அடகில் தமிழக நலன்கள்: ஸ்டாலின்
தமிழக நலன்கள் டெல்லியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வருக்கு அளித்துவந்த தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில், விரைவில் சட்டசபையைக் கூட்டி, முதல்வரை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ஆளுநரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது. தற்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. மேலும் பலர் ஸ்லீப்பர் செல்லாக எடப்பாடி அணியில் உள்ளனர் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் இன்று( ஆகஸ்ட்- 28) கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், 'திராவிட இயக்கத்தை எவராலும் அசைக்க முடியாது. அதிமுக ஆட்சியை நாங்கள் கவிழ்க்க தேவையில்லை. அது தானாகவே கவிழ்ந்துவிடும். தமிழக நலன்களை அதிமுக அரசு டெல்லியில் அடகு வைத்துள்ளது. எங்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமை மீறல் குழு கூடியுள்ளது என்று கூறியுள்ளனர். தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையை ஆதாரத்துடன் எடுத்துக் கூறியது தவறா?.விவசாயிகள் பிரச்னை, மாணவர்கள் பிரச்னை குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. மக்கள் பிரச்னையைப் பற்றி கவலைப்படாமல், ஆட்சியைத் தக்க வைப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். அதிமுக அணிகள் இணைப்பு நடைபெறும் போது ஆளுநர் தமிழகம் வந்தது ஏன்? இணைப்பு நடைபெறும்போது, ஆளுநரை தலைமைச் செயலாளர் சந்தித்தது ஏன்?. முதலமைச்சர் பழனிசாமியையும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தையும், ஆளுநர் கைகோர்த்து சேர்த்து வைத்தது ஏன்?. விரைவில் நல்ல வாய்ப்பு வரும் அதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்' என்று பேசினார்.
அடகில் தமிழக நலன்கள்: ஸ்டாலின்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:33:00
Rating:
No comments: