே அதுகுறித்து கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தார். இதையடுத்து மாநில அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராமநாதபுரம் டி.எஸ்.பி. ரவிக்குமார் இதுகுறித்து விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணை அதிகாரி ரவிக்குமார் ஆறு மாதங்களில் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையை முடித்து, இறுதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
நீதி: இத்தாலியா - தமிழனா?
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:20:00
Rating:
No comments: