உலகப் பிரச்சினையாகும் தூத்துக்குடி படுகொலை!
கடந்த மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தமிழக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாகத் தமிழக அரசு நியமித்த ஒரு நபர் விசாரணை கமிஷன், தேசிய மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், இப்பிரச்சினையை ஐ.நா. சபையில் எழுப்பியிருக்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அமர்வுக் கூட்டங்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதை ஒட்டி கடந்த வாரம் ஜெனீவா சென்ற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா.விலும் உலக அரங்கிலும் தூத்துக்குடி படுகொலை பற்றி எழுப்பப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று (ஜூன் 25) ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுக் கூட்டத்தில் தூத்துக்குடி பற்றி பேசினார்.
“இந்திய அரசு தமிழ்நாட்டில் தூத்துக்குடி மக்களின் மீது ஒரு வன்முறையினை ஏவிவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடிவருகிறார்கள். இந்த பெரிய அபாயகரமான ஆலையானது மன்னார் வளைகுடாவிற்கு 15 கி.மீ சுற்றளவிற்கு உள்ளாக உள்ளது. அந்த ஆலையைச் சுற்றி 7 கி.மீக்கு உள்ளாக 2,50,000 மக்கள் வசிக்கிறார்கள்.
அந்த ஆலை வெளிப்படுத்தும் நச்சுக்கள் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 7,00,000 மக்களுக்கு பாதிப்பினை உண்டாக்குகிறது. 2018 இல் அந்த ஆலை விரிவாக்கத்திற்கு முன்வைக்கப்பட்ட போது மக்கள் மீண்டும் போராட ஆரம்பித்தனர். போராட்டத்தின் 100ஆவது நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியாக போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினைக் காவல் துறை நிகழ்த்தியுள்ளது. 17 வயது பள்ளிச் சிறுமி ஸ்நோலின் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட அப்பாவிப் போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர். சீருடையில் இல்லாத நபர்கள் போராட்டக்காரர்களை நோக்கி அவர்களின் உயிரைப் பறிக்கும் நோக்குடன் சுட்டதற்கான காணொளிகள் வெளியாகியுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் அருகிலிருந்து சுடப்பட்டுள்ளனர்’’ என்று சுட்டிக் காட்டியுள்ளார் திருமுருகன்.
மேலும், “காவல் துறை வீடுவீடாகச் சென்று இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாகக் கைது செய்துவருகிறது. தற்போது வரை இப்படியான தேடுதல்களும், கைதுகளும் நடைபெற்றுவருகின்றன. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவை அளித்ததற்கு இதுவரை எந்த அதிகாரிகளும் பொறுப்பேற்கவில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது வரை படுகொலையை நிகழ்த்தியதற்கான பொறுப்பேற்றல் நிகழவில்லை. தூத்துக்குடியின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, மனித உரிமை மீறல்களும், காவல் துறை ஒடுக்குமுறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பதை இந்த ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.வில் மட்டுமல்லாது வரும் ஜூலை 1ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களுடன் சேர்ந்து, ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம்’ ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.
தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், துப்பாக்கிச் சூடு படுகொலைகளுக்கு எதிராகவும் ஐரோப்பிய செயல்பாட்டாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
நேற்று லண்டனில் ஸ்டெர்லைட் அதிபர் வேதாந்தாவை, யோகா சாமியாரான பாபா ராம்தேவ் சந்தித்ததோடு, ‘ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் இந்தியாவுக்கு தேவை’ என்று கருத்து வெளியிட்டு ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதேநேரம் உலக அளவில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கருத்தரங்கங்களும் நடந்துவருகின்றன.
உலகப் பிரச்சினையாகும் தூத்துக்குடி படுகொலை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:26:00
Rating:
No comments: