கச்சநத்தம் படுகொலை: 4 பேர் மீது குண்டர் சட்டம்!
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் மூன்று தலித்துகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தில் நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஆதிக்க சாதியினர் தலித்துகள் மீது நடத்திய தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, கச்சநத்தம் கிராம மக்கள் மற்றும் தலித் அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொலையாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி நான்கு நாட்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்தப் படுகொலை குறித்து தங்களது கண்டன அறிக்கைகளைப் பதிவு செய்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இயக்குநர்கள் பாரதிராஜா, ரஞ்சித், ராம், அமீர், வெற்றிமாறன் மற்றும் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, படுகொலை செய்யப்பட்ட மூன்று பேரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இறந்தவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி இரங்கல் தெரிவித்திருந்தார்.
பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, படுகொலை செய்யப்பட்ட மூன்று பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சாதி வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும், கச்சநத்தம் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஜூன் 1ஆம் தேதி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும், வழக்கு தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இப்படுகொலைகள் தொடர்பாக நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சுமன், அருண், சந்திரகுமார், அக்னிராஜா ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கச்சநத்தம் படுகொலை: 4 பேர் மீது குண்டர் சட்டம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:17:00
Rating:
No comments: