பாட்னாவில் மக்கள் கடல்! லாலு போட்ட பிள்ளையார் சுழி!
‘பாஜக-வை வெளியேற்றுவோம்... தேசத்தைக் காப்போம்...’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்த, அனைத்துக் கட்சிப் பேரணியில் மக்கள் கூட்டம் கடலெனத் திரண்டு கலந்துகொண்டனர். இந்தப் பேரணி தேசிய அளவில் பாஜக-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான முதல் கூட்டமாகக் கருதப்படுகிறது.
பீகாரில் தற்போது முதலமைச்சராக உள்ள ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவர் நிதிஷ்குமார் கடந்த மாதம் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனான தனது கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இது தேசிய அளவில் பாஜக-வின் முக்கிய அரசியல் சதுரங்க காய் நகர்த்தலாகப் பார்க்கப்பட்டது.
இந்தக் கூட்டணி முறிவுக்கு முன்னதாக, லாலு பிரசாத் யாதவ் பாஜக-வின் மதவாத போக்கைக் கண்டித்து ஒரு மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுத்தார். இந்தப் பேரணியின் முக்கிய முழக்கமே, ‘பாஜக-வை வெளியேற்றுவோம்... தேசத்தைக் காப்போம்...’ என்பதுதான். முதலில் இப்பேரணி ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியின் பேரணியாகக் கருதப்பட்டாலும் இது பாஜக-வுக்கு எதிரான பேரணி என்பதோடு, தேசிய அளவில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 27) பேரணி நடைபெற்றது. மக்கள் கூட்டம் கடல் போல திரண்டன. அதிலும் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடும்படியாக பெரிய அளவில் இருந்தது. இந்தப் பேரணியையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமை வகித்தார். மம்தா பானர்ஜியை, லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி வரவேற்றார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் நிதிஷ்குமாருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கும் சரத் யாதவ் கலந்துகொண்டு பேசுகையில், “நாடு அபாயத்தில் இருக்கிறது. அதனால், நாம் தொடர்ந்து போராட வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற வார்த்தை ஜாலங்களால் இந்தியாவை நிர்வகிக்க முடியாது” என்று பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.
பொதுக்கூட்டத்தில் லாலுபிரசாத் யாதவ் பேசுகையில், “இந்தப் பேரணியில் பங்கேற்றுள்ள கூட்டம் முன்னெப்போதும் இல்லாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நான் இந்த பேரணியிலிருந்து நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். வருகிற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷ்குமாரையும் பாஜக-வையும் தோற்கடித்து வெளியேற்ற உறுதியெடுப்போம்” என்று கூறினார்.
பீகார் மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பீகாரின் துணை முதல்வராக உள்ள பாஜக-வைச் சேர்ந்த சுஷில் மோடி, “ராஷ்டீரிய ஜனதாதளம் இந்த பேரணியை நடத்துவது சரியா? பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், “கடந்த ஆண்டும் பீகாரில் மழையால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. அப்போது வந்து பார்வையிடாத பிரதமர் மோடி, இப்போது ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டது ஏன்? இந்தப் பேரணி மாணவர்கள், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதனால், மக்களுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.
இந்தப் பேரணி பொதுக்கூட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மூவருமே இந்தப் பேரணிக்கு வரவில்லை. ஆனால், பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியின் பதிவு செய்யப்பட்ட வாழ்த்துச் செய்தி பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதேபோல, ராகுல் காந்தியும் பேரணிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.
பேரணியில் கலந்துகொண்டவர்களின் பாதுகாப்புக்காக 5000 போலீஸார் பாட்னா காந்தி மைதானத்தில் குவிக்கப்பட்டனர். 60 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுப் பேரணி கண்காணிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது நாட்டின் உறுதித் தன்மையையும் மக்களின் வாழ்க்கையையும் பாதித்து வருகிறது. மேலும், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இந்துத்துவ சக்திகளின் வன்முறைப் போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் லாலு பிரசாத் யாதவ், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டது தேசிய அளவில் பாஜக-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி தொடக்கத்துக்கு ஒரு பிள்ளையார் சுழியாக அமைந்துள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டம் பெரிய அளவில் கலந்துகொண்டிருந்தாலும், கூட்டம் பற்றி லாலு பிரசாத் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவைப் பதிவிட்டிருந்தார். அது போட்டோஷாப்பில் கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டி அதை வைரலாக்கினார்கள். இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
பாட்னாவில் மக்கள் கடல்! லாலு போட்ட பிள்ளையார் சுழி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:42:00
Rating:
No comments: