நூறாவது நாளை எட்டிய கதிராமங்கல போராட்டம்!
கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி.க்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் இன்றுடன்(ஆகஸ்ட்-27) நூறாவது நாளை எட்டியுள்ளது.
மீத்தேன், அணுமின் நிலையங்கள், நியூட்ரினோ, கெயில் உள்ளிட்ட திட்டங்களால் நிலக்கரி, இரும்பு, தாதுமணல் உள்ளிட்ட கனிம வளங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் தங்களது கிராமத்தை காக்க கோரி நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி கதிராமங்கலம் போராட்டம் நூறாவது நாளை எட்டியுள்ளது. தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைத்து ஒஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி விளைநிலத்தில் ஒஎன்ஜிசியால் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால் விளைநிலங்கள், நீர் ஆகியவை பாதிக்கப்படுவதாக கூறி அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓஎன்ஜிசி வெளியேற வேண்டும் என்று இன்று சர்வமத பிரார்த்தனை செய்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில்: காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அப்பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், எரிவாயு உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என்றும் தெரிவித்தனர்.
மேலும், கதிராமங்கலம் மக்களுக்காக போராடி கைதான பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை ஜாமீனில் எடுக்க உதவிய வழக்கறிஞர்களுக்கும், பல்வேறு அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்.
நூறாவது நாளை எட்டிய கதிராமங்கல போராட்டம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:44:00
Rating:
No comments: