மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பத்தாயிரம் குழுக்கள்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று ஆகஸ்டு 4 ஆம் தேதி சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில்… ‘’மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து 2017 ஆகஸ்ட் 18 முதல் 23 வரை தமிழகம் முழுவதும் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை பத்தாயிரம் குழுக்கள் அமைத்து வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது’’ என்று முடிவு செய்துள்ளது.
இதுபற்றி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்…
’’மத்திய நரேந்திர மோடி அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தாக்குதலிலிருந்து மீள்வதற்குள்ளாக… பெட்ரோல் டீசல் விலையை அன்றாடம் தீர்மானிப்பது, சமையல் எரிவாயுக்கான மானியங்களை வெட்டி குறைப்பது, மண்ணெண்ணெய் மானியத்தை குறைப்பது, அனைத்துக்கும் மேலாக ஜி.எஸ்.டி.யை திணித்து அனைத்து பகுதி மக்களது வாழ்வாதாரத்தையும் பறித்துள்ளது.
கடந்த தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதி அடிப்படையில் விவசாய விளை பொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான குழுவின் சிபாரிசு அடிப்படையில் விலை தீர்மானிக்க மறுத்து வருகிறது. பெருமுதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றுள்ள பல லட்சம் கோடி ரூபாய்கள் கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயிகளது கடன்களை தள்ளுபடி செய்திட மறுத்து வருகிறது.
அதே நேரத்தில் மறுபக்கம் மதவெறி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. மாடுகள், ஒட்டகங்கள் உள்ளிட்டவைகளை இறைச்சிக்கு விற்க கூடாது என புதிய விதிகளை உருவாக்கி விவசாயிகளது வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதோடு மறுபக்கம் மாட்டிறைச்சி உணவு உட்கொள்ளும் மக்களின் உணவு உரிமையையும் பறித்துள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அமைப்பினர் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மோசமான வறட்சிக்கு போதிய நிதியினை மத்திய அரசு வழங்கிடவில்லை. காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க மறுத்தது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக மாணவர்களது மருத்துவ படிப்பில் மண்ணைப்போடும் வகையில் நீட் தேர்வை அமல்படுத்தியுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளது. இத்தகைய தமிழக விரோத மத்திய அரசின் நடவடிக்கைகள தட்டிக்கேட்க திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது மட்டுமின்றி மத்திய பாஜக அரசின் ஊதுகுழலாகவே தமிழக அரசு மாறியுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து 2017 ஆகஸ்ட் 18 முதல் 23 வரை தமிழகம் முழுவதும் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை வீடு வீடாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்களாகச் சென்று மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பத்தாயிரம் குழுக்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:33:00
Rating:
No comments: